Saturday, September 03, 2011
சீமான் - செந்தமிழனா? ஜால்ரா தமிழனா?
ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?
கௌபாய்ஸ் & ஏலியன்ஸ் - தொடரும் ஹாலிவுட்டின் தங்க வேட்டை
டயானா மரியம் குரியன் நயன்தாராவான கதை
லெனின் விருது விழா - மௌனத்தின் பேரோசை
Wednesday, June 18, 2008
Road
Road
நான் ஸ்ரீனி என்று அறியபடுகிறேன், இந்த உலகத்தில் உள்ளது என்று நம்பபடுகிற உயிரிகளில் நானும் ஒரு உயிரி. இயற்கை என்னில் ஆதிக்கம் செலுத்துவதால் என்னால் அதை தாண்டி என்னால் ஒன்றுமே யூகிக்க இயலவில்லை.இயற்கையின் வளர்ச்சியை அழகை, ஆபத்தை, வீரத்தை, பிரம்மாண்டத்தை, அமைதியை விவரிக்க என்னால் இயலாது. இயற்கை அதன் எல்லா சுயத்தையும் நமக்கு கொடுத்துள்ளது அது அதன் இயற்கை.நான் இயற்கையை தரிசிக்கும் அனைத்து இடங்களிலும் அதன் அருகிலேயே அல்லது அதனுடனே ஒரு சாலை எனக்கு தென்படுகிறது.என்னால் இயற்கையும் சாலையும் பிரித்து பர்ர்க்க முடியவில்லை ஆம் சாலை.
உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் உங்களை வரவேற்க ஒரு சாலை காத்து கொண்டு இருக்கும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் அதை நம்மை அறியாமல் பார்த்து பழகி கொண்டுதான் இருக்கிறோம், ஒரு சாலை எங்கு துவங்கி எங்கு முடிகிறது என்ற வரையறை இல்லாமல் தனக்குள் ஒரு பிரம்மாண்டத்தை வைத்து கொண்டு அமைதியாக இருக்கிறது சாலை.சாலையின் வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்கள் அழகு இயற்கையின் மேல் வரைந்த ஒரு அழகிய சித்திரமாக காட்சி அளிக்கிறது.நாம் பயணிக்கும் பொழுது நம் பலதரப்பட்ட மக்களை, விலங்குகளை, மரங்களை, நதிகளை, காடுகளை கண்டு நம்முள் எழும் அந்த மகிழ்சிக்கு அடித்தளம் அந்த சாலை.
சாலை அது ஒற்றையடி பாதையாக இருந்தாலும், அகன்று விரிந்த நகர்புற சாலையாக இருந்தாலும் வெறிச்சோடி கிடக்கும் சாலையாக இருந்தாலும், இருபுறம் மரங்கள் சூழ நிழல் தரும் சாலையாக இருந்தாலும் அவை தனக்கே உரிய வசீகரத்தை கொண்டுள்ளது. அது மலைகளுக்குள் ஊடுருவும், நதிகளின் குறுக்கே பாயும் அதற்கு எத்தனை கிளைகள், பிரிவுகள் இருந்தாலும் எதோ ஒரே ஒருமித்த லட்சியத்தை கொண்டுள்ளது போன்று அவைகள் தனது பணியை செய்து கிடக்கும்.
சாலைகளை பற்றி நான் எழுத எழுத அதன் ஆச்சரியங்கள் விரிந்து கொண்டும் நீண்டு கொண்டும் செல்கின்றன சாலைகளுக்குதான் முடிவு இல்லை என் கிறுக்கல்களுக்கு உண்டு.
srini
Monday, September 24, 2007
'நிழல்' திருநாவுக்கரசு உரையாடல்
1982 முதல் 1992 வரை சென்னை பிலிம் சொஸைட்டி ரொம்ப தீவிரமா செயல்பட்டுகிட்டிருந்தது. உலக சினிமாக்களை தொடர்ந்து திரையிட்டாங்க. இதில் என்ன விசேஷம்னா, படம் 2 மணி நேரம் ஓடும். படம் பற்றிய விவாதம் படம் முடிஞ்ச பிறகு 3 மணி நேரம் நடக்கும். இந்த நடைமுறை இப்போ இல்லாம போயிடுச்சி. 1992-க்குப் பிறகு சென்னை பிலிம் சொஸைட்டி செயல்படலை. 1994-லில் சினிமா பொன்விழாவின் போது அதை கொண்டாட இங்க எந்த அமைப்பும் இல்ல. சரி, நாமே ஏதாவது பண்ணலாம்னு நண்பர்கள் சேர்ந்து, வெளிநாடுகளில் இருக்கிற நண்பர்கள்கிட்ட சிறந்த படங்களோட VHS அனுப்பச் சொன்னோம். அப்போ VHSதான். VCD, DVD எல்லாம் கிடையாது.
அதற்கு பலன் கிடைச்சதா?
லண்டன்ல இருந்த எழுத்தாளரும் விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் சில படங்கள் அனுப்பி வச்சார். அதே மாதிரி மாஸ்கோவிலிருந்த நண்பரும், வேறுபல சினிமா ஆர்வலர்களும் படங்களை அனுப்பி உதவினாங்க. அப்போதே எங்ககிட்ட எழுபது படங்கள்வரை இருந்தது. அந்தப் படங்களை ஊர் ஊரா கிராமம் கிராமமா எடுத்துப் போய் திரையிட்டோம். ஒவ்வொரு ஊர்லயும் அங்கேயுள்ள திரைப்பட ஆர்வலர்களை ஒன்று திரட்டி 'கிராமிய திரைப்பட சங்கம்' அமைச்சோம். ஏறக்குறைய ஏழு வருடம் இது தொடர்ந்தது. * இந்த காலகட்டத்தில்தான் நிழல் பத்திரிகை ஆரம்பிச்சிங்க, இல்லையா? 2001 ஜுன் மாசம், முதல் நிழல் இதழ் வெளிவந்தது. முதல் இதழ்லயே குறும்படம் பற்றி விரிவான க்ட்டுரை வெளியிட்டோம். திரைக்கலைஞர்கள், திரைப்பட விழாக்கள், திரைப்படம் சார்ந்த தொழில் நுட்பங்கள், சிறந்த திரைப்படங்களின் திரைக்கதைகள், விமர்சனம், உலக சினிமானு பல்வேறு விஷயங்களை தொடர்ந்து நிழலில் தந்துகிட்டிருக்கோம். தமிழ் குறும்படம் - ஆவணப்படம் குறித்து அதிகமாக கவனப்படுத்துவது நிழல் இதழ் மட்டும்தான்னு சொல்லலாம்.
இதற்கு ஏதாவது காரணம் உண்டா?
இங்க குறும்படம் - ஆவணப்படம் எடுத்த ஆள்கள் யாரும் அதுபற்றி வெளியே பேசவே இல்லை. சர்வதேச விழாக்களுக்கு இந்தப் படங்களை எப்படி அனுப்புறது, இந்தியாவில் இந்தப் படங்களை திரையிட வாய்ப்புகள் உண்டா, பரிசுகள் வழங்கப்படுமா உள்பட எந்த விஷயத்தையும் பகிர்ந்துக்காம மறைச்சுட்டாங்க. நிழலில் தொடர்ந்து குறும்படம் - ஆவணப்படம் பற்றி எழுதும்போது, அதுபற்றி அறிய பலரும் ஆவலா இருந்தாங்க. குறும்பட - ஆவணப்படங்களுக்காகவே சர்வதேச அளவில் விழாக்கள் நடத்தப்படுது. அதில் தேர்வாகிற படங்களுக்கு விருது, பரிசுத் தொகை எல்லாம் உண்டு. இந்தியாவிலும் கூட இவற்றை திரையிடுதற்கான விழாக்கள், அமைப்புகள், பரிசுகள் எல்லாம் இருக்கு. இதையெல்லாம் இங்கேயிருந்த மூத்த படைப்பாளிகள் பகிர்ந்துக்காம மறைச்சுட்டாங்க. இந்த வாய்ப்புகள் எல்லா தமிழ் படைப்பாளிகளுக்கும் கிடைக்கணும்ங்கிற நோக்கில் நிழல் மூலமா குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தருவித்து, பல்வேறு விழாக்களுக்கு அனுப்பி வச்சோம்.
