Saturday, September 03, 2011

ரோனின் - மாஸ்டர் இல்லாத சாமுராய்

ரோனின் என்பது ஜப்பானிய சொல். மாஸ்டர் இல்லாத சாமுராய்களை ரோனின் என்று அழைப்பது ஜப்பானிய வழக்கம். ஜான் பிரான்கென் கெய்மர் 1998ல் இயக்கிய இந்த ஆ‌க்சன் படத்துக்கும் ஜப்பானுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால் மாஸ்டர்கள் இல்லாத சாமுராய்கள் என்ற விளக்கத்துக்கு இப்படம் சாலப் பொருத்தம்.

ஹாலிவுட் ஆ‌க்சன் படம் என்றால் செட்டுகளை அடித்து நொறுக்குவதும், கார்களை பறக்கவிடுவதும்தான் என்ற எண்ணத்தை தவறாக்கும் குறைவான எண்ணிக்கையிலான படங்களில் ரோனினும் ஒன்று. படத்தின் கதை மிகச் சாதாரணமானது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் மெட்டல் சூட்கேஸை கைப்பற்ற வேண்டும். இந்த ஒருவ‌ரிதான் கதை. ஆனால் அதற்கு திட்டமிடுவதும், அதனை செயல்படுத்துவதும் என்றென்றைக்கும் ரசிக்கக்கூடியதாக மாற்றியிருப்பது திரைக்கதையின், இயக்கத்தின், எடிட்டிங்கின், இசையின் தனித்தன்மை எனலாம்.

படத்தின் மைய கதாபாத்திரம் சேம். சூட்கேஸை கைப்பற்ற தேர்வு செய்யப்பட்ட நபர்களில் ஒருவர். இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ராபர்ட் டி நீரோ. தனது திட்டத்தை செயல்படுத்தும் முன் அவர் மேற்கொள்ளும் ஆயத்த நடவடிக்கைகள், சூட்கேஸை கவர்தல் என்ற எளிமையான நிகழ்வின் ஆபத்தான பக்கங்களை சொல்லாமல் சொல்லிவிடுகின்றன. இந்தக் குழுவின் இன்னொரு மிஸ்டர் கூல், நடிகர் ழான் ரெனோ.

ஆ‌க்சன் படமான இதனை அற்புதமான படமாக மாற்றுவது படத்தின் நிதானம் மற்றும் அறிவு‌‌‌‌ஜீவித்தனமான திரைக்கதை. திட்டத்துக்கு தோதான நபர்களை ஒன்று சேர்ப்பதிலிருந்து மெதுவாகத் தொடங்குகிறது படம். சூட்கேஸை கைப்பற்றுவதற்கு முன்பாக ஆயுதங்களை சேக‌ரித்தல், பாதுகாப்பு எத்தகையது என்பதை சோதித்தறிதல் என்று பரபரப்பேயில்லாமல் அடுத்தடுத்து நகர்கிறது திரைக்கதை. இப்படிச் சொல்லும் போது மிக மெதுவாக நகரக்கூடிய படம் என்ற பிம்பம் ஏற்படலாம். அது தவறு.

உதாரணமாக ஆயுதங்களை சேக‌ரிக்கும் போது எதிர்தரப்பு பணத்தை வாங்கிக் கொண்டு இவர்களை சுட்டுக் கொல்ல முயல்கிறது. படகின் வெளிச்சத்தில் ஸ்னைப்பர் ஒருவன் பாலத்தில் பதுங்கியிருப்பதை கவனிக்கும் ராபர்ட் டி நீரோ அவர்களின் சதியை முறியடிக்கிறார். அவருக்கு இது சதி என்பது எப்படி தெ‌ரியும்?

படத்தின் பிற்பகுதியில் இந்த‌க் கேள்வியை ழான் ரெனோ அவ‌ரிடம் கேட்கிறார். அதற்கு நீரோ, சந்தேகம் வந்தால் சந்தேகமேயில்லை... அதில் ஏதோ இருக்கிறது. இதுதான் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த முதல் பாடம் என்கிறார். அவர்கள் என்றால் யார்? ரெனோ கேட்க நீரோவின் பதில் இப்படி வருகிறது, தெ‌ரியாது. இதுதான் அவர்கள் கற்றுக் கொடுத்த இரண்டாவது பாடம்.

இந்த உரையாடலில் வெளிப்படுவதுபோன்றே மர்மமாக இருக்கின்றன நீரோ யார் என்பதும். அவர் யார் என்பது கடைசி வரை தெ‌ரிவதேயில்லை. அதேபோல் பல உயிர்களை பலி வாங்கும், பல நாட்டவர்களால் தேடப்படும் அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பதும் கடைசி வரை சொல்லப்படுவதில்லை.

படத்தில் கார் துரத்தல் காட்சிகள் இரண்டு வருகின்றன. வாத்தியங்களை முழக்காமல், கேமராவை நடுங்கவிடாமல் காரின் வேக உறுமலை மட்டும் பின்னணி இசையாகக் கொண்டு அருமையாக படமாக்கியிருக்கும் விதம்  எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பை தராது என உறுதியாகச் சொல்லலாம். ஜப்பானிய சாமுராய்களின் பொம்மையையும், அவர்கள் கோட்டையையும் தத்ரூபமாக செய்யும் நுண்கலை கலைஞ‌ரின் அறிமுகம் படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. அவர்தான் மாஸ்டர்கள் இல்லாத சாமுராய்களின் கதையை சொல்கிறார்.

நிழல் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் அதற்கேற்ப ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் கும்பல் காட்சிகளில்கூட எவரும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் உடை அணியாமல் பார்த்துக் கொண்டார்கள் என்ற செய்தி ஒளிப்பதிவு மற்றும் படத்தின் மூட் சம்பந்தமாக படக்குழுவினர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.

நீங்கள் நல்ல ஆ‌க்சன் படப் ‌பி‌ரியராக இருந்தால் ரோனின் உங்களின் தவிர்க்க முடியாத சாய்ஸ்.

john babu raj

1 Comments:

Anonymous விஜய் said...

சாகச திரைப்படங்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படைப்பு - என்று கூறத்தோன்றுகிறது. ஒரேவரி கதை என்பது இன்றைய திரைப்படங்களின் கதைக்களமாக அமைந்திருப்பதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அது ஒருபுறம் கலைஞர்களின் சிந்தனை வறட்சியை எடுத்துக்காட்டுகிறது; மறுபுறம் அவர்கள் தங்களின் சிந்தனையை முற்றிலுமாக வெளிப்படுத்த முடியாமல் மட்டுப்படுத்தப்பட்டு (அரசியல்ரீதியாகவும், சட்ட நெறிமுறைகள் மூலமாகவும்) தொழில்நுட்பங்களையும், ஏனைய சில விஞ்ஞான உபகரணங்களையும் கையாளும் விதத்தில் மட்டும் தங்களின் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

இருந்தபோதினும்,இன்றைய உலக சூழலின் மனித வாழ்க்கையும், உணர்வுகளும் என்ன நிலையை அடைகின்றன என்பதை எடுத்துக்காட்டும், ஹாலிவுட்டிற்கு உள்ளே வெகு குறைவாகவே இருநாலும், அதற்கு வெளியிலிருந்து நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

இவை தான் மனிதயினத்தின் இன்றைய கதியை சுருக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்கின்றன. அவற்றை வெளியில் கொணர வேண்டியது அவசியமாகும்.

4:38 AM  

Post a Comment

<< Home