Tuesday, January 30, 2007

குரு


இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம்.

தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது.


குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்கிறார். அங்கு தனக்கு தடையாக இருக்கும் சட்டத்தையும், மனிதர்களையும் பணத்தால், அறிவால், பத்திரிகை பலத்தால் சாதகமாக வளைத்தும் உடைத்தும் தனது தொழிலதிபர் கனவை நனவாக்குகிறார். இதன் நடுவே குருபாயின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் பத்திரிகை ஆசிரியர் நானாஜி, குருபாய் தவறான வழியில் செல்கிறார் என தெரிந்ததும் அவருக்கு எதிராக தடயங்களை உருவாக்கி குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தை முடக்குகிறார். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் குருபாய், இறுதியில் தனது ஷேர் ஹோல்டர்களிடம், இந்தியாவிலேயே பெரிய தொழில் நிறுவனமாக நாம் இருந்தால் போதுமா? உலக அளவில் நம்பர் ஒன்றாக வேண்டாமா என கிளர்ச்சியூட்டும் கேள்வியை எழுப்புவதுடன் படம் முடிவடைகிறது.

மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தின் ஹீரோ வேலு நாயக்கரும் குருபாயை ஒத்தவர்தான். இருவருமே கிராமத்திலிருந்து மும்பை வந்தவர்கள். சட்டத்தை மீறியவர்கள். அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள். ஒரே அடிப்படை வித்தியாசம், வேலு நாயக்கரின் வாழ்க்கை குருபாயை போல அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. இன்னொரு வகையில் சொன்னால், வேலு நாயக்கரின் சட்டத்தை மீறிய செயல்கள் அனைத்தும் அவர் விரும்பாமலே சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்மீது திணித்தவை. மாறாக, குருபாய் செய்த சட்டமீறல்கள் அவரது லட்சிய கனவுக்காக அவரே நூறுசதவீத உடன்பாட்டுடன் மேற்கொண்டவை.

'நாயகன்' ஹீரோ தனது சட்டவிரோத நடவடிக்கைகளின் பயனாக தனது நண்பர்களை இழக்கிறார். மனைவி, மகனை பலி கொடுக்கிறார். மகள் பிரிந்து செல்கிறாள். நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் குற்றவுணர்வில் தடுமாறுகிறார். இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இதே தவறுகளை-கொலை நீங்கலாக - செய்யும் குருபாய் எதையும் இழக்கவில்லை. முக்கியமாக, தனது தவறுகளை அவரால் நியாயப்படுத்த முடிகிறது; எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல்!

சட்டமீறல்களை செய்யும் வேலுநாயக்கருக்கு மரணமும் குருபாய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பும் கிடைக்க காரணமென்ன? அரசியல் சட்டமும், சமூக நீதியும் இருவர் காலங்களிலும் வேறு வேறா?

இல்லை! நாயக்கர் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் தாண்டி அரசும் சமூகமும் அவரை குற்றவாளியாகவே மதிப்பிடுகிறது. குருபாய் செய்யும் எல்லா தவறுகளையும் மீறி அவரை அரசும் சமூகமும் தொழிலதிபராக பார்க்கிறது. சரியாக சொல்வதென்றால், சாதாரண ஜனங்கள் சட்டத்தை மீறினால் மட்டுமே குற்றம். அதையே தொழிலதிபர்கள் செய்தால் அது வியாபார தந்திரம், தேசத்தை முன்னேற்றுவதற்காக செய்யப்படும் ஆக்கப்பூர்வமான செயல்! இந்திய சமூகத்தில் இந்த மோசமான பாரபட்சம் அனைத்து தளத்திலும் நீர்க்கமற கலந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியாக இந்த முரணை 'குரு' வில் மணிரத்னம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறாரா என்றால் இல்லை. இந்த முரணை நியாயப்படுத்தும் விதமாகவே உரையாடல், காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார்.

