Monday, September 24, 2007

'நிழல்' திருநாவுக்கரசு உரையாடல்

உங்களுக்கு சினிமா சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் தோன்றியதற்கான பின்புலத்தை விளக்க முடியுமா?

1982 முதல் 1992 வரை சென்னை பிலிம் சொஸைட்டி ரொம்ப தீவிரமா செயல்பட்டுகிட்டிருந்தது. உலக சினிமாக்களை தொடர்ந்து திரையிட்டாங்க. இதில் என்ன விசேஷம்னா, படம் 2 மணி நேரம் ஓடும். படம் பற்றிய விவாதம் படம் முடிஞ்ச பிறகு 3 மணி நேரம் நடக்கும். இந்த நடைமுறை இப்போ இல்லாம போயிடுச்சி. 1992-க்குப் பிறகு சென்னை பிலிம் சொஸைட்டி செயல்படலை. 1994-லில் சினிமா பொன்விழாவின் போது அதை கொண்டாட இங்க எந்த அமைப்பும் இல்ல. சரி, நாமே ஏதாவது பண்ணலாம்னு நண்பர்கள் சேர்ந்து, வெளிநாடுகளில் இருக்கிற நண்பர்கள்கிட்ட சிறந்த படங்களோட VHS அனுப்பச் சொன்னோம். அப்போ VHSதான். VCD, DVD எல்லாம் கிடையாது.

அதற்கு பலன் கிடைச்சதா?

லண்டன்ல இருந்த எழுத்தாளரும் விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் சில படங்கள் அனுப்பி வச்சார். அதே மாதிரி மாஸ்கோவிலிருந்த நண்பரும், வேறுபல சினிமா ஆர்வலர்களும் படங்களை அனுப்பி உதவினாங்க. அப்போதே எங்ககிட்ட எழுபது படங்கள்வரை இருந்தது. அந்தப் படங்களை ஊர் ஊரா கிராமம் கிராமமா எடுத்துப் போய் திரையிட்டோம். ஒவ்வொரு ஊர்லயும் அங்கேயுள்ள திரைப்பட ஆர்வலர்களை ஒன்று திரட்டி 'கிராமிய திரைப்பட சங்கம்' அமைச்சோம். ஏறக்குறைய ஏழு வருடம் இது தொடர்ந்தது. * இந்த காலகட்டத்தில்தான் நிழல் பத்திரிகை ஆரம்பிச்சிங்க, இல்லையா? 2001 ஜுன் மாசம், முதல் நிழல் இதழ் வெளிவந்தது. முதல் இதழ்லயே குறும்படம் பற்றி விரிவான க்ட்டுரை வெளியிட்டோம். திரைக்கலைஞர்கள், திரைப்பட விழாக்கள், திரைப்படம் சார்ந்த தொழில் நுட்பங்கள், சிறந்த திரைப்படங்களின் திரைக்கதைகள், விமர்சனம், உலக சினிமானு பல்வேறு விஷயங்களை தொடர்ந்து நிழலில் தந்துகிட்டிருக்கோம். தமிழ் குறும்படம் - ஆவணப்படம் குறித்து அதிகமாக கவனப்படுத்துவது நிழல் இதழ் மட்டும்தான்னு சொல்லலாம்.

இதற்கு ஏதாவது காரணம் உண்டா?