அதற்கான பலன் நீங்கள் எதிர்பார்த்தபடி இருந்ததா?
இதுவரை இங்கேயுள்ள படைப்பாளிகளுக்கு ஆறுலட்சம் ரூபாய்வரை வாங்கிக் கொடுத்திருக்கோம். பாரிஸ்ல 26 வருஷமா பாரிஸ் நண்பர்கள் வட்டம்ங்கிற அமைப்பு இயங்கிட்டு இருக்கு. அந்த அமைப்புக்கு தமிழ் படைப்பாளிகளோட ஆவணப்பட - குறும்படங்களை அனுப்பி வச்சோம். அவங்க கட்டணம் வசூலித்து அந்தப் படங்களை பாரீஸில் திரையிட்டு எண்பதாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதை சென்னையிலுள்ள ரஷ்ய கல்சுரல் சென்டரில் நடந்த விழாவில் எட்டு படைப்பாளிகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் பிரிச்சு கொடுத்தோம். நியூஜெர்ஸி தமிழ் சங்கம் 2002-ல் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வசூலித்து கொடுத்தது. அதேமாதிரி கனடா சுயாதின திரைப்படச் சங்கம், லண்டன் விம்பம் அமைப்பு, சுவிட்சர்லாந்த் அஜீவன்னு தமிழ் குறும்பட - ஆவணப்படங்களை நாங்க கொண்டு சேர்த்த வெளிநாடுகள் நிறைய. ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ் சங்கம் ஒவ்வொரு வருஷமும் முப்பதாயிரம் ரூபாய் தமிழ் குறும்படங்களுக்கு கொடுத்திட்டு இருக்கு.
தமிழ்நாட்டை பொறுத்தவரை டான் போஸ்கோ கல்வி நிறுவனம் குறும்படங்களுக்கு சான்றிதழ் கொடுத்திட்டிருந்தது. அதே மாதிரி திருப்பூர் தமிழ் சங்கம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எல்லாம் சான்றிதழ் மட்டுமே கொடுத்திட்டிருந்தாங்க. நாங்க குறும்பட - ஆவணப்படங்களுக்கு பணம் பெற்றுத்தரத் தொடங்கிய பிறகு, அவங்களும் தவிர்க்க முடியாம சிறந்த குறும்பட - ஆவணப்படங்களுக்கு பணம் தர ஆரம்பிச்சாங்க.
ஆவணப்பட - குறும்படங்களுக்கு இந்திய அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறதா?
வருஷம் தோறும் நடக்கிற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆஃ்ப் இண்டியா (IFFOI) வில் ஆவணப்பட - குறும்படங்களுக்கு இரண்டு லட்சம் பரிசு கொடுக்கிறாங்க. இந்தியன் நியூஸ் ரீலும், MIFF-ம் இணைஞ்சு இரண்டு வருஷத்துக்கு ஒருதரம் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறாங்க. * நீங்களும் உங்க நண்பர்களும் ஆவணப்பட - குறும்படங்களுக்கென்றே சங்கம் தொடங்க என்ன காரணம்? ஆவணப்பட - குறும்பட இயக்கத்தை, அதன் செயல்பாடுகளை இன்னும் தீவிரமாக்க 2005-ல் தமிழ்நாடு ஆவணப்பட - குறும்பட படைப்பாளிகள் சங்கத்தை தொடங்கினோம். தமிழ் ஆவணப்பட - குறும்படங்களை முன்னெடுத்து செல்வதுடன், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதும் இந்த சங்கத்தின் முக்கியமான செயல்பாடா இருக்கு.
சமீபத்தில் கூட திருச்சியில் பயிற்சிப் பட்டறை நடத்தியிருக்கிங்க...
ஆமா. நிறைய பேருக்கு குறும்பட - ஆவணப்படங்களில் ஆர்வம் இருந்தாலும் முறையான பயிற்சி பலருக்கு இல்லை. ஆவணப்படம்ங்கிறது ரியாலிட்டியை அப்ஸர்வ் பண்றது. இதுல சிலநேரம் கமெண்ட்ரியும் சேர்க்கப்படலாம். குறும்படம்ங்கிறது கதையை அடிப்படையாகக் கொண்டது. குறும்படத்தை போல ஆவணப்படமும் ஒரு கலைப்படைப்புதான். யதார்த்தத்தை அப்படியே கேமராவில் பதிவு செய்தாலும், எதை பதிவு செய்வதுங்கிற நம்முடைய தேர்வும், எடிட்டிங்கும், அதில் சேர்க்கப்படுற கமெண்ட்ரியும் சேர்ந்து ஆவணப்படமும் தன்னளவில் ஒரு கலைப்படைப்பாகவே விளங்குகிறது.
பயிற்சிப் பட்டறையில் என்னென்ன கற்றுத் தர்றீங்க?
எடிட்டிங், கேமரா, ஒளிப்பதிவு மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களை செயல்முறை விளக்கமா சொல்லித் தர்றோம். முக்கியமான ஆவணப்படங்கள், குறும்படங்கள், முழுநீள திரைப்படங்களை திரையிட்டு அதுபற்றி விவாதம் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடுவாங்க. மாணவர்களை குழுக்களாகப் பிரிச்சு குறும்படம் எடுப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தர்றோம். முக்கியமா இந்தப் பட்டறைகளை சங்கம் ஒரு சர்வீஸாதான் செய்துகிட்டிருக்கு.
தமிழகத்தில் குறும்பட தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இன்றைய நிலை குறித்து சிறிது விளக்க முடியுமா?
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் நிறைய இடம் பெற்றிருக்கு. உதாரணமாக, 1935-ல் வெளியான 'போலி பாஞ்சாலி' ங்கிற படம். இந்தப் படத்துல புறாவேட்டை, அடங்காபிடாரினு வேறு வேறு தலைப்புகள்ல சின்னச் சின்ன கதைகளை குறும்படமா எடுத்து சேர்த்திருந்தாங்க. ஒரு வகையில நம்ம பஞ்சதந்திர கதைகள் மாதிரி. லாரல் ஹார்டி, சாப்ளின் பாதிப்பில் லாப்ஸ்டிக் காமெடி படங்களை முழுநீளப் படங்களை திரையிடும்போது பின்னிணைப்பா திரையிடுற வழக்கம் தமிழ்நாட்ல இருந்தது. மெயின் பிக்சருக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஜெமினி எடுத்த 'மதன காமராஜன்' படத்தில் 'புத்திமான் பலவானானான்'ங்கிற என்.எஸ்.கே.யின் காமெடி சித்திரம் பின்னிணைப்பா வரும். இதெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து நாம் உருவாக்கியவை. தனியாக குறும்படம்னு நாம் கவனம் செலுத்தத் தொடங்கியது சமீபத்துலதான். 1980-களில் சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் சில முயற்சிகள் செய்தாங்க. தமிழ் குறும்பட இயக்கத்துக்கான முதல் ஆக்கப்பூர்வமான பங்களிப்புனு எடிட்டர் லெனினோட 'நாக் - அவுட்' குறும்படத்தைச் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான 'நாக் - அவுட்' தமிழ் குறும்பட வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனை.
இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது எண்பது தொண்ணூறுகளில் குறும்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இது எதனால்? 2000-க்கு முன்னாடி நீங்க குறும்படங்களை பிலிமில் மட்டுமே எடுக்க முடியும். 3 நிமிஷ படமெடுக்க நீங்க 20,000 ரூபாய் செலவு பண்ணணும். டிஜிட்டல் தொழில்நுட்பம் செலவை ரொம்ப குறைச்சிடுச்சி. படம் எடுப்பதற்கான நடைமுறை சிக்கல்களும் டிஜிட்டலில் குறைவு. கல்வியில் சினிமா கூடாதுனு சிலர் சொல்லிகிட்டிருந்தாலும் விஸ்காம், மாஸ்காம், எலக்ட்ரானிக் மீடியானு தமிழ்நாட்ல 60-க்கு மேற்பட்ட கல்லூரிகளில் சினிமா நுழைச்சிருக்கு. இந்த மாணவர்கள் ப்ராஜக்ட் வொர்க்கிற்காக கண்டிப்பா ஒரு குறும்படம் எடுக்க வேண்டியிருக்கு. இதெல்லாம் தமிழ் குறும்பட இயக்கத்தை துரிதப்படுத்துன காரணிகள்னு சொல்லலாம்.
அதிகமான குறும்படங்கள் வெளிவரும்போது அதன் தரமும் பெரிய அளவில் கேள்விக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறதல்லவா?தவிர, எடுக்கிற படங்களுக்கெல்லாம் பரிசு வாங்கிக் கொடுக்கிறார்னு உங்கமேல ஒரு விமர்சனமும் இருக்கு.
உண்மையில் தமிழில் தயாராகிற பெரும்பான்மை குறும்படங்கள் காட்சியிலும், தரத்திலும் பலவீனமானவை. தரத்தைப் பொறுத்தவரை நீங்க சர்வதேச அளவுக்கு போக வேண்டாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் தயாராகிற படத்தோடு ஒப்பிடும்போது நாம பின்தங்கிதான் இருக்கோம். ஆனா, இந்த நிலைமை வேகமா மாறிட்டு வர்றதையும் ஒப்புக் கொண்டுதான் ஆகணும். அப்புறம் பரிசு விஷயம். இதுநாள் வரை யாரும் குறும்படங்களை வெளியிட ஒருகளம் இருப்பதையோ, அதுக்கு பரிசுகள் வழங்கப்படுறதையோ சொல்லாம மறைச்சுட்டாங்க. தவிர, குறும்பட இயக்கம் யாராலையும் கவனிக்கப்படாமலே இருந்தது. இப்படியொரு சூழலில் படைப்பாளிகளை பெரிய அளவில் ஊக்குவிப்பதும், பங்கு பெற வைப்பதும் அவசியமான செயல்பாடுனு நான் நினைக்கிறேன்.
ஆவணப்படங்களுக்கு வருவோம். தமிழின் முதல் ஆவணப்படம்னு எதைச் சொல்லலாம்?
ஒருவகையில், ஆவணப்படத்துலயிருந்துதான் சினிமாவே வந்ததுனு சொல்லலாம். முதல்ல எதை படமாக்கினாங்க? ஸ்டேஷன்ல ரயில் வந்து நிற்கிறது, விவசாயம் செய்யறது இந்த மாதிரி. யதார்த்தமான விஷயங்களை படம் பிடிப்பது. அதுக்குப் பிறகு கதை சார்ந்த திரைப்படங்கள் உருவாகுது.
தமிழைப் பொறுத்தவரை ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படம் முக்கியமானது. 1937 முதல் 1942 வரை செட்டியார் எடுத்த இந்தப்படமே இந்திய அளவிலும் முதல் முழுமையான ஆவணப்படம்னு சொல்லலாம். இந்தப் படத்துக்காக வெளிநாடுகள் போய் பல தலைவர்களைப் பார்த்து அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். இந்தப் படத்தோட ஆங்கில பிரதிதான் நம்மகிட்ட இருக்கு. தமிழ் மூலம் இதுவரை கிடைக்கலை. பிரன்சில் படித்த ஏ.வி. பதி 1937-ல் 'இந்தியன் பேந்தர்' ங்கிற ஆவணப்படம் எடுத்தார். ஜெர்மனை சேர்ந்த பால் சீசிஸ் என்பவர்தான் இந்தியாவில் ஆவணப்படம் உருவாக ஆரம்பகாலத்தில் காரணமாக இருந்திருக்கிறார். இவர் ஏ.வி. பதியோட நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தஞ்சாவூரில் நிறைய வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. அவங்க மூலமா புகைப்பட கலை தஞ்சாவூர்வாசிகளுக்கு பரிட்சயமாகியிருக்கு. அதில் முக்கியமானவர் ஆபிரஹாம் பண்டிதர். 1850-ல யிருந்து 1917 வரை இவர் பல்வேறு ஆவணப்படங்களை எடுத்திருக்கார். இவர் தன்னோட மகன் ஜோதிபாண்டியனை அப்போதே ஜெர்மனிக்கு கேமரா பற்றி படிக்க அனுப்பி வச்சிருக்கார். இவர்கிட்ட புகைப்பட கலையை கற்றுகிட்டவர் மருதப்ப மூப்பனார். இவர் விமானம் தரையிறங்குகிறதையெல்லாம் படமாக்கியிருக்கார். 1905-ல் டெல்லியில் 5-ம் ஜார்ஜ் மன்னனுக்கு விழா நடத்தியபோது அதை இவர் படமெடுத்திருக்கார். 1910-களில் சென்னை வேப்பேரியைச் சேர்ந்த ஜோசப்ங்கிறவர் கீரிப்பிள்ளை சண்டை மாதிரியான விஷயங்களை படமெடுத்து பணத்துக்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றிருக்கிறார். இவையெல்லாம் வாய்மொழி வரலாறாகதான் இருக்கு. ஆவணப்படங்கள் எதுவும் இப்போது நம்மகிட்ட இல்லை. ஏ.கே. செட்டியாரின் காந்தி பற்றிய படம்தான் நம்மிடம் இருக்கும் பழமையான முழுமையான ஆவணப்படம். * ஆவணப்படுத்துவது என்பது தமிழர்களிடம் அரிதாக காணப்படும் விஷயம். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். ஆவணப்பட விஷயங்களில் நாம் இழந்தவை பற்றி கூற முடியுமா? தமிழில் வண்ண திரைப்படம் 1956-ல் தான் அறிமுகமாகுது. அதுக்கு முன்பே வண்ணத்தில் ஆவணப்படம் எடுத்திருக்காங்க. நான் நண்பர் ஒருவரோட வீட்டுக்கு போனபோது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி நிறைய ஆவணங்கள் சேர்த்து வைத்திருந்தார். அதில் பர்மா விஜயம்ங்கிற பெயர்ல ஒரு படச்சுருள் இருந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பர்மா போனதை யாரோ படம் எடுத்திருக்காங்க. 1952-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம் வண்ணத்தில் இருந்தது. படம் நன்றாக இருந்தாலும் ஆடியோ நாசமாகியிருந்தது. ஒலி கிடையாது. அதேமாதிரி பெரியாரோட ஒருநாள் வாழ்க்கையை 'செம்மீன்' இயக்குனர் ராமு காரியத் ஆவணப்படமா எடுத்திருக்கார். ராமு காரியத் கேரளாவின் வைக்கத்தை சேர்ந்தவர். பெரியார் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியதால் பெரியார் மேல அவருக்கு ஓர் ஈடுபாடு. அந்த ஆவணப்படத்தை தேடி தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பல இடங்களுக்கு அலைஞ்சும் பலன் பூஜ்ஜியம் தான். படச்சுருள் எங்கே போனதுன்னே தெரியலை. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தன்னையே ஆவணப்படமா எடுத்திருக்கார். அவர் ஸ்டுடியோவுக்குள் நுழையுறது, வேலையாட்களுக்கு வேலையை பிரிச்சு கொடுப்பது, ஸ்டுடியோ லைட்ஸ் ஆன் செய்வதுனு அவரோட ஸ்டுடியோ வேலைகளை படமாக்கியிருக்கார். கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடை ஈழத்தைச் சேர்ந்த சுவாமி சேவியர் தனிநாயகம் அடிகள் படமெடுத்தார். இவையெல்லாம் இன்றைக்கு நம்ம கையில் இல்லை. நாம ஆவணப்படுத்தாமல் சரித்திரத்தில் நழுவவிட்டவை இவை. முழுநீள சினிமாவில் ஆவணப்படங்களை சேர்த்து திரையிடுற வழக்கம் முன்பு இருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸின் 'கஞ்சன்' படத்தில் காந்தி பழனி கோயிலுக்கு வந்ததை படமெடுத்து படத்தோடு இணைச்சு திரையிட்டாங்க. விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. மாநாடை படமெடுத்து, அதனை தான் பார்ப்பதுபோல் 'தங்கரத்னம்' படத்தில் எஸ்.எஸ். ஆர். பயன்படுத்தியிருப்பார்.
