Friday, September 29, 2006

'16 பிளாக்ஸ்'


ஆக்ஷ்ன் திரைப்படங்களுக்கு வருடக்கணக்கில் நீளும் கதை தேவையில்லை. சில நாள்கள் அல்லது சில மணிநேர நிகழ்வுகளே போதுமானது. சில்வஸ்டர் ஸ்டாலோனின் 'பர்ஸ்ட் ப்ளட்', கினு ரீவ்ஸ் நடித்த 'ஸ்பீடு', புரூஸ் வில்லிஸின் 'டை கார்ட்' மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த 'செல்லுலார்' அதற்குமுன் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்த 'போன்பூத்' ஆகியவை இந்த வகையை சேர்ந்தவை. இதில் புதிதாக சேர்ந்திருக்கும் படம் Richard Donner இயக்கியிருக்கும் '16 பிளாக்ஸ்' (16 Blocks).


காலை எட்டு மணியவில் நியூயார்க் சிட்டி போலீஸான ஜாக் மோஸ்லியிடம் (Jack Mosley) பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படுகிறது. கிரிமினல் குற்றவாளி ஒருவனை 16 பிளாக்குகள் தள்ளியிருக்கும் நீதிமன்றத்தில் காலை பத்து மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்தப் பணி ஜாக் மோஸ்லியிடம் ஒப்படைக்கப்படும் போது அவருக்கு 118 நிமிடங்கள் கால அவகாசம் இருக்கிறது.

எளிமையான இந்தப் பணியை ஜாக் மோஸ்லியால் நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்ற ஒற்றை கேள்விக்குள் பரபரப்பான 104 நிமிட படமொன்றை தந்திருக்கிறார் Richard Donner. படத்தின் முதல் மற்றும் இறுதி ஐந்து நிமிடங்கள் தவிர்த்து, முழுப்படமும் 118 நிமிட நிகழ்வுகளை மட்டும் சொல்வது இப்படத்தின் முக்கிய சுவாரஸ்யம்.

போலீஸ் அதிகாரி ஜாக் மோஸ்லி வயதானவர். ஒரு காலில் சிறிது ஊனம் கொண்டவர். சோர்வான பெரும் குடிகாரர். சிக்கலான அந்தக் கேரக்டரை அனாயசமாக செய்திருக்கிறார் புரூஸ் வில்லிஸ். 'மெர்க்குரி ரைஸிங்' படத்தில் இதேபோன்று போதையில் இருக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தை வில்லிஸ் செய்திருந்தாலும் ஜாக் மோஸ்லி கேரக்டர் விசேஷம்!

கிரிமினல் குற்றவாளி Eddie Bunker கேரக்டரில் நடித்திருப்பவர் Mos Def. சதா பேசிக் கொண்டிருக்கும் Eddie Bunker கேரக்டர் (Rush Hour படத்தில் கிரிஸ் தக்கர் (Chris Tucker) பேசுவதுபோல் லொட லொட பேச்சல்ல இது.) படத்திற்கு பெரிய ரிலீப்.

படத்தின் கதையை எழுதியிருப்பவர் ரிச்சர்ட் வெங்க். (Richard Wenk) புரூஸ் வில்லிஸ் Mos Def-ஐ நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் Mos Def-ஐ கொலை செய்ய முயல்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து பார் ஒன்றில் ஒளியும் வில்லிஸ் தனது போலீஸ் சகாக்களுக்கு போன் செய்கிறார். அவர்கள் பாருக்கு வந்ததும் அதிர்ச்சி ஆரம்பமாகிறது.