இங்க குறும்படம் - ஆவணப்படம் எடுத்த ஆள்கள் யாரும் அதுபற்றி வெளியே பேசவே இல்லை. சர்வதேச விழாக்களுக்கு இந்தப் படங்களை எப்படி அனுப்புறது, இந்தியாவில் இந்தப் படங்களை திரையிட வாய்ப்புகள் உண்டா, பரிசுகள் வழங்கப்படுமா உள்பட எந்த விஷயத்தையும் பகிர்ந்துக்காம மறைச்சுட்டாங்க. நிழலில் தொடர்ந்து குறும்படம் - ஆவணப்படம் பற்றி எழுதும்போது, அதுபற்றி அறிய பலரும் ஆவலா இருந்தாங்க. குறும்பட - ஆவணப்படங்களுக்காகவே சர்வதேச அளவில் விழாக்கள் நடத்தப்படுது. அதில் தேர்வாகிற படங்களுக்கு விருது, பரிசுத் தொகை எல்லாம் உண்டு. இந்தியாவிலும் கூட இவற்றை திரையிடுதற்கான விழாக்கள், அமைப்புகள், பரிசுகள் எல்லாம் இருக்கு. இதையெல்லாம் இங்கேயிருந்த மூத்த படைப்பாளிகள் பகிர்ந்துக்காம மறைச்சுட்டாங்க. இந்த வாய்ப்புகள் எல்லா தமிழ் படைப்பாளிகளுக்கும் கிடைக்கணும்ங்கிற நோக்கில் நிழல் மூலமா குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தருவித்து, பல்வேறு விழாக்களுக்கு அனுப்பி வச்சோம்.

அதற்கான பலன் நீங்கள் எதிர்பார்த்தபடி இருந்ததா?

இதுவரை இங்கேயுள்ள படைப்பாளிகளுக்கு ஆறுலட்சம் ரூபாய்வரை வாங்கிக் கொடுத்திருக்கோம். பாரிஸ்ல 26 வருஷமா பாரிஸ் நண்பர்கள் வட்டம்ங்கிற அமைப்பு இயங்கிட்டு இருக்கு. அந்த அமைப்புக்கு தமிழ் படைப்பாளிகளோட ஆவணப்பட - குறும்படங்களை அனுப்பி வச்சோம். அவங்க கட்டணம் வசூலித்து அந்தப் படங்களை பாரீஸில் திரையிட்டு எண்பதாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதை சென்னையிலுள்ள ரஷ்ய கல்சுரல் சென்டரில் நடந்த விழாவில் எட்டு படைப்பாளிகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் பிரிச்சு கொடுத்தோம். நியூஜெர்ஸி தமிழ் சங்கம் 2002-ல் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வசூலித்து கொடுத்தது. அதேமாதிரி கனடா சுயாதின திரைப்படச் சங்கம், லண்டன் விம்பம் அமைப்பு, சுவிட்சர்லாந்த் அஜீவன்னு தமிழ் குறும்பட - ஆவணப்படங்களை நாங்க கொண்டு சேர்த்த வெளிநாடுகள் நிறைய. ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ் சங்கம் ஒவ்வொரு வருஷமும் முப்பதாயிரம் ரூபாய் தமிழ் குறும்படங்களுக்கு கொடுத்திட்டு இருக்கு.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டான் போஸ்கோ கல்வி நிறுவனம் குறும்படங்களுக்கு சான்றிதழ் கொடுத்திட்டிருந்தது. அதே மாதிரி திருப்பூர் தமிழ் சங்கம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எல்லாம் சான்றிதழ் மட்டுமே கொடுத்திட்டிருந்தாங்க. நாங்க குறும்பட - ஆவணப்படங்களுக்கு பணம் பெற்றுத்தரத் தொடங்கிய பிறகு, அவங்களும் தவிர்க்க முடியாம சிறந்த குறும்பட - ஆவணப்படங்களுக்கு பணம் தர ஆரம்பிச்சாங்க.

ஆவணப்பட - குறும்படங்களுக்கு இந்திய அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறதா?

வருஷம் தோறும் நடக்கிற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆஃ்ப் இண்டியா (IFFOI) வில் ஆவணப்பட - குறும்படங்களுக்கு இரண்டு லட்சம் பரிசு கொடுக்கிறாங்க. இந்தியன் நியூஸ் ரீலும், MIFF-ம் இணைஞ்சு இரண்டு வருஷத்துக்கு ஒருதரம் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறாங்க. * நீங்களும் உங்க நண்பர்களும் ஆவணப்பட - குறும்படங்களுக்கென்றே சங்கம் தொடங்க என்ன காரணம்? ஆவணப்பட - குறும்பட இயக்கத்தை, அதன் செயல்பாடுகளை இன்னும் தீவிரமாக்க 2005-ல் தமிழ்நாடு ஆவணப்பட - குறும்பட படைப்பாளிகள் சங்கத்தை தொடங்கினோம். தமிழ் ஆவணப்பட - குறும்படங்களை முன்னெடுத்து செல்வதுடன், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதும் இந்த சங்கத்தின் முக்கியமான செயல்பாடா இருக்கு.

