Friday, October 13, 2006

கடவுளின் நகரம்


சமகால லத்தீன் அமெரிக்க இயக்குநர்களில் முக்கியமானவர் பெர்னாண்டோ மெய்ரெலஸ் (Fernando Meirelles). இவர் பிறந்தது பிரசிலிலுள்ள Sao Paulo நகரத்தில். படித்தது கட்டிடக்கலை. சினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இவர் இயக்கிய Experimental videos பிரசிலியின் பிலிம் பெஸ்டிவெல்லில் பல விருதுகளை வென்றது.

இவரது 'சிட்டி ஆஃப் காட்' திரைப்படம் உலகின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் restless கேமரா இயக்கம், துல்லியமான எடிட்டிங், கதை கூறும் முறை ஆகியன நவீன சினிமாவில் தனியொரு இடத்தை இப்படத்திற்கு பெற்றுத் தந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக இப்படம் கொண்டாடப்படக் காரணம், பெர்னாண்டோ இப்படத்தில் எடுத்திருக்கும் கதைக்களன்.

குற்றவாளிகளின் உலகை மையப்படுத்தி அதிக திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவை பெரும்பாலும் ஒரு தனி நபரின் கதையினூடாக அவ்வுலகை காட்சிப்படுத்த முயல்பவை. இவ்வகை கதை கூறும் முறையால் குறிப்பிட்ட நபரின் பலங்களும், பலவீனங்களும், அவரது கருணையும், கொடூரமும் மற்றும் அவருக்கேயுரிய ஆளுமையும், அடிமைத்தனமும் அவ்வுலகின் குணங்களாக கருதப்படும் சாத்தியமுள்ளது. இந்த காரணத்தால், குற்றவாளிகள் உலகின் ஒரு பகுதியை மட்டுமே காட்சிப்படுத்தும் முயற்சியாக இப்படங்கள் சுருங்கி விடுகின்றன.

பெர்னாண்டோ மெய்ரெலஸின் 'சிட்டி ஆஃப் காட்' ஒரு தனிமனிதனின் கதை அல்ல. ஒரு இடத்தின் கதை. இளம் குற்றவாளிகள் மலிந்த பிரசிலின் சேரிப் பகுதி ஒன்றின் கதை.

பிரசிலின் தலைநகரான ரியோடி ஜெனிராவுக்கு வெளியே, நகரின் தூய்மையை பேணுவதற்கென ஏழைகளுக்கும் வீட்டில்லாதவர்களுக்கும் உருவாக்கிக் கொடுத்திருக்கும் குடியிருப்பின் பெயரே சிட்டி ஆஃப் காட். மின்சாரம் உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கடவுளின் நகரில் இயல்பாக உருவாகும் இளம் குற்றவாளிகள் உலகை எந்த 'சிம்பதி' கண்ணாடியும் இன்றி அணுகி ஆராய்கிறது படம்.

இந்நகரை சேர்ந்த ராக்கெட் (Rocket) எனும் பத்திரிகை புகைப்பட கலைஞனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என மூன்று காலகட்டத்தை விவரிக்கிறது படம்.
அறுபதுகளில் சிறுவனாக இருக்கும் ராக்கெட், புகைப்பட கலைஞனாக வேண்டும் என விரும்புகுறான். அவன் வயதையொத்த Li'l Dice-ன் விருப்பம் கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் குவிந்துள்ளது.

இளைஞர்களான Goose, Clipper மற்றும் ராக்கெட்டின் அண்ணன் Shaggy ஆகியோருடன் மோட்டல் ஒன்றை கொள்ளையடிக்க செல்கிறான் Li'l Dice. அங்கு மற்றவர்களின் உத்தரவை மீறி, அவர்களுக்கு தெரியாமல் மோட்டலில் தங்கியிருக்கும் அனைவரையும் Li'l Dice சுட்டுக் கொல்கிறான். இதனையடுத்து Shaggy, Clipper, Goose மூவரையும் போலீஸ் தேடுகிறது. Clipper மனம் திருந்தி வேலைக்குச் செல்லும் முடிவை எடுக்கிறான். காதலியுடன் தப்பிக்க நினைக்கும் Goose போலீஸால் சுட்டுக் கொல்லப்படுகிறான். தன்னிடம் ஆரம்பம் முதலே கடுமையாக நடந்து கொள்ளும் Shaggyயை Li'l Dice சுட்டுக் கொல்கிறான். இந்த கொலைகளை செய்யும்போது Li'l Dice-ன் வயது பத்தை தாண்டியிருக்கவில்லை.

