Tuesday, August 29, 2006

"பெரியார்"


லிபர்டி கிரியேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 'பெரியார்' திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் ஞானராஜ சேகரன். இவர் ஏற்கனவே 'மோகமுள்', 'பாரதி' திரைப்படங்களை இயக்கியவர். பாரதி என்ற கவிஞனின் தார்மீக எழுச்சி கொண்ட பிம்பத்தை திரையில் கொண்டு வந்ததும், பரவலான மக்களை 'பாரதி' திரைப்படம் சென்றடைந்ததும் தமிழ் சூழலில் 'பெரியார்' படம் குறித்த பிரத்யேக கவனத்தை உருவாக்கியிருக்கிறது. பெரியாரின் சீடராக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தும் திரைப்பட நடிகர் சத்யராஜ், பெரியார் வேடம் ஏற்றிருப்பதும், ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு 'பெரியார்' திரைப்படத்திற்கு 95 லட்சங்கள் மானியம் அளித்ததும் 'பெரியார்' படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

ரவுடி, தாதா படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் தமிழ் சூழலில் பாரதி, பெரியார் போன்ற நிஜக் கதாநாயகர்களின் படங்கள் வருவது ஆரோக்கியமானது என்கிறார் ஞானராஜ சேகரன். 'பாரதி' திரையிடலின்போது, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கிளம்பிய, "அடுத்து பெரியார் பற்றிய திரைப்படத்தை எடுங்கள்" என்ற கோரிக்கையே 'பெரியார்' படம் எடுக்க துவக்கப்புள்ளியாக இருந்தது என மேலும் இவர் கூறுகிறார்.

பெரியாரின் கதையை படமாக்குவது என்று தீர்மானமானதும் பெரியார் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் சேகரிக்கத் தொடங்கினார் ஞானராஜ சேகரன். இதற்கு இவருக்கான காலம், ஏறத்தாழ ஒரு வருடம்! பிறகு, படத்திற்கான திரைக்கதை. இதற்கு மூன்று வருடங்கள் செலவானது.

இந்த கால கட்டத்தில் பெரியார் திடலில் பேசிய சத்யராஜ், பெரியார் கதையை படமாக எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் என்று அறிவித்தார். "மேலும், சத்யராஜ் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறவர். பெரியாரின் தோற்றம் இயல்பாக சத்யராஜுக்கு பொருந்தியதால் அவரையே பெரியாராக நடிக்க வைப்பது என தீர்மானித்தேன்."
'பெரியார்' படத்தின் கதை 1900-ல் ஆரம்பமாகிறது. இளமைக்கால பெரியாரிலிருந்து அவரது இறப்புவரை தொடர்கிறது படம். பல்வேறு காலகட்டங்களை கடந்து கதை பயணிப்பதால் அதை வெளிப்படுத்தும் பத்து வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார் சத்யராஜ்.

காந்தி, ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, அம்பேத்கார் போன்றவர்களுடன் பெரியார் உரையாடும் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது. காசி சென்று மொட்டை போட்டது, ஈரோடு முனிசிபல் கவுன்சிலராக பணிபுரிந்தது, மனைவி நாகம்மையின் மறைவு, ஏதென்ஸ் சென்றிருந்தபோது சாக்ரடீஸின் சிலையின் முன்பு நின்று, அவரைப் போல தானுமொரு சமூக சீர்த்திருத்தவாதி என அறிவித்தது, வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் என பெரியார் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

கதை நிகழும் காலகட்டம் தார் ரோடும், மின்சாரமும் இல்லாத காலம். இதற்காக, மின்சார கம்பிகளை இலைதழைகளை கொண்டு மறைத்தும் தார் ரோட்டை மண்ணால் மூடியும் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், இசையை வித்யாசாகரும், பாடல்களை வைரமுத்துவும், கலையை ஜி.கே. யும் கவனிக்கின்றனர்.