சமீபத்தில் கூட திருச்சியில் பயிற்சிப் பட்டறை நடத்தியிருக்கிங்க...

ஆமா. நிறைய பேருக்கு குறும்பட - ஆவணப்படங்களில் ஆர்வம் இருந்தாலும் முறையான பயிற்சி பலருக்கு இல்லை. ஆவணப்படம்ங்கிறது ரியாலிட்டியை அப்ஸர்வ் பண்றது. இதுல சிலநேரம் கமெண்ட்ரியும் சேர்க்கப்படலாம். குறும்படம்ங்கிறது கதையை அடிப்படையாகக் கொண்டது. குறும்படத்தை போல ஆவணப்படமும் ஒரு கலைப்படைப்புதான். யதார்த்தத்தை அப்படியே கேமராவில் பதிவு செய்தாலும், எதை பதிவு செய்வதுங்கிற நம்முடைய தேர்வும், எடிட்டிங்கும், அதில் சேர்க்கப்படுற கமெண்ட்ரியும் சேர்ந்து ஆவணப்படமும் தன்னளவில் ஒரு கலைப்படைப்பாகவே விளங்குகிறது.

பயிற்சிப் பட்டறையில் என்னென்ன கற்றுத் தர்றீங்க?

எடிட்டிங், கேமரா, ஒளிப்பதிவு மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களை செயல்முறை விளக்கமா சொல்லித் தர்றோம். முக்கியமான ஆவணப்படங்கள், குறும்படங்கள், முழுநீள திரைப்படங்களை திரையிட்டு அதுபற்றி விவாதம் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடுவாங்க. மாணவர்களை குழுக்களாகப் பிரிச்சு குறும்படம் எடுப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தர்றோம். முக்கியமா இந்தப் பட்டறைகளை சங்கம் ஒரு சர்வீஸாதான் செய்துகிட்டிருக்கு.

தமிழகத்தில் குறும்பட தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இன்றைய நிலை குறித்து சிறிது விளக்க முடியுமா?

தமிழ் சினிமாவில் குறும்படங்கள் நிறைய இடம் பெற்றிருக்கு. உதாரணமாக, 1935-ல் வெளியான 'போலி பாஞ்சாலி' ங்கிற படம். இந்தப் படத்துல புறாவேட்டை, அடங்காபிடாரினு வேறு வேறு தலைப்புகள்ல சின்னச் சின்ன கதைகளை குறும்படமா எடுத்து சேர்த்திருந்தாங்க. ஒரு வகையில நம்ம பஞ்சதந்திர கதைகள் மாதிரி. லாரல் ஹார்டி, சாப்ளின் பாதிப்பில் லாப்ஸ்டிக் காமெடி படங்களை முழுநீளப் படங்களை திரையிடும்போது பின்னிணைப்பா திரையிடுற வழக்கம் தமிழ்நாட்ல இருந்தது. மெயின் பிக்சருக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஜெமினி எடுத்த 'மதன காமராஜன்' படத்தில் 'புத்திமான் பலவானானான்'ங்கிற என்.எஸ்.கே.யின் காமெடி சித்திரம் பின்னிணைப்பா வரும். இதெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து நாம் உருவாக்கியவை. தனியாக குறும்படம்னு நாம் கவனம் செலுத்தத் தொடங்கியது சமீபத்துலதான். 1980-களில் சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் சில முயற்சிகள் செய்தாங்க. தமிழ் குறும்பட இயக்கத்துக்கான முதல் ஆக்கப்பூர்வமான பங்களிப்புனு எடிட்டர் லெனினோட 'நாக் - அவுட்' குறும்படத்தைச் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான 'நாக் - அவுட்' தமிழ் குறும்பட வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனை.

இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது எண்பது தொண்ணூறுகளில் குறும்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இது எதனால்? 2000-க்கு முன்னாடி நீங்க குறும்படங்களை பிலிமில் மட்டுமே எடுக்க முடியும். 3 நிமிஷ படமெடுக்க நீங்க 20,000 ரூபாய் செலவு பண்ணணும். டிஜிட்டல் தொழில்நுட்பம் செலவை ரொம்ப குறைச்சிடுச்சி. படம் எடுப்பதற்கான நடைமுறை சிக்கல்களும் டிஜிட்டலில் குறைவு. கல்வியில் சினிமா கூடாதுனு சிலர் சொல்லிகிட்டிருந்தாலும் விஸ்காம், மாஸ்காம், எலக்ட்ரானிக் மீடியானு தமிழ்நாட்ல 60-க்கு மேற்பட்ட கல்லூரிகளில் சினிமா நுழைச்சிருக்கு. இந்த மாணவர்கள் ப்ராஜக்ட் வொர்க்கிற்காக கண்டிப்பா ஒரு குறும்படம் எடுக்க வேண்டியிருக்கு. இதெல்லாம் தமிழ் குறும்பட இயக்கத்தை துரிதப்படுத்துன காரணிகள்னு சொல்லலாம்.

அதிகமான குறும்படங்கள் வெளிவரும்போது அதன் தரமும் பெரிய அளவில் கேள்விக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறதல்லவா?தவிர, எடுக்கிற படங்களுக்கெல்லாம் பரிசு வாங்கிக் கொடுக்கிறார்னு உங்கமேல ஒரு விமர்சனமும் இருக்கு.

உண்மையில் தமிழில் தயாராகிற பெரும்பான்மை குறும்படங்கள் காட்சியிலும், தரத்திலும் பலவீனமானவை. தரத்தைப் பொறுத்தவரை நீங்க சர்வதேச அளவுக்கு போக வேண்டாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் தயாராகிற படத்தோடு ஒப்பிடும்போது நாம பின்தங்கிதான் இருக்கோம். ஆனா, இந்த நிலைமை வேகமா மாறிட்டு வர்றதையும் ஒப்புக் கொண்டுதான் ஆகணும். அப்புறம் பரிசு விஷயம். இதுநாள் வரை யாரும் குறும்படங்களை வெளியிட ஒருகளம் இருப்பதையோ, அதுக்கு பரிசுகள் வழங்கப்படுறதையோ சொல்லாம மறைச்சுட்டாங்க. தவிர, குறும்பட இயக்கம் யாராலையும் கவனிக்கப்படாமலே இருந்தது. இப்படியொரு சூழலில் படைப்பாளிகளை பெரிய அளவில் ஊக்குவிப்பதும், பங்கு பெற வைப்பதும் அவசியமான செயல்பாடுனு நான் நினைக்கிறேன்.

ஆவணப்படங்களுக்கு வருவோம். தமிழின் முதல் ஆவணப்படம்னு எதைச் சொல்லலாம்?

ஒருவகையில், ஆவணப்படத்துலயிருந்துதான் சினிமாவே வந்ததுனு சொல்லலாம். முதல்ல எதை படமாக்கினாங்க? ஸ்டேஷன்ல ரயில் வந்து நிற்கிறது, விவசாயம் செய்யறது இந்த மாதிரி. யதார்த்தமான விஷயங்களை படம் பிடிப்பது. அதுக்குப் பிறகு கதை சார்ந்த திரைப்படங்கள் உருவாகுது.