எழுபதுகளில் ராக்கெட் தன்னுடன் படிக்கும் Angelica -வை விரும்புகிறான். தன்னுடைய கன்னிமையை அவளிடம் இழக்க ஆசைப்படுகிறான். இந்த காலகட்டத்தில் Li'l Dice-யும் அவனது நண்பன் பின்னியும் (Binny) சிட்டி ஆஃப் காடின் மிகப்பெரிய கொள்ளைக்காரர்களாக உருவாகிறார்கள். Li'l Dice தனது பெயரை Li'lz என மாற்றிக் கொள்வதுடன், அந்நகரின் அனைத்து போதைப்பொருள் வியாபாரிகளையும் சுட்டுக் கொல்கிறான். அவர்களின் போதைப்பொருள் சாம்ராஜ்யம் Li'lz வசம் வருகிறது. பின்னியின் நண்பன் கேரட் (carrot) மட்டும் இந்த அழித்தொழிப்பிலிருந்து தப்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில் பின்னியும், ஏஞ்சலிகாவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இருவரும் பண்ணை ஒன்றை வாங்கி இந்த குற்ற உலகிலிருந்து முழுமையாக விலகியிருக்க முடிவு செய்கிறார்கள். அதற்கான பிரிவு உபசார பார்ட்டியில் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறான் பின்னி. இந்தக் கொலைக்கு கேரட்டே காரணமென பழிவாங்க புறப்படுகிறான் Li'lz. வழியில் Knockout Ned என்பவனின் காதலியை கற்பழிப்பதுடன் அவன் தம்பியையும் சுட்டுக் கொல்கிறான். Li'lz - யை கொலை செய்ய முடிவெடுக்கும் நாக்அவுட் நெட் கேரட்டுடன் சேர, மிகப் பெரிய 'கேங் வார்' ஆரம்பமாகிறது.

படத்தின் கதை லீனியராக ஒரே நேர்கோடாக தெரிந்தாலும், அதனை நான்-லீனியராக பிளாஷ் பேக் யுக்தியின் மூலம் முன்னுக்குப் பின்னாக அடுக்கி படத்திற்கு கலாபூர்வமான அழகை தந்திருக்கிறார் படத்தின் திரைக்கதையாசிரியர் Braulio Mantovani.

படத்தில் பார்வையாளர்களை அதிர வைப்பது ஐந்து முதல் பத்து வயது நிரம்பிய சிறுவர்கள். போதைப்பொருள் வியாபாரத்தின் டெலிவரி பாயாக, டீலர்களாக இந்த சிறுவர்களே இருக்கிறார்கள். துப்பாக்கி சாதாரண விளையாட்டுப் பொருளாக இவர்களிடம் புழங்குகிறது. சாதாரண முதல் அசாதாரண காரணங்கள் வரை அனைத்திலும் இந்த சிறுவர்களே கொல்பவர்களாகவும் கொல்லப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். படத்தின் இறுதியில் Li'lzயை இச்சிறுவர்களே கொலை செய்கிறார்கள்.

படம் கதையின் இறுதிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. போலீஸ் மற்றும் Li'lz - யின் போதைக் கும்பல் என இரு ஆயுதப் படைகளுக்கு நடுவே சிக்கிக்கொள்கிறான் ராக்கெட். பதட்டத்துடன் தப்பிக்க அவன் முயற்சிக்கும்போது,காட்சி dissolve ஆகி, அறுபதுகளில் ராக்கெட் சிறுவனாக இருந்த காலகட்டத்திற்கு செல்கிறது. இது போன்ற பிளாஷ்பேக் யுக்தியின் வழியாக Shaggy, Goose, Carrot, Blacky, Knockout Ned, நாக்-அவுட் நெட்டை கொலை செய்யும் சிறுவன் என அரை டஜன் நபர்களின் கதை விவரிக்கப்படுகிறது. இத்தனை பிளாஷ்பேக்குகளையும் கதையின் ஓர்மை சிதையாமல் படத்தில் பொருத்தியிருப்பது திரைக்கதையின், இயக்கத்தின், எடிட்டிங்கின் சாதனை.