பொறுப்புடனும் அதீத கவனத்துடனும் 'பெரியார்' திரைப்படம் உருவாகிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், இப்படம் உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் படக்குழு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் ஐயமுள்ளது.

காரைக்குடி, கொத்தமங்கலம், கானாடு காத்தான், வைக்கம், காசி முதலிய இடங்களுடன் ஏதென்ஸ், ஜெர்மனி, லண்டன், மாஸ்கோ, மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

உள்ளூரில் அன்றைய காலகட்டத்தை உருவாக்க மின்சார கம்பிகளை மறைத்தும் தார் ரோடுகளை மண்ணால் மூடியும் சமாளிக்க முடியும். வெளிநாடுகளில் இதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? இன்றுள்ள பிரமாண்ட கட்டிடங்களை மறைப்பதெப்படி? அன்றைய காலகட்டத்தை உருவாக்குவது எங்ஙனம்?

'பாரதி' திரைப்படம் தமிழ் சூழலில் கவனம் பெற முக்கிய காரணம் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே. தமிழ் சமூக மனதில் பதிவாகியிருந்த பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பாரதியின் பிம்பத்தை தனது அற்புதமான உடல்மொழியால் திரையில் உலவவிட்டார் ஷிண்டே. இவரது முகமும், உடல் மொழியும், மேனரிஸங்களும் தமிழ் பார்வையாளர்கள் அதுவரை அறியாதது. ஆகையால், சாயாஜி ஷிண்டேயின் நடிப்பில் அவர்கள் முழுக்க பாரதியையே கண்டனர்.

மாறாக, பெரியாராக நடிக்கும் சத்யராஜ் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சமூகத்துக்கு நன்கு பரிட்சயமானவர். அவரது முகமும், பேச்சும், பேச்சுத் தோரணையும், மேனரிஸங்களும், உடல்மொழியும் தமிழர்களுக்கு அணுக்கமானவை. பெரியார் வேடத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் சத்யராஜ் என்ற நடிகரே துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறார். இது பெரியார் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்றுவதற்கு மிகப் பெரிய தடை.

இந்த சவாலை ஞானராஜ சேகரனும், சத்யராஜும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? தனது அடையாளங்களை முற்றிலும் களைந்து, பெரியாரை பெரியாராக திரையில் வெளிப்படுத்த இயலுமா சத்யராஜால்?

பெரியர் பிரமாணர்களின் சாதி கட்டுமானத்தை எதிர்த்த அளவுக்கு மற்ற சாதி இந்துக்களின் ஆதிக்கதை எதிர்க்கவில்லை. குறிப்பாக தலித்துகளை கொடுமைப்படுத்திய பிராமணர் அல்லாத சாதியினரை விமர்சித்ததில்லை. ஆகவே, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற குரல்கள் பரவலாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. முக்கியமாக, அரசியல் விமர்சகரும், எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் இந்தக் கருத்தை தொடர்ந்து வலிவுறுத்தி வருகிறார். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் மீது துவேஷம் பாராட்டியதுடன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தான் நடத்தி வந்த இதழ்களில் எழுதியிருக்கிறார் பெரியார் என ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார்.

பெரியாரை விமர்சனத்துக்குட்படுத்தும் இந்தக் கருத்துக்களுக்கு ஆதாரமான பெரியாரின் செயல்பாடுகள் ஞானராஜ சேகரனின் 'பெரியார்' படத்தில் இடம் பெறுமா?