இதன் உச்சமாக குருபாயை இந்த தேசத்தின் உதாரண புருஷனாக முன்னிறுத்துகிறார். படத்தில் குருபாயின் சட்டமீறல்களை நீர்த்துப்போக செய்யும் விதமாக, அவரது குடும்ப விவகாரம் முன்னிறுத்தப்படுகிறது.

சுங்கத்துறையை ஏமாற்றி, உதிரிப் பாகங்கள் என்று சொல்லி ஆறுக்கு பதில் அதிக எண்ணிக்கையில் இயந்திரங்களை இறக்குமதி செய்கிறார் குருபாய். சாதாரண பார்வையாளர்களுக்கு இது உற்பத்தியை அதிகப்படுத்த செய்த செயல்தானே என்று தோன்றும். ஆனால், தவறு! இது பொருளாதார இன் பேலன்ஸை உருவாக்கக் கூடியது. கட்டுமர மீனவர்களுக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் கடலில் தங்கி மீன் பிடிக்க அரசு அனுமதித்துள்ளது. ஆனால், இயந்திர படகு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே அனுமதி. இயந்திர படகு கட்டுமர மீனவர்களின் வாழ்வை விழுங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

ஒரு தனிநபர் மட்டும் குறிப்பிட்ட ஒரு பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்ய அனுமதிப்பது அதே தொழில் செய்யும் போட்டியாளர்களை, பொருளாதார பலம் குறைந்த சிறு முதலாளிகளை பாதிக்கும் செயல். உடலின் கை, கால்கள் சூம்பி கிடக்க தலைமட்டும் பொருத்துக் கொண்டே போனால் எப்படியிருக்கும்? குருபாய் செய்த மோசடி இத்தகையது.
சுங்க மோசடியை தொடர்ந்து குருபாயின் தொழிற்சாலைகள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. இந்த மோசடி வெளிவர காரணமாயிருந்த குருபாயின் நண்பர் குற்றவுணர்வால் கையை அறுத்து தற்கொலைக்கு முயல்கிறார்.

அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார் குருபாய். தனது தொழிற்சாலை மூடுவதற்கு காரணமான நண்பரை செல்லமாக கடிந்து விட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றதற்காக உணர்ச்சி வசப்படுகிறார். அப்பா இறந்தபோதே கண்ணீர் விடாத என்னை அழ வச்சிட்டியே என்கிறார். நானும் உன்கூட சாகட்டுமா என்று கண்கலங்குகிறார்.

இதன்மூலம், குருபாயின் மோசடி பார்வையாளனின் மனதிலிருந்து துடைத்தெறியப்பட்டு மிக நுட்பமாக அவரது நண்பன் மீதுள்ள பாசம் இயக்குனரால் பதிய வைக்கப்படுகிறது.
இப்படி குருபாயின் அனைத்து தவறுகளையும் அவரது குடும்பப் பாசம், நானாஜியின் ஊனமான பேத்தியிடம் காண்பிக்கும் அன்பு இவற்றால் பூசி மெழுகிறார் இயக்குனர்.

கதாபாத்திர படைப்பிலும் இது வெளிப்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்டுகிறார் குருபாய். இதற்கு தானுமொரு காரணமோ என்ற குற்றவுணர்வால் தடுமாறுகிறார், உண்மையை மட்டுமே தனது பத்திரிகையில் அனுமதிக்கும் நானாஜி. மாறாக, சட்டத்தை மீறும் குருபாய் எந்த குற்றவுணர்வாலும் பீடிக்கப்படுவதில்லை. கமிஷன் முன் தலைநிமிர்ந்து தனது தவறுகளை நியாயப்படுத்துகிறார்.

உண்மையின் பக்கம் இருக்கும் கதாபாத்திரம் குற்றவுணர்வு கொள்வதும், தவறுகள் செய்யும் கதாபாத்திரம் தலைநிமிர்ந்து நிற்பதுமான இந்த பாத்திர படைப்பு சிந்திக்க வேண்டிய ஒன்று.