குற்றவாளியான Mos Def ஒரு க்ரைமின் ஐ விட்னசும் கூட. அந்த க்ரைமை நடத்தியவர்கள் வில்லிஸின் சகாக்களான போலீஸ் அதிகாரிகள். Mos Def சாட்சி சொன்னால் அது தங்களுக்கு பாதகமாக அமையும் என அவரை கொலை செய்ய கொலையாளிகளை ஏற்பாடு செய்ததே அவர்கள்தான். பாரில் Mos Def யையும், புரூஸ் வில்லிஸையும் பார்க்கும் சகாக்களில் ஒருவரான Frank Nugent (David morse) புரூஸ் வில்லிஸிடம் அங்கிருந்து போய் விடும்படி கூறுகிறார். மேலும், கொலையாளிகளிடம் இருந்து தப்பித்த Mos Def, புரூஸ் வில்லிஸை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தாங்கள் வந்து Mos Def ஐ சுட்டுக் கொன்று புரூஸ் வில்லிஸை விடுவித்ததாகவும் கதை ஜோடிக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இதற்கு உடன்படாத வில்லிஸ் தனது சக அதிகாரியை சுட்டுவிட்டு Mos Def யுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.

சுற்றிலும் போலீஸ் நெருங்க, அவர்களிடமிருந்து தப்பிக்க புரூஸ் வில்லிஸ் பேருந்து பயணிகளை பணயக் கைதிகளாக பிடிக்க நேரிடுகிறது. பேருந்திலிருந்து தப்பிக்கையில் Mos Def மீது குண்டு பாய்கிறது. இருந்தும் போலீஸிடம் சிக்காமல் Mos Def ஐ சியாட்டிலுக்கு தப்பித்துப் போக உதவுகிறார் புரூஸ் வில்லிஸ். இறுதியில் சக அதிகாரி டேவிட் மோர்ஸின் பேச்சை ரெக்கார்ட் செய்து உண்மையை அனைவருக்கும் புரிய வைக்கிறார்.

படத்தில் புரூஸ் வில்லிஸ் ஏற்றிருக்கும் பாத்திரம் பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்கிறது. முக்கியமாக, தவறு செய்து பச்சாதவித்து, அதற்கு கைமாறு செய்ய நினைக்கும் மனிதர்கள்! சமீபகால ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களை அதிகம் காண முடிகிறது. ஆஸ்கார் விருது பெற்ற 'Crash' திரைப்படத்தில், யூத தம்பதியிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்காரர் வேறொரு சந்தர்ப்பத்தில் அந்த பெண்மணியை காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைக்க துணிகிறார். இந்தப் படத்திலும் புரூஸ் வில்லிஸ் தனது சகாக்களுடன் சேர்ந்து சட்டத்துக்குப் புறம்பான பல வேலைகளை செய்ததாக Mos Def யிடம் கூறுகிறார். மேலும், Mos Def சாட்சி சொல்ல போவது தனது சகாக்களுக்கு எதிராக மட்டுமல்ல, தனக்கு எதிராகவும்தான் என்கிறார். Mos Def யை காப்பாற்றுவதற்கு அவரின் கடந்தகால தவறுகளே காரணம் என்பது படத்தில் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

ஆக்ஷ்ன் காட்சிகளில் தனது வழக்கமான ஆளுமையை செலுத்தியிருக்கிறார் புரூஸ் வில்லிஸ். காரில் அமர்ந்திருக்கும் Mos Def-ஐ கொலையாளி சுட முயலும்போது வில்லிஸின் துப்பாக்கி அவனை சுட்டு வீழ்த்துகிறது. அந்தக் காட்சியில் இடது கையில் துப்பாக்கியை ஏந்தி நிற்கும் வில்லிஸின் தோரணை நம்மூர் ஆக்ஷ்ன் ஹீரோக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தனது பிற ஆக்ஷ்ன் படங்களைப் போலவே துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதை இந்தப் படத்திலும் கற்றுத் தருகிறார் வில்லிஸ்.