சம்பவங்களை கூறும் முறையிலும் பல இடங்களில் ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர். ஏஞ்சலிகாவுக்கு போதைப்பொருள் வாங்க தனது முன்னாள் பள்ளித் தோழனும், போதைப் பொருள் டீலருமான பிளாக்கியை காணச் செல்கிறான் ராக்கெட். பிளாக்கியின் அபார்ட்மெண்டில் இருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. Li'lz தனது ஆள்களுடன் உள்ளே வருகிறான். பிளாக்கியிடம், இது உன்னுடைய அபார்ட்மெண்ட் என்று சொன்னாயாமே? என்று கேட்கிறான் Li'lz. இப்போது கேமரா அதே கோணத்தில் நிலைத்து நிற்க, காட்சி dissolve ஆகி, அபார்ட்மெண்டின் கதை என்ற சப்-டைட்டிலுடன் அந்த அபார்ட்மெண்ட் எப்படி பிளாக்கியின் கைக்கு வந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இதில் கேமரா ஒரே கோணத்தில் நிலைத்து நிற்க, கதாபாத்திரங்கள் பிரேமுக்குள் வந்து செல்வதை வைத்தே கதை விளக்கப்படுகிறது.

மற்றொரு காட்சியில், Li'lz சிறுவன் ஒருவனை கேரட்டிடம் அனுப்புகிறான். Knockout Ned-ஐ கேரட் கொலை செய்தால் Li'lz கேரட்டை தொந்தரவு செய்ய மாட்டான் என்ற சேதியை கேரட்டிடம் கூறுகிறான் சிறுவன். இதை சொன்ன பிறகே நாக் அவுட் நெட் அங்கு இருப்பதை சிறுவன் கவனிக்கிறான். பயத்தில் கதவை திறந்து ஓடும் அவனை கேரட்டின் ஆள்கள் துரத்துகிறார்கள்.

இப்போது திரையில் இரண்டு காட்சிகள் காட்டப்படுகிறது. ஒன்று, கேரட் நாக் அவுட் நெட்டிடம் பேசுவது. மற்றது, ஓடும் சிறுவனை கேரட்டின் ஆள்கள் துரத்திப் பிடிப்பது. சிறுவனை பிடித்து, கேரட் இருக்கும் அறைக்குள் கொண்டு வரும்போது, மீண்டும் திரை ஒரே காட்சிக்கு திரும்புகிறது.

வறுமை, இழப்பு, சோகம் என பார்வையாளர்களை உணர்ச்சியேற்றக்கூடிய அனைத்து அம்சங்கள் இருந்தும் அந்த திக்கில் படத்தை நகர்த்தவில்லை பெர்னாண்டோ மெய்ரெலஸ். சதா நகர்ந்தபடி இருக்கும் கேமரா, காட்சிகளை வேகமாக நகர்த்தும் துரித எடிட்டிங், டாக்குமெண்ட்ரியை எடுக்கும் மனோநிலை ஆகியவற்றின் வழியாக உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி, பிரசில் சேரிப்பகுதி வாழ்வின் நிலையாமையை படத்தில் பிரதானப்படுத்துகிறார். இதற்கு Antonio, Pinto மற்றும் Ed Cortes-ன் இசை பெரும் பங்களிப்பு செய்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றியவர் Cesar Charlone. எடிட்டிங் Daniel Rezende.

பெர்னாண்டோவின் இப்படம் எழுத்தாளர் Paulo lins எழுதிய 'சிட்டி ஆஃப் காட்' நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 600 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் 350 கேரக்டர்களை நாவலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். கதையை படமாக்கிய விதத்தில் நாவலாசிரியரை பெர்னாண்டோ எளிதாக புறந்தள்ளிவிட்டார் என்றே சொல்லவேண்டும்!


ஆக்கம் : ஜான்பாபுராஜ்

1 Comments:

Blogger இளங்கோ-டிசே said...

City of God படம் குறித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். நன்று.
....
இயலுமாயின் Templateன் பின்னணி வர்ணத்தை அல்லது எழுத்துருவின் வர்ணத்தை மாற்றப் பார்க்கவும். தொடர்ந்து வாசிக்க சற்று கடினமாய் இருக்கிறது. நன்றி.

5:56 AM  

Post a Comment

<< Home