குருபாய் தனது எதிரிகளை ஒழிக்க ஊடகங்களை பயன்படுத்துகிறார். வேலுநாயக்கர் போன்று கத்தி கபடாக்களுடன் எதிரியை உடல்ரீதியாக இவர் காயப்படுத்துவதில்லை. நாயக்கரை ரவுடியாக பார்ப்பதற்கும், குருபாய் போன்ற தொழிலதிபர்களை மதிப்பதற்கும் இந்த வேறுபாடு ஒரு முக்கிய காரணம்.

ஆனால், உடல் ரீதியிலான வன்முறையை விட, ஊடக வன்முறை பயங்கரமானது. எப்படியெனில், உடல்ரீதியிலான வன்முறையில் வன்முறைக்கு உட்படுத்தப்படும் நபரும் அவரைச் சார்ந்தவர்களுமே பாதிக்கப்படுகிறார்கள்.

பத்திரிகை போன்ற ஊடகங்கள் வழியாக குருபாய் போன்றவர்கள் ஒரு பொய்யை பரப்புவது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமின்றி அதனை பார்க்கும், படிக்கும் லட்சக்கணக்கான ஜனங்களையும் முட்டாள்களாக்குகிறது. சிலரின் ஆதாயத்திற்காக ஷேர்களின் விலையை அதிகரிக்கிறது, குறைக்கிறது. மொத்தத்தில் போலியான ஒரு நிஜத்தை, உலகத்தை உருவாக்கி அதனை மற்றவர்கள் நம்பும்படி செய்கிறது.

படத்தின் எந்த இடத்திலும் இந்த ஊடக வன்முறை விமர்சிக்கப்படுவதில்லை. பதிலாக, இந்த வன்முறையை எதிர்க்கும் நானாஜி, தடுமாறுகிறார். இந்த வன்முறையை உருவாக்கும் குருபாய் உதாரண புருஷனாக்கப்படுகிறார்.

படத்தின் இறுதி காட்சியில் விசாரணை கமிஷன் முன் குருபாய் ஆவேசமாக பேசுகிறார். தான் செய்த அனைத்து சட்டமீறல்களும் தேசத்தை முன்னேற்ற செய்தவை என மறைமுகமாக குறிப்பிட்டு வாதிடுகிறார்.

அவரது பேச்சில் அடிக்கடி இடம் பெறும் இரு வார்த்தைகள், நீங்கள் மற்றும் நாங்கள்! இதில் நாங்கள் என்பது குருபாயும் அவரது சில ஆயிரம் (அல்லது சில லட்சம்) பங்குதாரர்களும். அப்படியானால் நீங்கள்? விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தில் பங்கு தாரராக இல்லாத மற்ற அனைவரும்! தனது தொழில் அபிவிருத்திக்கு தடையாக வருமான வரி, சுங்க இலாகா உள்ளிட்ட எந்த துறையின் சட்டங்களும் இருக்கலாகாது என்பது குருபாயின் வாதம். சுருக்கமாக, கட்டுப்பாடற்ற ஒரு ராஜாவாக தான் இருக்க வேண்டும்! இதை தடைசெய்யும் எதையும் குருபாய் பணிந்தோ துணிந்தோ உடைப்பார்.

அதுக்காக நீங்கள் கமிஷன் போட்டு அவரை கேள்வி கேட்கக் கூடாது. மாறாக கட்டுப்பாடற்ற சலுகைகளை அள்ளிவீச வேண்டும். ஏனெனில், குருபாய் பறக்க விரும்புகிறவர். தனது பங்குதாரர்களையும் சுமந்து கொண்டு உலகின் நம்பர் ஒன் எல்லையை நோக்கி அவர் பறந்தாக வேண்டும்!

சில தொழிலதிபர்களுக்காக இப்படி சட்டத்தை வளைப்பது சரியா? இது அவரைச் சாராத கோடிக்கணக்கான ஜனங்களை வஞ்சிப்பது ஆகாதா?