தமிழைப் பொறுத்தவரை ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படம் முக்கியமானது. 1937 முதல் 1942 வரை செட்டியார் எடுத்த இந்தப்படமே இந்திய அளவிலும் முதல் முழுமையான ஆவணப்படம்னு சொல்லலாம். இந்தப் படத்துக்காக வெளிநாடுகள் போய் பல தலைவர்களைப் பார்த்து அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். இந்தப் படத்தோட ஆங்கில பிரதிதான் நம்மகிட்ட இருக்கு. தமிழ் மூலம் இதுவரை கிடைக்கலை. பிரன்சில் படித்த ஏ.வி. பதி 1937-ல் 'இந்தியன் பேந்தர்' ங்கிற ஆவணப்படம் எடுத்தார். ஜெர்மனை சேர்ந்த பால் சீசிஸ் என்பவர்தான் இந்தியாவில் ஆவணப்படம் உருவாக ஆரம்பகாலத்தில் காரணமாக இருந்திருக்கிறார். இவர் ஏ.வி. பதியோட நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தஞ்சாவூரில் நிறைய வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. அவங்க மூலமா புகைப்பட கலை தஞ்சாவூர்வாசிகளுக்கு பரிட்சயமாகியிருக்கு. அதில் முக்கியமானவர் ஆபிரஹாம் பண்டிதர். 1850-ல யிருந்து 1917 வரை இவர் பல்வேறு ஆவணப்படங்களை எடுத்திருக்கார். இவர் தன்னோட மகன் ஜோதிபாண்டியனை அப்போதே ஜெர்மனிக்கு கேமரா பற்றி படிக்க அனுப்பி வச்சிருக்கார். இவர்கிட்ட புகைப்பட கலையை கற்றுகிட்டவர் மருதப்ப மூப்பனார். இவர் விமானம் தரையிறங்குகிறதையெல்லாம் படமாக்கியிருக்கார். 1905-ல் டெல்லியில் 5-ம் ஜார்ஜ் மன்னனுக்கு விழா நடத்தியபோது அதை இவர் படமெடுத்திருக்கார். 1910-களில் சென்னை வேப்பேரியைச் சேர்ந்த ஜோசப்ங்கிறவர் கீரிப்பிள்ளை சண்டை மாதிரியான விஷயங்களை படமெடுத்து பணத்துக்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றிருக்கிறார். இவையெல்லாம் வாய்மொழி வரலாறாகதான் இருக்கு. ஆவணப்படங்கள் எதுவும் இப்போது நம்மகிட்ட இல்லை. ஏ.கே. செட்டியாரின் காந்தி பற்றிய படம்தான் நம்மிடம் இருக்கும் பழமையான முழுமையான ஆவணப்படம். * ஆவணப்படுத்துவது என்பது தமிழர்களிடம் அரிதாக காணப்படும் விஷயம். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். ஆவணப்பட விஷயங்களில் நாம் இழந்தவை பற்றி கூற முடியுமா? தமிழில் வண்ண திரைப்படம் 1956-ல் தான் அறிமுகமாகுது. அதுக்கு முன்பே வண்ணத்தில் ஆவணப்படம் எடுத்திருக்காங்க. நான் நண்பர் ஒருவரோட வீட்டுக்கு போனபோது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி நிறைய ஆவணங்கள் சேர்த்து வைத்திருந்தார். அதில் பர்மா விஜயம்ங்கிற பெயர்ல ஒரு படச்சுருள் இருந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பர்மா போனதை யாரோ படம் எடுத்திருக்காங்க. 1952-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம் வண்ணத்தில் இருந்தது. படம் நன்றாக இருந்தாலும் ஆடியோ நாசமாகியிருந்தது. ஒலி கிடையாது. அதேமாதிரி பெரியாரோட ஒருநாள் வாழ்க்கையை 'செம்மீன்' இயக்குனர் ராமு காரியத் ஆவணப்படமா எடுத்திருக்கார். ராமு காரியத் கேரளாவின் வைக்கத்தை சேர்ந்தவர். பெரியார் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியதால் பெரியார் மேல அவருக்கு ஓர் ஈடுபாடு. அந்த ஆவணப்படத்தை தேடி தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பல இடங்களுக்கு அலைஞ்சும் பலன் பூஜ்ஜியம் தான். படச்சுருள் எங்கே போனதுன்னே தெரியலை. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தன்னையே ஆவணப்படமா எடுத்திருக்கார். அவர் ஸ்டுடியோவுக்குள் நுழையுறது, வேலையாட்களுக்கு வேலையை பிரிச்சு கொடுப்பது, ஸ்டுடியோ லைட்ஸ் ஆன் செய்வதுனு அவரோட ஸ்டுடியோ வேலைகளை படமாக்கியிருக்கார். கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடை ஈழத்தைச் சேர்ந்த சுவாமி சேவியர் தனிநாயகம் அடிகள் படமெடுத்தார். இவையெல்லாம் இன்றைக்கு நம்ம கையில் இல்லை. நாம ஆவணப்படுத்தாமல் சரித்திரத்தில் நழுவவிட்டவை இவை. முழுநீள சினிமாவில் ஆவணப்படங்களை சேர்த்து திரையிடுற வழக்கம் முன்பு இருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸின் 'கஞ்சன்' படத்தில் காந்தி பழனி கோயிலுக்கு வந்ததை படமெடுத்து படத்தோடு இணைச்சு திரையிட்டாங்க. விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. மாநாடை படமெடுத்து, அதனை தான் பார்ப்பதுபோல் 'தங்கரத்னம்' படத்தில் எஸ்.எஸ். ஆர். பயன்படுத்தியிருப்பார்.