பாரதி கஞ்சா பழக்கத்திற்கு சிறிது காலம் பழகியிருந்தார் என்பது வரலாறு. 'பாரதி' படத்தில், "இந்தப் புதிய பழக்கம்வேறு என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது" என்று பாரதி கஞ்சா பழக்கத்தை மறைமுகமாக குறிப்பிடும் வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு வரி வசனத்திற்கே ஞானராஜ சேகரனை குறை கூறியவர்கள் ஏராளம். பாரதியின் கஞ்சா பழக்கத்தை காட்சியாக அமைக்காமல், ஒருவரி வசனமாக்கி பாரதியின் 'புனிதத்தை' காத்ததற்காக ஞானராஜ சேகரனை பாராட்டிய பத்திரிகைகளும் உண்டு. பாரதி கஞ்சா பிடித்தார் என்ற வரலாற்று உண்மையினால் பாரதியின் கவிதைகளின் வீரியம் குறைந்து விடப்போவதில்லை என்பதை உணராதவர்கள் இவர்கள். இந்த முன் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் எதுவும் 'பெரியார்' படத்தில் இடம்பெறாது என்பது திண்ணம்.

தனது கருத்துக்களுக்கு எதிரானவர்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொண்டவர் பெரியார். அவர்களை பேச அனுமதித்ததுடன், அவர்கள் பேச்சால் மனவருத்தம் அடைந்த தனது இயக்கத் தோழர்களை, "நாம் எத்தனை பேரின் மனம் புண்படும்படி பேசியிருக்கிறோம். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் வருத்தப்படக்கூடாது" என அறிவுரை கூறியவர் பெரியார்.

மேலும், "நான் சொல்கிறேன் என்பதற்காக ஒன்றை அப்படியே ஏற்றுக்கொண்டால் அது முட்டாள்த்தனம். நான் சொல்வது உனக்கு பொருந்துமா என்று உன் பகுத்தறிவை கொண்டு யோசித்து முடிவெடு. அதே போல இன்று பகுத்தறிவுக்கு உள்பட்டு இருப்பது நாளை அப்படி இல்லாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்." இப்படி பரந்த தளத்தில் தனது கருத்துக்களையே விமர்சனத்துக்கு உள்படுத்திய மாபெரும் சிந்தனையாளர் பெரியார். அவரது இயக்கமான திராவிடக் கழகத்தினர் இதே பரந்த மனப்பான்மை உடையவர்களா?

ஜெர்மனி சென்றபோது அங்குள்ள நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அதனை பத்திரிகைளில் பிரசுரிக்கவும் அனுமதித்தவர் பெரியார். ஆனால் தி.க.வினர்?

சமீபத்தில் புதுச்சேரி வந்த சமண திகம்பர சாதுக்களால் (திகம்பரர்கள் சமணத்தில் ஒரு பிரிவினர். கொல்லாமையை கடைப்பிடிப்பவர்கள். சிறு உயிர்களுக்கும் தீங்கிழைக்காதவர்கள். பற்றற்றவர்கள். அதன் அடையாளமாக ஆடைகளை துறந்து நிர்வாணமாக சஞ்சரிப்பவர்கள்.) தமிழ் கலாசாரம் கெட்டுவிட்டதாகக் கூறி, சாதுக்களை புதுச்சேரியை விட்டு துரத்தும்வரை போராட்டம் நடத்தியவர்களில் முன்னிலையில் நின்றவர்கள் தி.க.வினர்.

இந்த முரண், பெரியார் குறித்த விமர்சனத்தை, அவர் வாழ்வு குறித்த சில உண்மைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்வதற்கு தடையாக இருக்கக்கூடும். இதனை எப்படி கடக்கப் போகிறார் ஞானராஜ சேகரன்?

இந்திய தத்துவ மரபின் நீட்சி பெரியார்! பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருக்கொண்ட பொருள் முதல்வாதத்தை,வேதகாலத்திலேயே தங்கள் செயல்பாடுகளின் வழியாக வெளிப்படுத்தியவர்கள் சாவாகர்கள். வேதகால ஆரியர்களின் வைதீகங்களுக்கு எதிராக ஆன்மா, கடவுள், மறுபிறப்பு, சொர்க்கம் ஆகிய அனைத்தையும் மறுத்து, யாவும் ஜடப்பொருளே என நிறுவியவர்கள் சாவாகர்கள்.இவர்களுக்குப்பின் வந்த சாங்கிய தத்துவத்தை பின்பற்றியவர்களும், அவைதீகர்களான சமணர், பவுத்தர், தமிழக சித்தர்கள் என அனைவரும் சிறிதும் பெரிதுமாக சாவாகர்களின் கொள்கையையே பிரதிபலித்தனர்.