ஆகாது! குருபாயின் துரதிர்ஷ்டம், அவர் விசாராணை கமிஷன் முன் வாதாடியது 1980-களில். இதுவே 2006 என்றால், அதற்கு அவசியமே இருந்திருக்காது. அரசே அவர் கேட்டவற்றை 'சிறப்பு பொருளாதார மண்டலம்' என்ற பெயரில் சட்டம் போட்டு செயல்படுத்தி கொடுத்திருக்கும்.

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய உள்ளன. இதற்கான பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அந்தந்த மாநில அரசுகளே கையகப்படுத்தி தரும் (உதாரணம், மே. வங்கத்தில் தொடங்கப்பட்டுள்ள சிங்குர் டாடா கார் தொழிற்சாலை). இந்த பொருளாதார மண்டலங்களால் அரசுக்கு வரி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்யும் எந்த தொழிலுக்கும் 15 வருடங்களுக்கு வரியே கிடையாது. சரி, நாமும் முதலீடு செய்யலாம் என்றால் அதற்கும் வழியில்லை.

குருபாய் போன்றவர்களுக்கே அதற்கு அனுமதி. காரணம், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் குறைந்தபட்ச முதலீடே 250 கோடிகள். சரி, அங்கு வேலை செய்யலாம் என்றால் அதுவும் சுலபமல்ல. வேலையில் சேர்ந்தபின் எட்டுமணி நேரம்தான் வேலை செய்வேன், போனஸ், பி.எப்., ஈ.எஸ்.ஐ., எல்லாம் வேண்டும் என்று கேட்க முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்திய அரசின் எந்த தொழிலாளர் சட்டங்களும் செல்லுபடியாகாது. ஏன், மாநில அரசுக்கே அங்கு அதிகாரம் செலுத்த முடியாது. மொத்தத்தில் 'பாரின் டெரிட்டரி' என்ற அந்தஸ்துடன் இவை செயல்படும் என இதற்கான ஆணை சொல்கிறது. சுருக்கமாக இதனை சுதந்திர இந்தியாவின் நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் எனலாம்.

ஒடுக்கப்பட்டவர்களை, விவசாயிகளை, சிறு தொழில் செய்பவர்களை சுரண்டி ஒரேயடியாக அழிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முன்னோடி குரலே குருபாய்.

குருபாயை நியாயப்படுத்தி அவரை தலைவராக காட்டியிருப்பதன் மூலம் ஊடக வன்முறை, தொழிலதிபர்கள் சட்டத்தை மீறுவதற்கான உரிமை போன்ற நாசக்கார நடைமுறைக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார் மணிரத்னம்.

படத்தை பொறுத்தவரை ஒரே ஆறுதல், படம் தமிழகத்தில் சரியாக போகவில்லை என்பது மட்டுமே!


ஆக்கம்
ஜான்பாபுராஜ்







2 Comments:

Blogger அருள் குமார் said...

நல்லதொரு ஆய்வு. நிரைய கோணங்களில் யோசிக்கத் தூண்டியது. நன்றி!

10:06 PM  
Blogger Vi said...

எனக்கு அந்த கடேசி வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது.

நல்ல விமர்சனம் அளிக்கும் ஜா.பா. அவர்களுக்கு நன்றி.

போய் சேர வேண்டிய இடத்திற்கு காலம் வரும் போது, இது போய் சேரும் என்று நம்புங்கள்.

ஒரு விமர்சகம் சரியான திரை விமர்சனத்தை அளிக்க மெனக்கெடும் அளவிற்கு கூட, இயக்குனர்கள் அடிப்படையில் கதைக்காக மெனக்கெடுவதில்லை.

ஆனால் மாதக்கணக்கில் பல நாடுகளுக்குச் சென்று கதை விவாதம் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்களோ? அவர்களைச் சொல்லி என்ன செய்ய!

அது சரி! ஐயா! ஜா.பா.! உங்களை கதை விவாதக் குழுவில் சேர்த்தால் நீங்கள் இதெல்லாம் ஆலோசிப்பீர்களா?

8:28 AM  

Post a Comment

<< Home