இவையெல்லாம் துண்டு துண்டாக ஆவணப்படங்களுக்குரிய இலக்கணங்கள் இல்லாமல் எடுத்தவை. செய்திப் படங்கள் என்ற அளவில் மட்டுமே இருக்கக் கூடிய இவற்றை ஆவணப்படுத்த வேண்டிய, பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

இதுவரை நம்மிடம் இருப்பது எழுதப்பட்ட வரலாறு. இனி எழுதப்பட்ட வரலாற்றை விட விஷுவல் ஹிஸ்டரிதான் முக்கியத்துவம் பெறப் போகுது. எழுதப்பட்ட வரலாறில் அதை எழுதுகிறவர் தன்னிஷ்டப்படி வெட்டியும், ஒட்டியும், திரித்தும் எழுத முடியும். எதிர்கால சந்ததியால் அதை கண்டு பிடிக்க முடியாது அல்லது கண்டு பிடிக்கிறது சிரமம். ஆனால், விஷுவல் ஹிஸ்டரியில் அதை படமெடுப்பவர் தன்னிஷ்டப்படி எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. உதாரணமாக விருகம்பாக்கம் மாநாடு நடந்தபோது அந்த இடத்தில் நிறைய கட்டடங்கள் இருந்ததாக ஒருவர் எழுதினால் அது உண்மையா இல்லையாங்கிறதை தெரிஞ்சுக்கிறது கஷ்டம். ஆனால், விஷுவல் ஹிஸ்டரியில் அன்றைக்கு இருந்த விருகம்பாக்கத்தை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரொம்ப முக்கியமா இதுல ஜனநாயகம் இருக்கு. யார் வேண்டுமானாலும் ஆவணப்படம் எடுக்கலாம். ஒரு கிராமத்து இளைஞன்கூட தன்னைப் பற்றி தன்னோட கிராமம் பற்றி ஒரு படம் எடுக்கலாம். மொத்தத்தில் விஷுவல் ஹிஸ்டரிங்கிற ஆவணப்படங்களை பாதுகாப்பதுங்கிறது நம்மோட சரித்திரத்தை பாதுகாப்பது.

இந்த எண்ணம்தான் உங்களை தமிழ் ஆவணப்பட - குறும்பட வரலாற்றை சொல்லும் 'சொல்லப்படாத சினிமா' புத்தகத்தை எழுதத் தூண்டியதா?

