Saturday, September 03, 2011

கௌபாய்ஸ் & ஏலியன்ஸ் - தொடரும் ஹாலிவுட்டின் தங்க வேட்டை

தங்க வேட்டையை பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கோல்ட் ரஷ் படத்தில் அமெ‌ரிக்கர்களின் தங்கத்தின் மீதான ஆசையை சாப்ளின் கிண்டல் செய்திருப்பார். தங்க வேட்டையை பற்றியதுதான் அப்படமும். மெக்கனஸ் கோல்டு பற்றி பேசினால் நாற்பது வயதுக்கு மேல் உள்ள சிலராவது திரும்பிப் பார்ப்பார்கள். தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திய தங்கப் புதையலை பற்றிய படம்.

இந்தியர்களுடன் ஒப்பிட்டால் அமெ‌ரிக்கர்கள் தங்கம் பயன்படுத்துவது இல்லையோ என்று தோன்றும். பெண்களின் காதில் கடுகுமணி அளவில் தங்கம் தென்பட்டால் அபூர்வம். இருந்தும் ஹாலிவுட்டின் தங்க வேட்கை அப்படியேதான் உள்ளது. தங்க வேட்டை டாலர்களை அள்ளித் தரும் கதைக்களம் என்பதை ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அறியும்.

Jon Favreau இயக்கியிருக்கும் கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் திரைப்படமும் தங்க வேட்டையை பற்றியதே. பாகிஸ்தான் தீவிரவாதிகளை லெக் ஃபைட்டால் ஓரம்கட்டிய விஜயகாந்த் ஒருகட்டத்தில் சலிப்பாகி வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளை தேடிச் சென்ற கதைதான் இதுவும். எவ்வளவு நாள் அமெ‌ரிக்கர்கள் தங்கப் புதையலை தேடிப் போவது? ஒரு மாறுதலுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தங்கம் தேடி அமெ‌ரிக்காவின் அரிஸோனாவுக்கு வருகிறார்கள். அவர்களை கௌபாய்ஸ் எப்படி விரட்டி அடித்தார்கள் என்பது கதை.

படத்தின் ஆரம்பத்தில் பாலைவனத்தில் கண் விழிக்கிறார் டேனியல் க்ரேக். காலில் செருப்பில்லை, இடுப்பில் ரத்தகாயம், கை மணிக்கட்டில் வினோதமான மெட்டல் பிரேஸ்லெட். தனது பெயர்கூட அவர் நினைவில் இல்லை.

நல்லதொரு கமர்ஷியல் படத்துக்கான எதிர்பார்ப்புடன் தொடங்குகிறதது படம். அதன் பிறகு ஹாலிவுட்டின் கிளிஷேக்கள் ஒவ்வொன்றாக அணிவகுக்கின்றன. படம் முடியும் போது இதுக்கா இவ்வளவு பிரமாண்டம் என மனதில் அயர்ச்சி ஒட்டிக் கொள்கிறது.

ஹாலிவுட்டுக்கு ஒரு வசதி. எதை கற்பனை செய்தாலும் அதனை எடுக்கக் கூடிய விஸ்தீரண வியாபாரம் அவர்களுக்கு உண்டு. தொழில்நுட்பம் குறித்து சொல்லத் தேவையில்லை. தேவைப்பட்டால் புதிய தொழில்நுட்பத்தையே உருவாக்குவார்கள். கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸிலும் இதுதான் கை கொடுக்கிறது.

டேனியல் க்ரேக் வழிப்பறி கூட்டத்தின் தலைவர். தேடப்படும் குற்றவாளி. தங்கத்தை தேடிச் செல்கிறது அவர்கள் கூட்டம். கொஞ்சம் தங்கத்துடன் க்ரேக் வீடு திரும்புகிறார். அதே தங்கத்துக்காக வரும் வேற்றுக்கிரகவாசிகள் க்ரேக்கின் மனைவியை கொல்கிறார்கள், க்ரேக் காயத்துடன் தப்பிக்கிறார். வேற்று கிரகவாசிகளை அழிக்கும் பிரேஸ்லெட் சந்தர்ப்பவசமாக க்ரேக்கின் கையில் மாட்டிக் கொள்கிறது.

பாலைவனத்தில் விழித்துப் பார்க்கும் க்ரேக்குக்கு எதுவும் நினைவில்லை. அவரை ஒரு பெண் பின் தொடர்கிறாள். ஏலியன்ஸின் தாக்குதலில் மரணமடையும் அவளை நெருப்பில் போட உயிர்த்தெழுகிறாள். அவனும் ஒரு வேற்று கிரகவாசிதான். ஆனால் வேறு கிரகம். தங்கத்துக்காக பூமிக்கு வந்திருக்கும் ஏலியன்ஸ்கள் அவளது கிரகத்தையும் தாக்கி அழித்துவிட்டார்கள். இவள் மட்டும் தப்பித்து பூமியை காப்பாற்றும் பொருட்டு மனிதர்களுக்கு உதவ வந்திருக்கிறாள்.