ஆனால், காலப்போக்கில் ஆதிசங்கரர் போன்றவர்களால் கடவுள், மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றை மறுதலித்த இந்த தத்துவங்களெல்லாம் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. நாகார்ஜூனர், திங்கநாதர் போன்ற ஆரியர்கள் பெளத்தத்தில் இணைந்து, புத்தரை பின்பற்றுகிறவர்களை ஹீனயானர்கள் என்று பின்னுக்கு தள்ளியதுடன், இயற்கை மற்றும் பவுதிக பொருள்கள் குறித்த அறிவுப்பூர்வமான அணுக்கொள்கையையும் மறுத்தனர். அதே நேரம் பௌத்தத்திற்குள்ளேயே மறுபிறப்பு, கடவுள் ஆகியவற்றை ஒத்துக்கொண்டு மஹாயானம் என்ற பிரிவை உருவாக்கியதுடன் பௌத்தத்தை பிளவுப்படுத்தி வைதீக வரைமுறைக்குள் கொண்டுவந்தனர்.

அவைதீக தத்துவமான சமணம் மற்றும் பௌத்தத்தின் கூறுகளை பெரியாரிடத்திலும் காணலாம். பல் துலக்குவது, குளிப்பது ஆகியவற்றில் பெரியார் காட்டிவந்த அலட்சியமும் ஜெர்மனியில் அவர் நிர்வாண கிளப்பில் உறுப்பினரானதும் சமண திகம்பரக் கூறாகவே கருதப்படுகிறது.

மேலும், 15-05-1957-ல் எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த புத்தர் விழாவில் தலைமையுரையாற்றியிருக்கிறார் பெரியார். ஈரோட்டில் புத்தர் மாநாடுகள் அவர் காலத்தில் நடத்தப்பட்டன. அண்ணாவுடன் சாரநாத்திலுள்ள புத்தர் கோட்டத்திற்கு சென்று வந்துள்ளார் பெரியார்.

இதற்கெல்லாம் மேலாக, புத்தருக்கும் அவர் கொள்கைகளுக்கும் ஏற்பட்ட நிலைமை நமக்கும் நம் இயக்கத்திற்கும் வரக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள் என தனது இயக்கத் தோழர்களை எச்சரித்தும் இருக்கிறார் பெரியார்.

சாங்கியம், பௌத்தம், சமணம், நியாயம், மீமாம்சம் போன்ற அவைதீக தத்துவங்கள் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போக, பெரியாரோ கடவுள் மறுப்புடன், பெண்ணடிமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என சமூக செயல்பாடுகளை இணைத்து வைதீகத்துக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக தி.க.வை கட்டியெழுப்பினார். தி.க.விலிருந்து பிரிந்தவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று திரிந்து போனாலும், வைதீகத்தால் தொடமுடியாத உக்கிரத்துடன்தான் இன்றும் இருக்கிறது பெரியாரின் கொள்கையும் அவரது இயக்கமும். அந்தவகையில் இந்திய தத்துவ மரபின் மிகப்பெரிய ஆளுமை பெரியார்.

பெரியாரின் இந்த சாராம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தால் மட்டுமே பெரியார் குறித்த எந்த திரைப்படமும் முழுமையடையும்!
ஆக்கம் : ஜான்பாபுராஜ்

9 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

நன்றாக எழுதியிருக்கிறார் ஜான்பாபுராஜ்.
படத்தினைப் பற்றிய உருவ ரீதியான எதிர்பார்ப்புகள் சிதையக்கூடியது சாத்தியமென்றாலும் கருத்தளவில் பாரதி/மோகமுள்ளைப்போலவே இதுவும் ஒரு நல்ல படமாக அமையுமென்றே கருதுகிறேன். குழுவுக்கு நம் வாழ்த்துக்கள்!

