Saturday, September 03, 2011

டயானா ம‌ரியம் குரியன் நயன்தாராவான கதை

டயானா ம‌ரியம் குரியனாக இருந்த நயன்தாரா இந்துவாக மதம் மாறியிருக்கிறார். இதனை கிறிஸ்தவ அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. நயன்தாராவுக்குப் பதில் பிரபுதேவா மதம் மாறியிருந்தால் இந்நேரம் ராமகோபாலன் கொடி பிடித்திருப்பார். இப்போதோ இந்து மதத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்திருக்கிறது. ராமகோபாலன் கப்சிப்பாக, கிறிஸ்தவ அமைப்புகள் குதிக்கின்றன. வேதாகமத்தில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த வார்த்தைகளை பயன்படுத்தி தூற்றியிருக்கிறார்கள். வேதாகம சாபம் சும்மா விடாது என நடுத்தெருவில் மண்ணெடுத்து சாபமிட்டிருக்கிறது ஒரு அமைப்பு. இவர்களை மனதில் வைத்துதான் ஏசு, உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல் எறியட்டும் என்று கூறியிருக்க வேண்டும். பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெ‌ரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்.

நயன்தாரா விரைவில் மாஸ்டரை திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்பது உறுதி. இனி அவரை வைத்து ஸ்கூப் எழுத முடியாதே என்ற கலக்கம் பத்திரிகைகளுக்கு. மதமாற்றம், கிறிஸ்தவ அமைப்புகளின் கண்டனம் என்று சூழல் ஜெகஜோ‌தியாக இருக்கிறது. தவிர கள்ளச் சாமியார்களின் படுக்கையறை அந்தரங்கங்களும் இப்போதைக்கு இல்லை. வாரமிருமுறை பத்திரிகைகள் தங்கள் ஃபோகஸை நயன்தாராவை நோக்கி திருப்பி, நயன்தாராவின் ரகசியம், எ‌க்‌ஸ்ளூஸிவ்ஸ் என்று தட்டி விடுகின்றன. இந்த செய்திகளெல்லாம் சேர்ந்து நயன்தாராவை பிடிவாதக்காரராக, நினைத்ததை சாதிக்க எதையும் செய்பவராக, வளர்ப்பானேன்... ஏறக்குறைய ஒரு வில்லியின் சித்திரத்தை ஜனங்களின் பொதுப்புத்தியில் பதிய வைத்திருக்கின்றன. யாருக்கு‌த் தெ‌ரியும்... ஒருவேளை இதில் உண்மையும் கலந்திருக்கலாம்.

இந்த நேரத்தில் நயன்தாராவின் ஆரம்பகால படங்கள் நினைவுக்கு வருகின்றன. சத்தியன் அந்திக்காடு தனது மனசின் அக்கரை படத்தில் டயானா ம‌ரியம் குரியனை நயன்தாரா என்ற பெய‌ரில் அறிமுகப்படுத்தினார். செம்மீன் ஷீலா நீண்ட காலத்திற்குப் பிறகு அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஜனங்களின் கவனம் முழுக்க அவர் மீது குவிந்திருந்தது. இன்னசென்ட், ஜெயராம், சித்திக் என நடிப்பில் மலை முழுங்கியவர்கள் வேறு படத்தில் இருந்தனர். கம்யூனிஸ்டும், எளிய விவசாயியுமான ஒடுவில் உண்ணி கிருஷ்ணன், சுகுமாரி தம்பதியின் மகளாக நயன்தாரா நடித்திருந்தார். எளிய வாயில் புடவை. மேக்கப் இல்லாத முகம். முதல் படம் அவரைப் பற்றி மலையாளிகள் மனதில் உருவாக்கிய சித்திரம் அவரது கதாபாத்திரத்தைப் போலவே எளிமையாக இருந்தது. வெளுத்த வெள்ளந்தியான பெண்.

இந்த இமேஜை மெருகேற்றுவது போலவே அடுத்தடுத்தப் படங்கள் நயன்தாராவுக்கு அமைந்தன. மோகன்லாலின் விஷ்மயதம்பத்தில் நயன்தாரா சக்கை போல் பெருத்திருந்தார். நாலு படம் தாக்குப் பிடித்தால் அதிகம் என்றுதான் தோன்றியது. கதையும் குளறுபடி. கோமா ஸ்டே‌ஜில் இருக்கும் நயன்தாராவின் ஆவி உதவி கேட்டு மோகன்லாலிடம் தஞ்சம் பெறுவதாக கதை அமைத்திருந்தார்கள். இன்னொரு மணிசித்திரதாழுக்கு ஆசைப்பட்டு பாசில் குழப்பியடித்திருந்தார்.

நாட்டுராஜாவிலும் மோகன்லால்தான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் வளர்ந்த சிறுமி என்ற எண்ணத்தையே நயன்தாராவின் தோற்றம் தருகிறது. படத்தைப் பார்க்க முடியாதவர்கள் யு டியூபில் நாட்டுராஜாவின் பாடல் காட்சியை பார்க்கலாம். வெள்ளை உடையில் நயன்தாரா வாய் நிறைய சிரிப்புடன் வளைய வருவார். அவரது வெள்ளந்தி சித்திரத்தின் உச்சம் எனலாம் இந்தப் படத்தை.