இவையெல்லாம் துண்டு துண்டாக ஆவணப்படங்களுக்குரிய இலக்கணங்கள் இல்லாமல் எடுத்தவை. செய்திப் படங்கள் என்ற அளவில் மட்டுமே இருக்கக் கூடிய இவற்றை ஆவணப்படுத்த வேண்டிய, பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?
இதுவரை நம்மிடம் இருப்பது எழுதப்பட்ட வரலாறு. இனி எழுதப்பட்ட வரலாற்றை விட விஷுவல் ஹிஸ்டரிதான் முக்கியத்துவம் பெறப் போகுது. எழுதப்பட்ட வரலாறில் அதை எழுதுகிறவர் தன்னிஷ்டப்படி வெட்டியும், ஒட்டியும், திரித்தும் எழுத முடியும். எதிர்கால சந்ததியால் அதை கண்டு பிடிக்க முடியாது அல்லது கண்டு பிடிக்கிறது சிரமம். ஆனால், விஷுவல் ஹிஸ்டரியில் அதை படமெடுப்பவர் தன்னிஷ்டப்படி எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. உதாரணமாக விருகம்பாக்கம் மாநாடு நடந்தபோது அந்த இடத்தில் நிறைய கட்டடங்கள் இருந்ததாக ஒருவர் எழுதினால் அது உண்மையா இல்லையாங்கிறதை தெரிஞ்சுக்கிறது கஷ்டம். ஆனால், விஷுவல் ஹிஸ்டரியில் அன்றைக்கு இருந்த விருகம்பாக்கத்தை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரொம்ப முக்கியமா இதுல ஜனநாயகம் இருக்கு. யார் வேண்டுமானாலும் ஆவணப்படம் எடுக்கலாம். ஒரு கிராமத்து இளைஞன்கூட தன்னைப் பற்றி தன்னோட கிராமம் பற்றி ஒரு படம் எடுக்கலாம். மொத்தத்தில் விஷுவல் ஹிஸ்டரிங்கிற ஆவணப்படங்களை பாதுகாப்பதுங்கிறது நம்மோட சரித்திரத்தை பாதுகாப்பது.
இந்த எண்ணம்தான் உங்களை தமிழ் ஆவணப்பட - குறும்பட வரலாற்றை சொல்லும் 'சொல்லப்படாத சினிமா' புத்தகத்தை எழுதத் தூண்டியதா?
ஆமாம். இது அரசாங்கமோ, பல்கலைக்கழகமோ செய்ய வேண்டிய வேலை. ஆனா, செய்யலை. என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தில் தமிழக ஆவணப்பட - குறும்பட தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றைப்பற்றி நான் விரிவாக எழுதிய புத்தகம்தான் சொல்லப்படாத சினிமா. இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இப்படியொரு புத்தகம் எழுதப்படலைனு நினைக்கிறேன்.
இந்தப் புத்தகம் எழுத இன்னொரு முக்கியமான காரணம், நாம ஆவணப்படுத்தாமல் விடுவதால், நம்முடைய சாதனைகள் மறைக்கப்படுது. வடக்கே உள்ளவங்களுக்கு அந்தப் புகழ் போய்ச் சேருது. உதாரணமா, ஏ.கே. செட்டியார் தன்னோட காந்தி ஆவணப்படத்தை 1942 லயே முடிச்சுட்டார். ஆனால், வரலாற்றை எழுதுற வடநாட்டுக்காரர்கள் அவர் 1947-ல் காந்தியை எடுத்ததா எழுதுறாங்க. இதனால் இந்தியாவில் முதல் ஆவணப்படத்தை எடுத்தவர்ங்கிற பெருமை அவருக்கு கிடைக்காம போகுது. வேறு ஆள்கள் எடுத்த ஆவணப்படங்களோட ஃபுட்டேஜை வச்சு புதுசா ஒரு ஆவணப்படம் எடுக்கிற போக்கு இங்க இருக்கு. பிரெஞ்சு இயக்குனர் கிரிஸ் மார்கர் இதில் பிரபலமானவர். இந்தப் போக்கை கண்டு பிடித்தவர்னு கிரிஸ் மார்கரை சொல்றாங்க. உண்மையில் வேறு ஆள்களோட ஆவணப்பட ஃபுட்டேஜை தன்னோட ஆவணப்படத்தில் முதலில் பயன்படுத்தியவர் நம்ம ஏ.கே. செட்டியார்தான். காந்தி ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியதை போலக் என்பவர் படமா எடுத்திருக்கார். இந்த ஆவணப்படத்தை தன்னோட காந்தி படத்துக்காக வாங்கி அதில் செட்டியார் இணைச்சிருக்கார். போலக் மாதிரி வேறு பலரிடமும் செட்டியார் படங்களை வாங்கி பயன்படுத்தியிருக்கார். இந்தியாவில் முதன்முதலில் பிலிம் சொஸைட்டி தொடங்கியது சத்யஜித்ரேனு வரலாறு எழுதுறவங்க சொல்றாங்க. ஆனா, அவருக்கு முன்பே 1937-ல் பிலிம் சொஸைட்டியை தமிழ்நாட்டில் ஏ.வி. பதி ஆரம்பிச்சிருக்கார். இந்த மறைக்கப்பட்ட விஷயங்களை ஆவணப்படுத்துவதும் நான் சொல்லப்படாத சினிமா எழுதுறதுக்கு முக்கிய காரணம்.
ஆவணப்படங்களின் நிலை இப்போது எப்படியிருக்கு?