6:42 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

அந்தவகையில் இந்திய தத்துவ மரபின் மிகப்பெரிய ஆளுமை பெரியார்.

:-) !!!

6:44 AM  
Blogger Darren said...

very nice.

7:26 AM  
Blogger thiru said...

நண்பரே அருமையான ஆய்வு கண்ணோட்டத்துடனான பதிவு இது. வாழ்த்துக்கள்!

//பெரியர் பிரமாணர்களின் சாதி கட்டுமானத்தை எதிர்த்த அளவுக்கு மற்ற சாதி இந்துக்களின் ஆதிக்கதை எதிர்க்கவில்லை. குறிப்பாக தலித்துகளை கொடுமைப்படுத்திய பிராமணர் அல்லாத சாதியினரை விமர்சித்ததில்லை. ஆகவே, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற குரல்கள் பரவலாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. முக்கியமாக, அரசியல் விமர்சகரும், எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் இந்தக் கருத்தை தொடர்ந்து வலிவுறுத்தி வருகிறார்.//

ரவிகுமாருக்கு முன்னால் (சுமார் 17 வருடங்களுக்கு முன்னரே)பெங்களூர் குணா இந்த கருத்தை முன் வைத்தார். இந்த பார்வை சரிவர புரியாததன் வெளிப்பாடான அபத்தமான் பார்வை என சமூகவியலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பெரியாரையும் அவரது போராட்ட வாழ்வையும் அவரது காலத்தில் இருந்த சூழலையும் அதை அதிகாரத்தில் வைத்திருந்த அடக்குமுறை கருத்தியலான பார்ப்பனீயம் என்ற பார்வையில் பார்க்கும் வேளை பெரியார் தலித் விடுதலைக்கு பாடுபடவில்லை என பிரிப்பது தன் வீட்டு கூரையில் தீவைப்பதாகும். அன்று பெரியார் எழுந்ததால் தான் இன்று இந்த அளவிற்காவது இந்தியாவில் சமூகநீதி பற்றி பேச, போராடி உரிமை பெற முடிகிறது. சமூகநீதிக்கான இடஒதுக்கீடு வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்திய அரசியல் சட்ட பகுதியை நீக்க பார்ப்பனர்கள் வழக்கு தொடுத்ததும், பார்ப்பனீய மயமான நீதிமன்றம் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதை கண்ட பெரியார் கிளர்ந்தெழுந்தார், களம் கண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு இன்று கிடைக்க காரணமான அரசியல் சட்டத்தின் அடைப்படை திருத்தம் செய்ய பெரியாரின் போராட்டம் காரணமனது என்பது வரலாறு.

//கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் மீது துவேஷம் பாராட்டியதுடன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தான் நடத்தி வந்த இதழ்களில் எழுதியிருக்கிறார் பெரியார் என ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார்//

மதம் மனிதனை சிந்திக்கவிடாமல் அடிமையாக்குகிறது என்பதும், மதத்தை பயன்படுத்தி சிலர் உண்டு கொழுத்து மக்களை ஏமாற்றுவதையும் எதிர்த்தவர் பெரியார். அவர் கடவுள் மறுப்பாளர், அவரது பார்வையில் கிறித்தவம், இஸ்லாம், இந்து என்பதல்ல. அறிவுக்கருத்துக்களுக்கு எதிரான அடிமைத்தனத்தை எதிர்த்தார். அதனால் தான் அவர் பெரியார்.

3:27 PM  
Blogger Vi said...

//மதம் மனிதனை சிந்திக்கவிடாமல் அடிமையாக்குகிறது//

மதம் தான் மனிதனைச் சிந்திக்கச் செய்கிறது. தான் யார் என்பதை அறியச் செய்கிறது. மனிதனின் தத்துவார்த்தமான சிந்தனைக்கு ஆரம்பமாக இருப்பது மதம். அதை சீர்படுத்த வேண்டும், சீர்கெட்டதைச் சிதைக்க வேண்டும், சீர்கெடச் செய்தவர்களை எதிர்க்க வேண்டும் என்பதே பெரியாரின் முயற்சியாய் இருந்ததாய் நான் எண்ணுகிறேன்.