மலைகளுக்கு நடுவில் தங்களது விண்கலத்தை நிறுத்தி ஏலியன்ஸ்கள் தங்கம் எடுக்கிறார்கள். இறுதிப் போர் நடக்கிறது. மனிதர்கள் ஏலியன்ஸை வெற்றிக் கொள்கிறார்கள். க்ரேக்கின் பிரேஸ்லெட்டை உபயோகித்து விண்கலத்தை தகர்ப்பதுடன் அந்தப் பெண்ணும் இறந்து போகிறாள்.

இதில் உடனடியாக வரும் கேள்வி படத்தில் ஹாரிசன் ஃபோர்டுக்கு என்ன வேலை? கிளைமாக்ஸ் வரை ஹாரிசன் ஃபோர்டுக்கு நாலுவ‌ரி டயலாக்தான். கிளைமாக்சில் ஒன்றிரண்டு ஏலியன்ஸை கொல்கிறார், அவ்வளவே. கொசு அடிக்க பீரங்கி உபயோகித்த கதைதான்.

கிளி‌ண்ட் ஈஸ்ட்வுட்டின் கௌபாய் படங்களில் மனதை பறி கொடுத்தவர்கள் என்றால் இந்தப் படம் ஒரு சோதனை. கௌபாய் படங்களின் கதாபாத்திரங்களின் மூடும், தன்மையும் வேறு மாதிரி. அழுக்கும் சோம்பலுமாக அது வேறு உலகம். தனித்துவமான ஃபிரேமிங், ஒளிப்பதிவு, இசை. சொல்வதைவிட பார்ப்பது நலம். பத்துப் படங்கள் வேண்டாம், இரண்டு போதும். செர்‌ஜியோ லியோன் இயக்கத்தில் 1966ல் வெளிவந்த தி குட் தி பேட் அண்ட் தி அக்ளி, 1968ல் வெளியான ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட். இரண்டு படங்கள் கூட வேண்டாம். ஒன்று போதும். அதுவும் கஷ்டம் எனில் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட் படத்தில் ஹீரோ ரயிலில் வந்திறங்கும் ஆரம்பக் காட்சி மட்டும் போதும். கௌபாய் படங்களின் உலகம் புரிந்துவிடும்.

Jon Favreau இயக்கியிருக்கும் படத்தில் கௌபாய் படங்களின் அழுக்கு இருக்கிறது ஆன்மா இல்லை. க்ரேக்கின் சண்டை ஜேம்ஸ்பாண்ட் கௌபாய் உடையில் சாகஸம் செய்வது போலிருக்கிறது. எனினும் படத்தின் சுவாரஸியமூட்டும் அம்சம் இவர்தான். கட்டுடலும், அதைவிட இறுகிய முகமுமாக அசத்துகிறார். ஏலியன்ஸைப் பார்க்க பிரிடேட்டர், ஜேம்ஸ் கேமரூனின் ஏலியன் இரண்டின் கலவை போலிருக்கிறது. அவை தாவி சண்டையிடுகையில் ப்ரிஸ்ட் படத்தின் ட்ராகுலாக்கள் நினைவில் வந்து போகின்றன. ஒரே வித்தியாசம் அவைகளுக்கு கண்கள் இல்லை, இதற்கு உண்டு.

கௌபாய் ஃப்ளேவர் இல்லாதது போலவே ஏலியன் படங்களின் விறுவிறுப்பும் இதில் இல்லை. ப்ரிடேட்டர், ஏலியன் படங்களில் மர்மத்தை படிப்படியாக விலக்கும் திரைக்கதை சாதுரியத்தின் சாயல்கூட இதில் இல்லாதது ஏமாற்றமே.

தங்கம் அணிகலனாக அழகுக்கு பயன்படுகிறது. அதுதவிர ஆக்கப்பூர்வமான பயனேதும் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. அப்படியிருக்க அகோரமான ஆடை அணியாத ஏலியன்ஸுக்கு எதற்கு டன் கணக்கில் தங்கம்?

கதை விவாதக்குழு இந்த‌க் கேள்விக்கு பதில் தேடியிருந்தால் கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் படத்தை பார்க்கும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது.

john babu raj

0 Comments:

Post a Comment

<< Home