ஆமாம். இது அரசாங்கமோ, பல்கலைக்கழகமோ செய்ய வேண்டிய வேலை. ஆனா, செய்யலை. என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தில் தமிழக ஆவணப்பட - குறும்பட தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றைப்பற்றி நான் விரிவாக எழுதிய புத்தகம்தான் சொல்லப்படாத சினிமா. இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இப்படியொரு புத்தகம் எழுதப்படலைனு நினைக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுத இன்னொரு முக்கியமான காரணம், நாம ஆவணப்படுத்தாமல் விடுவதால், நம்முடைய சாதனைகள் மறைக்கப்படுது. வடக்கே உள்ளவங்களுக்கு அந்தப் புகழ் போய்ச் சேருது. உதாரணமா, ஏ.கே. செட்டியார் தன்னோட காந்தி ஆவணப்படத்தை 1942 லயே முடிச்சுட்டார். ஆனால், வரலாற்றை எழுதுற வடநாட்டுக்காரர்கள் அவர் 1947-ல் காந்தியை எடுத்ததா எழுதுறாங்க. இதனால் இந்தியாவில் முதல் ஆவணப்படத்தை எடுத்தவர்ங்கிற பெருமை அவருக்கு கிடைக்காம போகுது. வேறு ஆள்கள் எடுத்த ஆவணப்படங்களோட ஃபுட்டேஜை வச்சு புதுசா ஒரு ஆவணப்படம் எடுக்கிற போக்கு இங்க இருக்கு. பிரெஞ்சு இயக்குனர் கிரிஸ் மார்கர் இதில் பிரபலமானவர். இந்தப் போக்கை கண்டு பிடித்தவர்னு கிரிஸ் மார்கரை சொல்றாங்க. உண்மையில் வேறு ஆள்களோட ஆவணப்பட ஃபுட்டேஜை தன்னோட ஆவணப்படத்தில் முதலில் பயன்படுத்தியவர் நம்ம ஏ.கே. செட்டியார்தான். காந்தி ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியதை போலக் என்பவர் படமா எடுத்திருக்கார். இந்த ஆவணப்படத்தை தன்னோட காந்தி படத்துக்காக வாங்கி அதில் செட்டியார் இணைச்சிருக்கார். போலக் மாதிரி வேறு பலரிடமும் செட்டியார் படங்களை வாங்கி பயன்படுத்தியிருக்கார். இந்தியாவில் முதன்முதலில் பிலிம் சொஸைட்டி தொடங்கியது சத்யஜித்ரேனு வரலாறு எழுதுறவங்க சொல்றாங்க. ஆனா, அவருக்கு முன்பே 1937-ல் பிலிம் சொஸைட்டியை தமிழ்நாட்டில் ஏ.வி. பதி ஆரம்பிச்சிருக்கார். இந்த மறைக்கப்பட்ட விஷயங்களை ஆவணப்படுத்துவதும் நான் சொல்லப்படாத சினிமா எழுதுறதுக்கு முக்கிய காரணம்.

ஆவணப்படங்களின் நிலை இப்போது எப்படியிருக்கு?


பல சிறந்த ஆவணப் படங்களை தமிழ் படைப்பாளிகள் எடுத்திருக்காங்க. முக்கியமாக சொர்ணவேல். இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்குங்கிற அண்ணாமலையின் புத்தகத்தை படித்துவிட்டு இவர் எடுத்த INA ஆவணப்படம் முக்கியமானது. சுபாஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஆவணம் இந்த டாக்குமெண்ட்ரி. அருண்மொழியின் அரவாணிகள் பற்றிய 'செகண்ட் பெர்த்', 18 வயசு கல்லூரி மாணவி சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி பெண் சிசுக்கொலை பற்றி எடுத்த 'தளிர் ஒன்று சருகானது'. மாதவராஜின் சாலைப்பணியாளர்கள் குறித்த 'இரவுகள் உடையும்', கொக்கோ கோலா கம்பெனியால் காணாமல் போகும் நீர்வளம் பற்றிய 'மூழ்கும் நதி'னு சொல்லிகிட்டே போகலாம். இன்னொருபுறம் போலியான ஆவணப்படங்களும் எடுக்கப்படுது. இதுக்கு முக்கிய காரணம் NGO க்கள். சுனாமியின் போது ஆயிரம் கோடி அளவுக்கு பணம் இந்திய NGO க்கள் கைக்கு வந்ததாக கூறப்படுது. முன்பெல்லாம், உதவி செய்றமாதிரி புகைப்படம் எடுத்து பணம் தர்ற வெளிநாட்டு நபர்களுக்கு, அமைப்புகளுக்கு அனுப்பினால் போதும். இப்போ அவங்க, செய்யுற உதவிகளை டாக்குமெண்ட்ரியா எடுத்து அனுப்புங்கனு சொல்றாங்க. இதுக்காக போலியா ஆவணப்படங்கள் எடுக்கப்படுது.

