எவை சமூகப்படங்கள்?
சமூகத்தை சலவை செய்யும் கருத்துக்கள் கொண்ட படம் - இது போன்ற விளம்பரங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தென்படுகின்றன. சேரனின் 'தேசிய கீதம்', 'வெற்றிக்கொடி கட்டு' தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீமானின் 'தம்பி' ஆகியவை இந்த வகையை சேர்ந்தவை. வி. சேகர் சமூக கருத்து தவிர்த்து வேறு ஒன்றையும் திரைப்படமாக்குவதில்லை என்ற கொள்கை வைத்திருப்பவர். வருடந்தோறும் சராசரியாக நூறு திரைப்படங்கள் தமிழில் வெளியானால் அதில் 25 சதவீதம் சமூக அவலங்களை குறிவைத்து எடுக்கப்படுபவை. பெண்களின் பிரச்சனையை அலசும் படம், சமூக சீர்த்திருத்த படம் என்று இவற்றிற்கு தனியாக விருதுகளும் வழங்கப்படுகிறது.
எழுபத்தைந்து வருட வைரவிழாவை கொண்டாடும் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமாவது சமூகத்தை தட்டி எழுப்பியிருக்கிறதா? எந்தவொரு அநியாயத்துக்கு ஏதிராகவாவது மக்களை திரட்டியிருக்கிறதா? மக்களின் நம்பிக்கை எனும் விழிகளை திறக்க உதவியிருக்கிறதா?
இல்லை! இங்கு சமூக சீர்த்திருத்தம் என்பது தனிமனிதன் (ஹீரோ) ஒட்டுமொத்த ஜனங்களை காப்பாற்றும் ஹீரோயிசம். நடைமுறைக்கு எந்த வகையிலும் சாத்தியப்படாதது. உதாரணமாக, சேரனின் 'தேசிய கீதம்' திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். கிராமங்களின் அடிப்படை வசதிகளுக்காக நான்கு இளைஞர்கள் முதல் மந்திரியை கடத்துகிறார்கள். எவ்வித வசதிகளும் அற்ற தங்களது எளிய வாழ்க்கையை அவருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். முதல் மந்திரியும் மனம் திருந்துகிறார்.
நடைமுறை வாழ்வில் முதல் மந்திரிக்கு எதிராக மிரட்டல் மெயில் அனுப்புகிறவர்கள் ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் முதல் மந்திரியை கடத்தினால்.....? வீரப்பன் நிலைமைதான் கடத்தியவர்களுக்கும். தவிர, ஆறரை கோடி ஜனங்களை கொண்ட ஒரு மாநிலத்தின் அடிப்படை வசதிகளை ஒரு தனிமனிதனால் - அது முதல் மந்திரியாகவே இருந்தாலும் பூர்த்தி செய்ய இயலாது. மந்திரி, அதிகாரிகள் தொடங்கி சாதாரண குடிமகன் வரை அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் இது.
'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் வெளிநாடு செல்லாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுகிறார்கள் இளைஞர்கள். எப்படி? வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு சிக்கன் சிக்ஸ்டிபைவ் விற்பனை செய்து!
சோற்றுக்கு வழியில்லாமல் எலியை தின்னும் விவசாயிகளுக்கு சிக்கன் விற்பனை செய்து பணக்காரர்கள் ஆவது நல்ல கற்பனைதான். ஆனால் இது வெறும் கற்பனை மட்டுமே! ஆகவேதான் இது போன்ற சமூக சீர்த்திருத்த படங்கள் சின்ன சலனத்தைகூட தமிழில் ஏற்படுத்துவது இல்லை.
அப்படியானால் உண்மையான சமூக அக்கறை படங்களில் எப்படி வெளிப்படவேண்டும்?
நமக்கு பாடம் நடத்துவதுபோல் வெளியாகியிருக்கிறது ஒரு ஆங்கில விவரணப்படம். பெயர் 'சூப்பர் சைஸ் மீ'. இயக்கியிருப்பவர் மார்கன் ஸ்பெர்லாக்.