2:57 AM  
Anonymous Anonymous said...

ஞான ராஜசேகரனின் பாரதி படம் பலரால் வரவேற்கப்பட்டாலும் பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானது. பாரதி ஒரு தேசியவாதி என்ற கருத்தை மறைத்து அவர் ஒரு இடதுசாரியாகவே அந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தார். ஞான ராஜசேகரன் தற்போது இயக்கி வரும் பெரியார் படமும் வெலியான பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகும் என்பது என் கருத்து. பூனைக் குட்டி வெளியே வரும் வரை காத்திருப்போம்.

11:50 PM  
Anonymous Anonymous said...

படம் வரட்டும் பார்க்கலாம்

11:52 PM  
Blogger PRINCENRSAMA said...

1)
//பெரியாரின் இந்த சாராம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தால் மட்டுமே பெரியார் குறித்த எந்த திரைப்படமும் முழுமையடையும்!//

பன்முகமும், பல்வேறு பரிணாமங்களும், பரிமாணங்களும் அமைந்தது பெரியாரின் வாழ்க்கை. அதை எந்தத் திரைப்படமும் முழுமையாகக் காட்ட முடியாது. நேர அளவின் காரணமாக மட்டுமல்ல, அவருடைய எழுத்தும் பேச்சும் இதை தெளிவுபடுத்தும். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை தன் எழுத்து, பேச்சுகளிலேயே பதிந்து விட்டுப் போயிருக்கிறார். அவருடைய பல்துறை ஆர்வம், ஆளுமை... இவற்றையெல்லாம் ஓரிரு படத்தில் முழுமையாக்க முடியாது- தாங்கள் கூறியிருப்பது போல.
இது ஒரு முதல் முயற்சியே.. 95 ஆண்டுகால வாழ்வை 150 நிமிடங்களுக்குள் அடக்க முடியாது. அதிலும் ஒரு நூற்றாண்டின் அரசியல் சமூக சூழலே இவரைத் தவிர்த்து இல்லை எனும்போது அது சாத்தியப்படாது.

2)பெரியார் நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, நிர்வாணமாக நின்றதையும், நிர்வாண சாமியார்கள் சாலையில் சென்றதையும் எப்படி ஒன்றாகக் கருதமுடியும். தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில், நிர்வாணமாக இருப்போர் தவிர மற்றோர் நுழைய முடியாத இடத்தில், இன்னும் சுருக்கமாக... தனியிடத்தில் (வீட்டைப் போலவும், உங்கள் தோட்டத்தைப் போலவும்) இருப்பதற்கும், பொதுவிடத்தில் செல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

8:18 AM  
Anonymous Anonymous said...

பெரியாரின் வாழ்க்கையை ஓரிரு படங்களுக்குள் அடக்கிவிட முடியாது. இது ஒரு தொடக்கமாக இருக்க்ட்டும்.


பெரியார் நிர்வாண சங்க உறுப்பினராகி, நிர்வாணமாக நின்றதையும், நிர்வாண சாமியார்களையும் எப்படி ஒன்றாக கருத முடியும்.

நிர்வாண சங்க இடத்தில், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில், இன்னும் சொல்லப்போனால் தனியிடத்தில் நிற்பதற்கும், பொது இடத்தில், சாலையில் நிர்வாணமகத் திரிவதற்கும் வேறுபாடு இல்லையா? இவற்றை எப்படி நீங்கள் ஒப்புக்கொள்ள முடியும். இரண்டுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் தி.க.வினர் செய்தது சரியே என்று புரியும்.

10:07 AM  

Post a Comment

<< Home