ஆவணப்படங்களுக்கு கால அளவு இருக்கா?


குறும்படங்களுக்கு இருக்கு. ஒன்றிலிருந்து முப்பது நிமிஷங்களுக்குள்தான் குறும்படங்கள் இருக்கணும். குறும்படங்களுக்கென்றே இருக்கும் ஜெர்மனியின் ஓபர்ஹாஸன் திரைப்பட விழாவிலும் ஜப்பான் யம மோட்டா திரைப்பட விழாவிலும் இந்த கால அளவுதான் பின்பற்றப்படுது. முப்பது நிமிஷங்களுக்கு மேலிருக்கும் குறும்படங்களை இங்க அனுமதிக்கிறதில்லை. அமெரிக்கர்கள் மட்டும், முப்பது நிமிஷத்துக்கு மேலிருக்கும் குறும்படங்களுக்கு ஷார்ட் பியூச்சர்னு ஒரு பெயர் கொடுத்து, அதையும் குறும்பட வகையில் சேர்த்துக்கிறாங்க. ஆவணப்படங்களுக்கு கால அளவு கிடையாது. சிங்கத்துக்கும் காட்டு எருதுக்கும் நடக்கும் சண்டையொன்றை பார்த்திருக்கேன். இந்த ஆவணப்படம் 18 மணி நேரம் ஓடக்கூடியது.

இந்தியாவில் ஆவணப்படங்களுக்கு சென்ஸார் கெடுபிடிகள் உண்டா?

இந்தியாவில் தயாரான ஆவணப்படமாக இருந்தாலும் வெளிநாடுகள்ல திரையிடுறதா இருந்தால் சென்ஸார் கிடையாது. இந்தியன் பிலிம் பெஸ்டிவெல்லில் திரையிடுறதுனா சென்சார் செய்யப்படணும். இதை எதிர்த்து கிரிஷ் கர்னட், ஆனந்த பட்வர்தன் மாதிரியான படைப்பாளிகள் போராட்டம் நடத்தியிருக்காங்க. எமர்ஜென்ஸியின் போது நடந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பீகார் மூவ்மெண்டை ஆனந்த பட்வர்தன் 'வேவ்ஸ் ஆஃ்ப் ரெவலூஷன்' ங்கிற பெயர்ல ஆவணப்படமா எடுத்தார். அதை இந்தியாவில் திரையிட முடியாத நிலைமை. பிறகு கனடாவில் பிலிமை டெவலப் செய்து 1977-ல் கனடாவில் வெளியிட்டார். இவரது பாபர் மசூதி இடிப்பை பின்புலமாகக் கொண்ட 'ராம்கே நாம்' ஆவணப்படமும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தவரை அதை டி.டி. யில் ஒளிபரப்ப அவரால் முடியவில்லை.

ஆவணப்பட - குறும்பட இயக்கத்தை பொறுத்தவரை உங்களது லட்சியம் என்ன?

தமிழ் ஆவணப்பட - குறும்படங்களுக்கு தமிழக அரசு பரிசும் விருதும் வழங்க வேண்டும. ஆவணப்படங்களுக்கு தணிக்கை கூடாது. அது ஜனநாயகப் பண்பை சீர்குலைக்கும். இப்போதைகக்கு இந்த கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்குதான் முயற்சி எடுத்து வர்றோம்.

நேர்காணல் - ஜான் பாபுராஜ்

0 Comments:

Post a Comment

<< Home