திரைப்படம் இயக்குவது என்று முடிவானதும் மார்கனின் மனதில் மின்னலடித்தது, 'மெக் டொனால்ட்ஸ்'. அமெரிக்காவின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனம். கே.எஃப்.சி., வால் மார்ட், ஸ்டார் பக்ஸ், பெப்ஸி, கோக் போன்ற பிரமாண்ட துரித உணவு நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம்விட மிகப்பெரியது மெக் டொனால்ட்ஸ். அமெரிக்கர்களின் உணவு தேவையில் 43 சதவீதத்தை இந்நிறுவனமே பூர்த்தி செய்கிறது.
ஆறு கண்டங்களில் நூறு நாடுகளில் முப்பதாயிரம் ரெஸ்டாரண்டுகளுடன் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நிறுவனம் தினம் 46 மில்லியன் மக்களுக்கு உணவு விநியோகிக்கிறது.
இந்த இடத்தில் அமெரிக்க தயாரிப்புகள் குறித்து ஒரு இடைச்செருகல். மார்பழகை அதிகரிக்கும் சிலிக்கான் சிகிச்சை முதல், ஆண்மையை அதிகரிக்கும் வயாக்ரா வரை அமெரிக்க கண்டுபிடிப்புகள் அனைத்துமே சைடு எபெக்ட் எனும் சைத்தானையும் கூடவே கொண்டு வருபவை. மெக் டொனால்டின் துரித உணவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பேர் அதிக எடையுடன் இருக்கிறார்கள். இதில் 37 சதவீதத்தினர் குழந்தைகள் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கர்களின் அதிக உடல் எடைக்கும் நீரிழவு நோய்க்கும் இதய கோளாறுகளுக்கும் மெக் டொனால்டின் உணவுகள் முக்கிய காரணமாக உள்ளன என்பதை மருத்துவரீதியாக நிரூபிப்பதே மார்கன் திரைப்படத்தின் நோக்கம். இதற்காக தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்தார் மார்கன்.
தொடர்ந்து முப்பது தினங்கள் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ட்ஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே உண்பது மார்கனின் திட்டம். மெக் டொனால்ட்ஸ் மெனு கார்டில் உள்ள அனைத்து உணவுகளையும் முப்பது நாளில் ஒருமுறையாவது எடுத்துக்கொள்வது இன்னொரு விதிமுறை.
திட்டம் தயாரானதும் மருத்துவர்களிடம் தனது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்கிறார் மார்கன் ('சூப்பர் சைஸ் மீ' படத்தில் மார்கன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது முதல் அனைத்தும் இடம்பெறுகிறது; பின்னணியில் மார்கனின் உரையாடலுடன்.)
இந்த பரிசோதனைக்கு ஆறு வாரங்கள் முன்பே ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார் மார்கன். உடலில் ஆல்கஹால் கன்டென்ட் இல்லாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை. பரிசோதனைக்கு முன் இவரது உடல் எடை 84.1 மப.
மார்கன் மருத்துவர்களுடன் நடத்தும் நகைச்சுவையான பேச்சுடன் படம் நகர்கிறது. முப்பது தினங்கள் 20 நகரங்களில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் தினம் மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்கிறார்; குடிக்கிற தண்ணீர் உள்பட.
நாள்கள் நகர நகர,மார்கனின் உடல்நிலை மோசமாவதை பார்வையாளர்களால் உணரமுடிகிறது. ஐந்தாவது நாளே சோர்விலும், உடல் தளர்ச்சியிலும் பாதிக்கப்படுகிறார் மார்கன். உடல் எடையும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. அவரை பரிசோதிக்கும் மருத்துவர், மார்கனின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தி விடும்படியும் எச்சரிக்கிறார்.