படத்தில் Mos Def-ன் கதாபாத்திரம் சுவாரஸியமானது. புரூஸ் வில்லிஸ் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வரும்போது Mos Def-யின் பேச்சு ஆரம்பமாகிறது. தனது க்ரே நிற சூட் இன்னும் வரவில்லை என புலம்பும் Mos நோட் ஒன்றை தன்னுடன் எப்போதும் வைத்திருக்கிறார். அதில் விதவிதமான கேக்குகளுக்கான ரெஸிபி எழுதப்பட்டிருக்கிறது. சொந்தமாக பேக்கரி தொடங்க வேண்டும் என்பதே Mos-ன் விருப்பம். அதற்கான பணம் Port Authority -ல் பத்திரமாக இருக்கிறது. அதில் ஒரு சிக்கல். 24 மணி நேரத்திற்கொருமுறை லாக்கரில் உள்ள பொருட்கள் மாற்றப்படும். நீதிமன்றத்தில் பத்து மணிக்கு சாட்சி சொல்லிவிட்டு உடனடியாக சென்றால் மட்டுமே Mos Def யால் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தாமதித்தால் பணத்துடன் பேக்கரி கனவையும் அவர் தொலைத்துவிட வேண்டியதுதான்.

இந்த நெருக்கடிக்கு நடுவிலும் சளைக்காமல் பேசிக் கொண்டே வருகிறார் Mos. நீதிமன்றம் போகும் வழியில் புரூஸ் வில்லிஸிடம் ஒரு விடுகதை போடுகிறார். நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். பேருந்து நிறுத்தத்தில் மூன்று பேர் நிற்கிறார்கள். ஒருவர் வயதான உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்மணி. இரண்டாமவர், உங்கள் உயிரை காப்பாற்றிய ஆருயிர் நண்பர். மூன்றாவது உங்கள் கனவுப் பெண். காரில் ஒருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற நிலையில் யாரை உங்களுடன் ஏற்றிச் செல்வீர்கள்?

இந்தக் கேள்வியை, போலீஸிடமிருந்து தப்பித்து சீனக் கிழவரின் அபார்ட்மெண்டில் ஒளிந்திருக்கும்போது அவரிடமும் கேட்கிறார் Mos.
பேருந்து பயணிகளை பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும்போது அவர்களுடன் இருக்கும் சீன சிறுமியிடம் Mos உரையாடுகிறார். அவளது பெயர் மற்றும் வயதை கேட்கும் mos, கேக் ரெஸிபி நோட்டை பிரித்து பிறந்தநாள் கேக் பற்றி சொல்கிறார். பிறகு இன்று தனது பிறந்தநாள் என்று அவளிடம் கூறுகிறார். இந்த நெகிழ்வான காட்சிக்கு வெளியே, அதாவது இந்த நிகழ்வு நடைபெறும் பேருந்துக்கு வெளியே, போலீஸ் துப்பாக்கியுடன் Mos Def-யையும், புரூஸ் வில்லிஸையும் பிடிக்க காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு முதலுதவி செய்யும் மருத்துவர் புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவி என்ற எண்ணத்தில் அவரிடம் வில்லிஸ் பற்றி நல்லவிதமாக கூறுவதும், வில்லிஸுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா என்று வேண்டுகோள் வைப்பதும், Mos Def-ன் பேச்சின் போக்கை புரிந்து, "அது என் சகோதரி" என வில்லிஸ் விளக்கமளிக்க, உங்கள் விஷயத்தில் இப்போதுதான் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தேன், அதுவும் போயிற்று என்ற ரீதியில் Mos Def புலம்புவதும், மற்றவர் மீது அவர் இயல்பாக கொள்ளும் அக்கறையை வெளிப்படுத்தும் சிறந்த காட்சி. மேலும், பேருந்தில் அந்த சிறுமி மிகவும் பயந்து போயிருந்ததால் அவளை மகிழ்விக்கவே தனக்கு இன்று பிறந்தநாள் என்று கூறியதாக Mos Def கூறும்போது, Mos Def-யின் கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதில் ஓர் உயர்ந்த இடத்தை பிடிக்கிறது.