பல சிறந்த ஆவணப் படங்களை தமிழ் படைப்பாளிகள் எடுத்திருக்காங்க. முக்கியமாக சொர்ணவேல். இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்குங்கிற அண்ணாமலையின் புத்தகத்தை படித்துவிட்டு இவர் எடுத்த INA ஆவணப்படம் முக்கியமானது. சுபாஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஆவணம் இந்த டாக்குமெண்ட்ரி. அருண்மொழியின் அரவாணிகள் பற்றிய 'செகண்ட் பெர்த்', 18 வயசு கல்லூரி மாணவி சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி பெண் சிசுக்கொலை பற்றி எடுத்த 'தளிர் ஒன்று சருகானது'. மாதவராஜின் சாலைப்பணியாளர்கள் குறித்த 'இரவுகள் உடையும்', கொக்கோ கோலா கம்பெனியால் காணாமல் போகும் நீர்வளம் பற்றிய 'மூழ்கும் நதி'னு சொல்லிகிட்டே போகலாம். இன்னொருபுறம் போலியான ஆவணப்படங்களும் எடுக்கப்படுது. இதுக்கு முக்கிய காரணம் NGO க்கள். சுனாமியின் போது ஆயிரம் கோடி அளவுக்கு பணம் இந்திய NGO க்கள் கைக்கு வந்ததாக கூறப்படுது. முன்பெல்லாம், உதவி செய்றமாதிரி புகைப்படம் எடுத்து பணம் தர்ற வெளிநாட்டு நபர்களுக்கு, அமைப்புகளுக்கு அனுப்பினால் போதும். இப்போ அவங்க, செய்யுற உதவிகளை டாக்குமெண்ட்ரியா எடுத்து அனுப்புங்கனு சொல்றாங்க. இதுக்காக போலியா ஆவணப்படங்கள் எடுக்கப்படுது.
ஆவணப்படங்களுக்கு கால அளவு இருக்கா?
குறும்படங்களுக்கு இருக்கு. ஒன்றிலிருந்து முப்பது நிமிஷங்களுக்குள்தான் குறும்படங்கள் இருக்கணும். குறும்படங்களுக்கென்றே இருக்கும் ஜெர்மனியின் ஓபர்ஹாஸன் திரைப்பட விழாவிலும் ஜப்பான் யம மோட்டா திரைப்பட விழாவிலும் இந்த கால அளவுதான் பின்பற்றப்படுது. முப்பது நிமிஷங்களுக்கு மேலிருக்கும் குறும்படங்களை இங்க அனுமதிக்கிறதில்லை. அமெரிக்கர்கள் மட்டும், முப்பது நிமிஷத்துக்கு மேலிருக்கும் குறும்படங்களுக்கு ஷார்ட் பியூச்சர்னு ஒரு பெயர் கொடுத்து, அதையும் குறும்பட வகையில் சேர்த்துக்கிறாங்க. ஆவணப்படங்களுக்கு கால அளவு கிடையாது. சிங்கத்துக்கும் காட்டு எருதுக்கும் நடக்கும் சண்டையொன்றை பார்த்திருக்கேன். இந்த ஆவணப்படம் 18 மணி நேரம் ஓடக்கூடியது.
இந்தியாவில் ஆவணப்படங்களுக்கு சென்ஸார் கெடுபிடிகள் உண்டா?
இந்தியாவில் தயாரான ஆவணப்படமாக இருந்தாலும் வெளிநாடுகள்ல திரையிடுறதா இருந்தால் சென்ஸார் கிடையாது. இந்தியன் பிலிம் பெஸ்டிவெல்லில் திரையிடுறதுனா சென்சார் செய்யப்படணும். இதை எதிர்த்து கிரிஷ் கர்னட், ஆனந்த பட்வர்தன் மாதிரியான படைப்பாளிகள் போராட்டம் நடத்தியிருக்காங்க. எமர்ஜென்ஸியின் போது நடந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பீகார் மூவ்மெண்டை ஆனந்த பட்வர்தன் 'வேவ்ஸ் ஆஃ்ப் ரெவலூஷன்' ங்கிற பெயர்ல ஆவணப்படமா எடுத்தார். அதை இந்தியாவில் திரையிட முடியாத நிலைமை. பிறகு கனடாவில் பிலிமை டெவலப் செய்து 1977-ல் கனடாவில் வெளியிட்டார். இவரது பாபர் மசூதி இடிப்பை பின்புலமாகக் கொண்ட 'ராம்கே நாம்' ஆவணப்படமும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தவரை அதை டி.டி. யில் ஒளிபரப்ப அவரால் முடியவில்லை.
ஆவணப்பட - குறும்பட இயக்கத்தை பொறுத்தவரை உங்களது லட்சியம் என்ன?
தமிழ் ஆவணப்பட - குறும்படங்களுக்கு தமிழக அரசு பரிசும் விருதும் வழங்க வேண்டும. ஆவணப்படங்களுக்கு தணிக்கை கூடாது. அது ஜனநாயகப் பண்பை சீர்குலைக்கும். இப்போதைகக்கு இந்த கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்குதான் முயற்சி எடுத்து வர்றோம்.
நேர்காணல் - ஜான் பாபுராஜ்
Tuesday, January 30, 2007
குரு
தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது.
குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்கிறார். அங்கு தனக்கு தடையாக இருக்கும் சட்டத்தையும், மனிதர்களையும் பணத்தால், அறிவால், பத்திரிகை பலத்தால் சாதகமாக வளைத்தும் உடைத்தும் தனது தொழிலதிபர் கனவை நனவாக்குகிறார். இதன் நடுவே குருபாயின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் பத்திரிகை ஆசிரியர் நானாஜி, குருபாய் தவறான வழியில் செல்கிறார் என தெரிந்ததும் அவருக்கு எதிராக தடயங்களை உருவாக்கி குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தை முடக்குகிறார். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் குருபாய், இறுதியில் தனது ஷேர் ஹோல்டர்களிடம், இந்தியாவிலேயே பெரிய தொழில் நிறுவனமாக நாம் இருந்தால் போதுமா? உலக அளவில் நம்பர் ஒன்றாக வேண்டாமா என கிளர்ச்சியூட்டும் கேள்வியை எழுப்புவதுடன் படம் முடிவடைகிறது.
மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தின் ஹீரோ வேலு நாயக்கரும் குருபாயை ஒத்தவர்தான். இருவருமே கிராமத்திலிருந்து மும்பை வந்தவர்கள். சட்டத்தை மீறியவர்கள். அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள். ஒரே அடிப்படை வித்தியாசம், வேலு நாயக்கரின் வாழ்க்கை குருபாயை போல அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. இன்னொரு வகையில் சொன்னால், வேலு நாயக்கரின் சட்டத்தை மீறிய செயல்கள் அனைத்தும் அவர் விரும்பாமலே சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்மீது திணித்தவை. மாறாக, குருபாய் செய்த சட்டமீறல்கள் அவரது லட்சிய கனவுக்காக அவரே நூறுசதவீத உடன்பாட்டுடன் மேற்கொண்டவை.
'நாயகன்' ஹீரோ தனது சட்டவிரோத நடவடிக்கைகளின் பயனாக தனது நண்பர்களை இழக்கிறார். மனைவி, மகனை பலி கொடுக்கிறார். மகள் பிரிந்து செல்கிறாள். நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் குற்றவுணர்வில் தடுமாறுகிறார். இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
இதே தவறுகளை-கொலை நீங்கலாக - செய்யும் குருபாய் எதையும் இழக்கவில்லை. முக்கியமாக, தனது தவறுகளை அவரால் நியாயப்படுத்த முடிகிறது; எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல்!
சட்டமீறல்களை செய்யும் வேலுநாயக்கருக்கு மரணமும் குருபாய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பும் கிடைக்க காரணமென்ன? அரசியல் சட்டமும், சமூக நீதியும் இருவர் காலங்களிலும் வேறு வேறா?