ஆனாலும் தொடர்கிறது மார்கனின் பயணம். நடுநடுவே மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான உணவு தயாரிப்போர் ஆகியோருடன் உரையாடி அதையும் திரைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
முப்பது நாள் முடிவில் மார்கனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. இறுதிகட்ட சோதனையில் மார்கனின் உடல் எடை 11.25 மப அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. இதுபோல் சர்க்கரை அளவு 13.5 மபயும், கொழுப்பு 5.5 மபயும் அதிகரித்துள்ளது. மார்கனின் காதலி அலெக்ஸாண்ட்ரா ஜெபிசன், "மார்கன் மெக் டொனால்ட்ஸ் உணவை எடுத்துக்கொண்ட காலத்தில் அவர் மிகவும் சோர்ந்து போயிருப்பதை என்னால் உணரமுடிந்தது. அவரது செக்ஸ் செயல்பாடுகளையும் மெக் டொனால்ட்ஸ் பெருமளவு பாதித்தது" என்று சொல்லும்போது உறைந்து போகிறார்கள் பார்வையாளர்கள்.
நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும் படம் தொண்ணூறு நிமிடங்கள் ஓடி முடியும்போது அனைவரையும் அழுத்தமாக உலுக்கிவிடுகிறது. அமெரிக்காவில் இப்படம் ஏற்படுத்திய பாதிப்பு நம்பமுடியாதது. (காரணம், அமெரிக்காவில் துரித உணவை நம்பியிருப்பவர்களின் விழுக்காடு 40ரூ. இங்கு உணவுக்காக ஒரு மணி நேரத்திற்கு 10,000 பிராணிகள் கொல்லப்படுகின்றன.)
மார்கனின் 'சூப்பர் சைஸ் மீ' வெளியான இரண்டு மாதங்களுக்குள் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
* 'சூப்பர் சைஸ் மீ'யில் காட்டப்பட்ட மெக் டொனால்ட்ஸ் மெனுவில் உள்ள எந்த உணவும் இனி விநியோகிக்கப்பட மாட்டாது.
* ஆரோக்கியமான உணவு விஷயத்தில் தீவிர கவனம் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்பு மார்கனின் படம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு என்பதில் சந்தேகமில்லை. மேலும், தனிமனித சுதந்திரம், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை பேணுவதில் அமெரிக்க சட்டங்கள் பிரசித்தி பெற்றவை. ஜனாதிபதியின் மகள்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு முன் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கறாரானவை. இப்படிப்பட்ட அமெரிக்காவில் அனைத்து உணவகங்களும் டயட்டீஷியன் ரிப்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் பல மெக் டொனால்ட்ஸ் உணவகங்களில் டயட்டீஷியன் ரிப்போர்ட் இல்லை என்பதை தனதுபடம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் மார்கன்.
மார்கனின் இந்த விவரணப்படம் அதன் உள்ளடக்கத்திற்காகவே பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. 'சூப்பல் சைஸ் மீ' வெளியாகி நீண்டகாலம் ஆனபிறகு அதை இங்கு குறிப்பிட இரண்டு காரணங்கள்:
* நடைமுறைக்கு சாத்தியப்படாத கருத்துக்களை திரைப்படங்களில் திணித்து, அவற்றை சமூக கருத்துள்ள படம் என்று இன்றும் நாம் கொண்டாடுவது.
* அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மெக் டொனால்ட்ஸ் விரைவில் தனது கிளையை இந்தியாவில் திறக்க இருப்பது.
பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்பும் கோக்கும், பெப்ஸியும் தாராளமாக இந்தியாவில் வாங்கக்கிடைக்கிறது. இவற்றை வாங்க இந்தியர்களுக்கு எந்த மனத்தடையும் இல்லை.
நமது இந்த 'விழிப்புணர்வின்' பின்னணியில் மெக் டொனால்ட்ஸின் வருகையை எண்ணிப் பார்க்கும்போது, அச்சமே மேலோங்குகிறது.
கூடவே, மார்கன் ஸ்பெர்லாக் போன்றவர்கள் நம்மிடையே இல்லையே என்ற ஏக்கமும்!
ஆக்கம் : ஜான் பாபுராஜ்.
1 Comments:
பொருளாதாரத்தில் வலிமையடைவது மட்டும் நாடு தற்சார்படைவதற்கான வழியல்ல சிந்தனையிலும், சமுதாய பொறுப்புக்களை கவனிப்பதிலும் நாம் முன்னேற வேண்டிய அவசியமுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
Post a Comment
<< Home