படத்தில் கவனிக்க வேண்டிய அம்சம் சீனக் கிழவரும், சீன சிறுமியும். மிகப்பெரிய அபார்ட்மெண்டில் யாரும் கதவை திறக்காத போது சீனக் கிழவர்தான் Mos Def-க்கும், புரூஸ் வில்லிஸுக்கும் அபயம் அளிக்கிறார். அதேபோல் உயிர் போகும் நெருக்கடியிலும் சீன சிறுமியை மகிழ்விக்க முயல்கிறார் அமெரிக்கரான Mos Def.

பிற நாட்டவர்கள் மீது சமீபகாலமாக அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டு வரும் கரிசனத்தின்(?) வெளிப்பாடாக இதை எடுத்துக் கொள்ள இடம் இருக்கிறது.

தறபோது ஓடிக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படமான 'Inside Man' திரைப்படத்திலும் இது போன்ற காட்சியை காணலாம். செப்-11 தாக்குதலையொட்டி சீக்கியர் ஒருவர் அராபியர் என தவறாக கருதப்பட்டு அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

'இன்சைட் மேன்' திரைப்படத்திலும் சீக்கியரை அராபியன் என நினைத்து விசாரணை செய்வதும், அவர் தனது டர்பன் ஆன்மிகத்துடன் தொடர்புடையது என வாதிடுவதும் இடம் பெற்றுள்ளது.

இவ்விரு காட்சிகளும் செப்-11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கு அயல்நாட்டவர் மீது ஏற்பட்டுள்ள கண்காணிப்பு நிறைந்த கரிசனத்தின் வெளிப்பாடுகள் என்றே கருதத் தோன்றுகிறது. மேலும், '16 பிளாக்ஸ்' திரைப்படத்தில் சீன பிரஜைகளை காண்பித்ததற்கு நேர்மாறாக தனது 'Leathal Weapon' திரைப்படத்தில் அவர்களை வில்லன்களாக சித்தரித்திருப்பார் இயக்குனர் Richard Donner.

'16 Blocks' திரைப்படம் குறித்த ஓர் ஆச்சரியம், இதற்காக எழுதப்பட்ட விமர்சனங்கள். Richard Donner -ன் 'The Omen', 'Leathal weapon', 'Super man', 'conspiracy Theory' போன்ற படங்களுடன் ஒப்பிட்டு, ஆக்ஷ்ன் குறைவு, விறுவிறுப்பு கம்மி என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர, படத்தில் வரும் உரையாடல்களுக்கு பின்னுள்ள விஷயங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப்படவில்லை. படத்தின் இறுதியில் - இரண்டு வருடங்களுக்குப் பிறகு - புரூஸ் வில்லிஸின் பிறந்தநாளுக்கு கேக் அனுப்புகிறார் Mos Def. கூடவே ஒரு கடிதமும். அதில் சியாட்டிலிலுள்ள தனது பேக்கரிக்கு Eddie & Jacks Good Sign bakery என்று பெயர் வைத்திருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தானே பார்ப்பதால் தனது பெயரை முதலில் போட்டுள்ளதாகவும் தனக்கேயுரிய நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார் Mos Def.

இறுகியாக ஒன்று. புரூஸ் வில்லிஸிடம் Mos Def சொன்ன விடுகதையின் பதில் உஙகளுக்கு தெரியுமா? Mos Def-யை சியாட்டிலுக்கு வழியனுப்பும் போது அவரிடம் அதற்கான பதிலை புரூஸ் வில்லிஸ் கூறுகிறார்.

"கார் கீயை பஸ் ஸ்டாப்பில் நிற்கும் நண்பனிடம் கொடுத்து, வயதான பெண்மணியை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்வேன். நான் எனக்கு விருப்பமான பெண்ணுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொள்வேன். காரணம், அவள் என் கனவுப் பெண்!"

யாருக்கும் சிக்கலில்லாத இந்த விடுகதையின் பதில் போலவே சுமூகமாக முடிகிறது படம்!

ஆக்கம் : ஜான்பாபுராஜ்


0 Comments:

Post a Comment

<< Home