இல்லை! நாயக்கர் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் தாண்டி அரசும் சமூகமும் அவரை குற்றவாளியாகவே மதிப்பிடுகிறது. குருபாய் செய்யும் எல்லா தவறுகளையும் மீறி அவரை அரசும் சமூகமும் தொழிலதிபராக பார்க்கிறது. சரியாக சொல்வதென்றால், சாதாரண ஜனங்கள் சட்டத்தை மீறினால் மட்டுமே குற்றம். அதையே தொழிலதிபர்கள் செய்தால் அது வியாபார தந்திரம், தேசத்தை முன்னேற்றுவதற்காக செய்யப்படும் ஆக்கப்பூர்வமான செயல்! இந்திய சமூகத்தில் இந்த மோசமான பாரபட்சம் அனைத்து தளத்திலும் நீர்க்கமற கலந்திருக்கிறது.
ஒரு படைப்பாளியாக இந்த முரணை 'குரு' வில் மணிரத்னம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறாரா என்றால் இல்லை. இந்த முரணை நியாயப்படுத்தும் விதமாகவே உரையாடல், காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார்.
இதன் உச்சமாக குருபாயை இந்த தேசத்தின் உதாரண புருஷனாக முன்னிறுத்துகிறார். படத்தில் குருபாயின் சட்டமீறல்களை நீர்த்துப்போக செய்யும் விதமாக, அவரது குடும்ப விவகாரம் முன்னிறுத்தப்படுகிறது.
சுங்கத்துறையை ஏமாற்றி, உதிரிப் பாகங்கள் என்று சொல்லி ஆறுக்கு பதில் அதிக எண்ணிக்கையில் இயந்திரங்களை இறக்குமதி செய்கிறார் குருபாய். சாதாரண பார்வையாளர்களுக்கு இது உற்பத்தியை அதிகப்படுத்த செய்த செயல்தானே என்று தோன்றும். ஆனால், தவறு! இது பொருளாதார இன் பேலன்ஸை உருவாக்கக் கூடியது. கட்டுமர மீனவர்களுக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் கடலில் தங்கி மீன் பிடிக்க அரசு அனுமதித்துள்ளது. ஆனால், இயந்திர படகு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே அனுமதி. இயந்திர படகு கட்டுமர மீனவர்களின் வாழ்வை விழுங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.
ஒரு தனிநபர் மட்டும் குறிப்பிட்ட ஒரு பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்ய அனுமதிப்பது அதே தொழில் செய்யும் போட்டியாளர்களை, பொருளாதார பலம் குறைந்த சிறு முதலாளிகளை பாதிக்கும் செயல். உடலின் கை, கால்கள் சூம்பி கிடக்க தலைமட்டும் பொருத்துக் கொண்டே போனால் எப்படியிருக்கும்? குருபாய் செய்த மோசடி இத்தகையது.
சுங்க மோசடியை தொடர்ந்து குருபாயின் தொழிற்சாலைகள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. இந்த மோசடி வெளிவர காரணமாயிருந்த குருபாயின் நண்பர் குற்றவுணர்வால் கையை அறுத்து தற்கொலைக்கு முயல்கிறார்.
அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார் குருபாய். தனது தொழிற்சாலை மூடுவதற்கு காரணமான நண்பரை செல்லமாக கடிந்து விட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றதற்காக உணர்ச்சி வசப்படுகிறார். அப்பா இறந்தபோதே கண்ணீர் விடாத என்னை அழ வச்சிட்டியே என்கிறார். நானும் உன்கூட சாகட்டுமா என்று கண்கலங்குகிறார்.
இதன்மூலம், குருபாயின் மோசடி பார்வையாளனின் மனதிலிருந்து துடைத்தெறியப்பட்டு மிக நுட்பமாக அவரது நண்பன் மீதுள்ள பாசம் இயக்குனரால் பதிய வைக்கப்படுகிறது.
இப்படி குருபாயின் அனைத்து தவறுகளையும் அவரது குடும்பப் பாசம், நானாஜியின் ஊனமான பேத்தியிடம் காண்பிக்கும் அன்பு இவற்றால் பூசி மெழுகிறார் இயக்குனர்.
கதாபாத்திர படைப்பிலும் இது வெளிப்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்டுகிறார் குருபாய். இதற்கு தானுமொரு காரணமோ என்ற குற்றவுணர்வால் தடுமாறுகிறார், உண்மையை மட்டுமே தனது பத்திரிகையில் அனுமதிக்கும் நானாஜி. மாறாக, சட்டத்தை மீறும் குருபாய் எந்த குற்றவுணர்வாலும் பீடிக்கப்படுவதில்லை. கமிஷன் முன் தலைநிமிர்ந்து தனது தவறுகளை நியாயப்படுத்துகிறார்.
குருபாய் தனது எதிரிகளை ஒழிக்க ஊடகங்களை பயன்படுத்துகிறார். வேலுநாயக்கர் போன்று கத்தி கபடாக்களுடன் எதிரியை உடல்ரீதியாக இவர் காயப்படுத்துவதில்லை. நாயக்கரை ரவுடியாக பார்ப்பதற்கும், குருபாய் போன்ற தொழிலதிபர்களை மதிப்பதற்கும் இந்த வேறுபாடு ஒரு முக்கிய காரணம்.
ஆனால், உடல் ரீதியிலான வன்முறையை விட, ஊடக வன்முறை பயங்கரமானது. எப்படியெனில், உடல்ரீதியிலான வன்முறையில் வன்முறைக்கு உட்படுத்தப்படும் நபரும் அவரைச் சார்ந்தவர்களுமே பாதிக்கப்படுகிறார்கள்.
பத்திரிகை போன்ற ஊடகங்கள் வழியாக குருபாய் போன்றவர்கள் ஒரு பொய்யை பரப்புவது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமின்றி அதனை பார்க்கும், படிக்கும் லட்சக்கணக்கான ஜனங்களையும் முட்டாள்களாக்குகிறது. சிலரின் ஆதாயத்திற்காக ஷேர்களின் விலையை அதிகரிக்கிறது, குறைக்கிறது. மொத்தத்தில் போலியான ஒரு நிஜத்தை, உலகத்தை உருவாக்கி அதனை மற்றவர்கள் நம்பும்படி செய்கிறது.
படத்தின் எந்த இடத்திலும் இந்த ஊடக வன்முறை விமர்சிக்கப்படுவதில்லை. பதிலாக, இந்த வன்முறையை எதிர்க்கும் நானாஜி, தடுமாறுகிறார். இந்த வன்முறையை உருவாக்கும் குருபாய் உதாரண புருஷனாக்கப்படுகிறார்.
படத்தின் இறுதி காட்சியில் விசாரணை கமிஷன் முன் குருபாய் ஆவேசமாக பேசுகிறார். தான் செய்த அனைத்து சட்டமீறல்களும் தேசத்தை முன்னேற்ற செய்தவை என மறைமுகமாக குறிப்பிட்டு வாதிடுகிறார்.
அவரது பேச்சில் அடிக்கடி இடம் பெறும் இரு வார்த்தைகள், நீங்கள் மற்றும் நாங்கள்! இதில் நாங்கள் என்பது குருபாயும் அவரது சில ஆயிரம் (அல்லது சில லட்சம்) பங்குதாரர்களும். அப்படியானால் நீங்கள்? விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தில் பங்கு தாரராக இல்லாத மற்ற அனைவரும்! தனது தொழில் அபிவிருத்திக்கு தடையாக வருமான வரி, சுங்க இலாகா உள்ளிட்ட எந்த துறையின் சட்டங்களும் இருக்கலாகாது என்பது குருபாயின் வாதம். சுருக்கமாக, கட்டுப்பாடற்ற ஒரு ராஜாவாக தான் இருக்க வேண்டும்! இதை தடைசெய்யும் எதையும் குருபாய் பணிந்தோ துணிந்தோ உடைப்பார்.