மம்முட்டியுடன் நடித்த ராப்பகலில் பெ‌ரிய வீட்டில் வேலை செய்யும் ஏழைப் பெண். வெகுளி. யானை மீது ஏறி மம்முட்டி‌யிட‌ம் திட்டு வாங்கி ஓடும் காட்சி இப்போதும் மனக்கண்ணில் உள்ளது. இதுதவிர தக்சரவீரன் என்ற படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்போது யோசிக்கையில் இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெ‌ரிகிறது. ஆரம்பகால படங்களில் அவர் எளிய வெகுளிப் பெண்ணாகவே சித்த‌ரிக்கப்பட்டிருந்தார். அவரது குழந்தமை நிரம்பிய முகம் அதற்கு மிகவும் அணுக்கமாக இருந்தது. 2005ல் தமிழில் அறிமுகமான போது வெள்ளந்தி சாயம் வெளுக்கத் தொடங்கியது. முதல் படம் ஹரியின் ஐயா. தார் சாலையில் அத்திரி புத்திரி என்று குட்டை ஸ்கூல் யூனிஃபார்மில் தொடைகள் தெ‌ரிய நயன்தாரா ஆடினார். அதுவரை கெண்டைக்காலுக்கு மேல் அவரது உடை உயர்ந்ததில்லை. டும்டும் பிப்பீ டும்டும் பிப்பீ என்று இடையை ஆட்டிய போதுதான் ரசிகன் முதலில் அவ‌ரின் தொப்புளை த‌ரிசித்தான். அதன் பிறகு நயன்தாரா கவர்ச்சி ஏணியிலிருந்து இறங்கவேயில்லை.

சிம்புவை காதலித்த போதும், மாஸ்ட‌ரின் காதலில் விழுந்த போதும் நயன்தாராதான் தலைப்பு செய்தி. அதிலும் மாஸ்ட‌ரின் காதல் விஷயத்தில் மீடியாக்கள் அவரை பிழிந்து எடுத்தன. திருமணமான ஒருவரை எப்படி காதலிக்கலாம், ரமலத் என்ற அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா? மகளிர் அமைப்புகள் பிளிறிக் கொண்டு இறங்கியதைப் பார்த்தால் நயன்தாராவை சட்னி ஆக்கிவிட்டுதான் அடங்குவார்கள் போலிருந்தது. அனேகமாக முடி திருத்துவோர் சங்கம் தவிர்த்து அனைத்து சங்கங்களும் இந்த அறப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டன.

இதில் இன்னொரு வேடிக்கையும் நடந்தது. திருமணமான குப்பனோ சுப்பனோ காதலித்தால் ஊடகங்கள் கள்ளக் காதல் என்று நாலுகாலத்தில் செய்தி வெளியிடும். அதுவே பிரபலங்களாக இருந்தால் கள்ளக் காதல் காதல் என்று சுருங்கி காவியத்தன்மை பெறும். இந்த பாரபட்சத்தால் அறச்சீற்றம் கொண்ட சிலர் பிரபுதேவாவின் காதலை கள்ளக் காதல் என்றும் நயன்தாராவை கள்ளக் காதலி என்றும் குறிப்பிட்டு தங்களது சீற்றத்தை தணித்துக் கொண்டனர்.

நயன்தாராவை இப்போது வெள்ளந்தியான பெண் என்று சொன்னால் சிரிப்பார்கள். அவர் கடந்து வந்த பாதை காரியவாதி என்ற பிம்பத்தை அவருக்கு அளித்திருக்கிறது. நமது ஆச்ச‌ரியமெல்லாம், மனசின் அக்கரையில் அறிமுகமான டயானா ம‌ரியம் குரியனின் குழந்தைத்தனமான முகத்துக்குப் பின்னால் இப்படியொரு முதிர்ச்சியான நயன்தாரா ஒளிந்திருந்தாரா என்பதுதான். இல்லை சினிமா என்ற வலிமையான ஊடகம் அவரை மாற்றியதா? உண்மை எதுவாக இருந்தாலும் டயானா ம‌ரியம் குரியன் என்ற வெகுளியான பெண்ணாக புறத் தோற்றத்தில் கூட நயன்தாராவால் இனி மாறுவதென்பது சாத்தியமில்லை. இதனை பறைசாற்றுவது போல் அபத்த நாடகத்தின் உச்ச காட்சியைப் போல் அமைந்திருக்கிறது ஞாயிறன்று நடந்த நயன்தாராவின் மதமாற்றம். ஒரு ரசிகனாக நயன்தாராவிடம் கூற இருப்பது ஒன்றுதான்.

குட்பை... டயானா ம‌ரியம் குரியன்.

john babu raj

0 Comments:

Post a Comment

<< Home