அதுக்காக நீங்கள் கமிஷன் போட்டு அவரை கேள்வி கேட்கக் கூடாது. மாறாக கட்டுப்பாடற்ற சலுகைகளை அள்ளிவீச வேண்டும். ஏனெனில், குருபாய் பறக்க விரும்புகிறவர். தனது பங்குதாரர்களையும் சுமந்து கொண்டு உலகின் நம்பர் ஒன் எல்லையை நோக்கி அவர் பறந்தாக வேண்டும்!
சில தொழிலதிபர்களுக்காக இப்படி சட்டத்தை வளைப்பது சரியா? இது அவரைச் சாராத கோடிக்கணக்கான ஜனங்களை வஞ்சிப்பது ஆகாதா?
ஆகாது! குருபாயின் துரதிர்ஷ்டம், அவர் விசாராணை கமிஷன் முன் வாதாடியது 1980-களில். இதுவே 2006 என்றால், அதற்கு அவசியமே இருந்திருக்காது. அரசே அவர் கேட்டவற்றை 'சிறப்பு பொருளாதார மண்டலம்' என்ற பெயரில் சட்டம் போட்டு செயல்படுத்தி கொடுத்திருக்கும்.
இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய உள்ளன. இதற்கான பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அந்தந்த மாநில அரசுகளே கையகப்படுத்தி தரும் (உதாரணம், மே. வங்கத்தில் தொடங்கப்பட்டுள்ள சிங்குர் டாடா கார் தொழிற்சாலை). இந்த பொருளாதார மண்டலங்களால் அரசுக்கு வரி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்யும் எந்த தொழிலுக்கும் 15 வருடங்களுக்கு வரியே கிடையாது. சரி, நாமும் முதலீடு செய்யலாம் என்றால் அதற்கும் வழியில்லை.
குருபாய் போன்றவர்களுக்கே அதற்கு அனுமதி. காரணம், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் குறைந்தபட்ச முதலீடே 250 கோடிகள். சரி, அங்கு வேலை செய்யலாம் என்றால் அதுவும் சுலபமல்ல. வேலையில் சேர்ந்தபின் எட்டுமணி நேரம்தான் வேலை செய்வேன், போனஸ், பி.எப்., ஈ.எஸ்.ஐ., எல்லாம் வேண்டும் என்று கேட்க முடியாது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்திய அரசின் எந்த தொழிலாளர் சட்டங்களும் செல்லுபடியாகாது. ஏன், மாநில அரசுக்கே அங்கு அதிகாரம் செலுத்த முடியாது. மொத்தத்தில் 'பாரின் டெரிட்டரி' என்ற அந்தஸ்துடன் இவை செயல்படும் என இதற்கான ஆணை சொல்கிறது. சுருக்கமாக இதனை சுதந்திர இந்தியாவின் நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் எனலாம்.
ஒடுக்கப்பட்டவர்களை, விவசாயிகளை, சிறு தொழில் செய்பவர்களை சுரண்டி ஒரேயடியாக அழிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முன்னோடி குரலே குருபாய்.
குருபாயை நியாயப்படுத்தி அவரை தலைவராக காட்டியிருப்பதன் மூலம் ஊடக வன்முறை, தொழிலதிபர்கள் சட்டத்தை மீறுவதற்கான உரிமை போன்ற நாசக்கார நடைமுறைக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார் மணிரத்னம்.
படத்தை பொறுத்தவரை ஒரே ஆறுதல், படம் தமிழகத்தில் சரியாக போகவில்லை என்பது மட்டுமே!
ஆக்கம்
ஜான்பாபுராஜ்
Thursday, November 23, 2006
சினிமா விமர்சனம் - ஒர் ஆய்வு
கலைக்கும், கலை விமர்சனத்துக்குமான உறவை எளிமையாக, தடாகத்திலிருக்கும் தாமரை தண்டுடன் ஒப்பிடலாம். தடாகத்தின் நீரின் அளவே தாமரை தண்டும் இருக்கும். அதே போன்ற ஒரு கலையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அக்கலை மீதான விமர்சனம் திகழ்கிறது. தீர்க்கமான விமர்சனங்களுக்கு உள்படாத எந்தக் கலையும் சவலை குழந்தையாகவே பலவீனப்படும்.
சினிமா விமர்சனத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் முதல் படியையே தாண்டவில்லை. சினிமா தமிழில் அறிமுகமான காலத்தில் அறிவுஜீவிகள் அதனை எதிர்கொண்ட விதமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழில் சினிமா அறிமுகமான முப்பதுகளில் வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் சமூகம் பிளவுபட்டு கிடந்தது. ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் என்று பிரத்யோகமான கேளிக்கைகள் இருந்தன. சாதாரண குடியானவர்களின் கேளிக்கைகளை மேல்வர்க்கத்தினர் என்று தங்களை கூறிக்கொண்டவர்கள் கீழ்த்தரமானவையாக கருதி ஒதுக்கி வந்தனர்.
இந்த சூழலில் மேல் கீழ் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்கிற கேளிக்கை சாதனமாக சினிமா அறிமுகமானது. இதனை மேட்டுக் குடியினரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அன்றைய எழுத்தாளர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் இந்த மனநிலையே பிரதிபலித்தது. அவர்கள் சினிமா குறித்து எழுதுவதை அவமானமாக கருதி அதனை தவிர்த்து வந்தனர்.
அப்படியே எழுத முன்வந்தவர்களும் சினிமாவை எதிர்மறையாக தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். 1935-ல் கே.பி. சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான 'நந்தனார்' படத்திற்கு விமர்சனம் எழுதிய எழுத்தாளர் கல்கி, 'படத்தில் எருமை மாடும், பனை மரமும் நன்றாக நடித்திருக்கின்றன' என்று குறிப்பிட்டார். அன்றைய எழுத்தாளர்களின் சினிமா மீதான துவேஷத்திற்கு கல்கியின் எழுத்து ஒரு சான்று.
ஜி.என். பாலசுப்ரமணியம், ராஜரத்னம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், எம். எஸ். சுப்புலட்சுமி போன்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் சினிமாவில் நுழைந்தபிறகு எழுத்தாளர்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் பெரும் உற்சாகத்துடன் திரைப்பட இசை குறித்து எழுத முற்பட்டனர்.
காந்திய கருத்துக்களை தாங்கி சினிமாக்கள் வர ஆரம்பித்த பின் பத்திரிக்கைகள் சினிமாவுக்கென அதிக பக்கங்கள் ஒதுக்கின. மணிக்கொடி எழுத்தாளர்களான வ.ரா., பி.எஸ். ராமையா போன்றோர் சினிமா குறித்து எழுதத் தொடங்கினர்.
ஆயினும் இந்த விமர்சனங்கள் அனைத்தும், சினிமா ஒரு தனித்த கலை வடிவம், அதற்கென்று தனித்துவமான கலை அம்சம் உண்டு என்பதை உள்வாங்கிக் கொள்ளாமல் எழுதப்பட்டவை. திரைப்படத்தின் கதையை, அதன் உள்ளடக்கத்தை இலக்கிய ரீதியாக அணுகி எழுதப்பட்டது. காட்சி ஊடகமான சினிமாவை புரிந்து கொள்ளவும், அதன் அதிகபட்ச சாத்தியத்தை நோக்கி நகரவும் இந்த விமர்சனங்கள் துணைபுரியவில்லை.
75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த தருணத்திலும் சினிமா குறித்த தீவிரமான விமர்சனங்கள், கட்டுரைகள் காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது. 'நிழல்', 'கனவு', 'உயிர்மை' முதலான சிறு பத்திரிக்கைகளில் மட்டும் தீவிரமான கட்டுரைகள், நேர்காணல்கள் அவ்வப்போது வெளியாகின்றன. பெரும் பத்திரிக்கைகளில் வெளியாகும் விமர்சனங்கள் மேலோட்டமானவை; அபத்தம் நிறைந்தவை. சினிமா குறித்த புரிதலின்றியே அதிகமும் இப்பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் ஒரு புரொஜெக்டரை வைத்தே சினிமா காண்பிக்கப்பட்டது. இதனால் ஒரு ரீல் முடிந்து அடுத்த ரீலை மாற்றுவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. மேலும், தீப்பிடிக்க சாத்தியமுள்ள பிலிம் என்பதால் புரொஜெக்டர் சூடாகும் நேரங்களில் படம் நிறுத்தப்படும். இதன் காரணமாக ஒரு படத்திற்கு ஐந்து முதல் ஏழு இடைவேளைகள் வரை விடப்பட்டன.
இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. தொடர்ச்சியாக படத்தை திரையிடுவதில் உள்ள பழைய சிரமங்கள் களையப்பட்டுவிட்டன. இருந்தும் இடைவேளை என்பது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
மேலை நாடுகளில் இடைவேளை என்பது பெரும்பாலும் கிடையாது. முழுப்படமும் இடைவேளை இன்றியே காண்பிக்கப்படுகிறது. மாறாக, இந்தியாவில் நடைமுறை சிக்கல்களால் ஏற்பட்ட ஒரு பழக்கம் ஒரு விதியாகவே இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இடைவேளையை முன் வைத்தே திரைக்கதை உருவாக்கப்படுகிறது. திரைக்கதை குறித்து புத்தகம் எழுதும் எழுத்தாளர்களும் கதையின் எந்தப் பகுதியில் இடைவேளை வரவேண்டும், இடைவேளைக்குப் பிறகு படம் எப்படி வேகம் பிடிக்க வேண்டும் என இடைவேளையை முன்வைத்தே திரைக்கதையை விளக்க முற்படுகிறார்கள்.
இந்த அபத்தம் சினிமா விமர்சனத்திலும் பிரதிபலிப்பதை காணலாம். 'இடைவேளை வரை படம் சூப்பர், இடைவேளைக்குப் பிறகு சொதப்பல்' என இடைவேளை எனும் சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை வைத்து நாம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறோம். இந்தியா தவிர்த்த பிற உலகமொழி திரைப்படங்களை இப்படி இடைவேளையை வைத்து விமர்சிக்க இயலாது. ஹாலிவுட்டிலும் கூட இந்த அபத்தத்தை காண்பது அரிது.
இடைவேளையை மனதில் வைத்து திரைக்கதை அமைக்காததே இதற்கு காரணம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறும் தமிழ் படங்கள் இடைவேளை இன்றியே திரையிடப்படுகின்றன. இதனால் படத்தில் இடைவேளை ஏற்படுத்தும் 'ஜம்ப்' பை புரிந்து கொள்ள முடியாமல் பார்வையாளர்கள் தடுமாறுவது தொடர்கதையாகி வருகிறது.
இது போன்று சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவை சினிமாவில் விதிகளாக மாறுவதை முதலில் கண்டறிந்து களைய வேண்டும்.
சினிமாவுக்கான விமர்சன மொழி தமிழில் உருவாகாதது இன்னொரு குறை. சினிமாவுக்கான கலைச் சொற்கள் உருவாக்கப்படாததே இதற்கு காரணம். மான்டேஜ், ஃபேட் அவுட், ஃபேட் இன், டிஸ்ஸால்வ் என பிரெஞ்சு, ஆங்கில பதங்களையே இன்னும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றிற்கான தமிழ் கலைச் சொற்களை உருவாக்க வேண்டியது சினிமா விமர்சனத்தின் முதல் தேவை.
கலாச்சாரம் சார்ந்த பார்வைகளும் சினிமாவை பாதிக்கின்றன. தமிழகம் குடும்ப உறவுகளை பிரதானமாக கருதும் நாடு. குடும்பம் எனும் அமைப்பை பெரியார் தவிர்த்து தமிழகத்தில் யாரும் கேள்விக்குட்படுத்தியதில்லை. தவிர, அப்படி கேள்விக்குட்படுத்தும் நபரை எந்த கேள்வியும் கேட்காமல் ஒதுக்கிவிடும் மனோபாவம் கொண்ட சமூகம் நம்முடையது. இப்படி கேள்விக்குட்படுத்த முடியாத 'குடும்பம்' எனும் அமைப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது தமிழ் சினிமா.
ஒரு திரைப்படம் என்பது முதலில் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். தமிழர்களில் அனேகமாக அனைவருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மேலும், 'குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படங்களை மட்டுமே நான் எடுப்பேன்' என பெருமை பேசும் இயக்குனர்களும் இங்கு அதிகம்.
ஒரு வீட்டில் குடும்பமாக வசிப்பவர்களும் சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது தவிர்த்து அனேகமாக மற்ற அனைத்து வேலைகளையும் மறைவாக அல்லது தனியாகவே செய்கிறார்கள். பெரியவர்களுக்கு தெரியாமல் சிறுவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் பல இருக்கின்றன.
பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கு தெரியாமல் தனியாக செய்யக்கூடிய வேலைகள் நிறைய உண்டு. ( மறைவான, தனியான என்றவுடன் ஒழுக்கக்கேடான செயல்களாகத்தான் இருக்கும் என்று கருத வேண்டியதில்லை) வீட்டிற்கு வெளியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பலவற்றை நாம் வேறு நபர்களிடம் வெளிப்படுத்துவதில்லை. இப்படி குளிப்பது முதல் இரவு உறங்குவது வரை நாம் குடும்பமாக சேர்ந்து செய்யாத எத்தனையோ செயல்கள் இந்த உலகில் இருக்கின்றன.
நடைமுறை வாழ்க்கை இப்படியிருக்க வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறும் சினிமா மட்டும் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகப் பெரிய முரண். இப்படி கூறுவதன் பொருள், சினிமா என்பது குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாக இருக்கக்கூடாது என்பதல்ல அனைத்துப் படங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என்பதே. மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாக இருப்பதால் மட்டுமே ஒரு படம் சிறந்த படமாகிவிடாது. இதை புரிந்து கொள்ளாமல், அனைத்துப் படங்களும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும்படி இருக்க வேண்டும் என வாதிடுவதும் அதற்கு தகுந்தாற்போல் திரைக்கதை அமைப்பதும், 'குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்பதால் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள்' என விமர்சனம் எழுதுவதும் சினிமா எனும் கலையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கும் செயலே அன்றி வேறில்லை.
குடும்பம் அளவிற்கு தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டும் மற்றொரு விஷயம், யதார்த்தம். நல்ல சினிமா என்பதை யதார்த்தம் என்ற தராசில் வைத்தே எடை போடுகிறார்கள் நம் விமர்சகர்கள். உண்மையில் யதார்த்தம் என்பதே ஒரு கற்பிதம்; மாயை! சமீபத்தில் யதார்த்தத்திற்காக கொண்டாடப்பட்ட திரைப்படம் 'காதல்'. இந்தப் படத்தில் வரும் இளம் காதலர்கள் இணைய வேண்டும் என படம் பார்த்த அனைவருமே விரும்பினர். ஆனால், அப்படி விரும்பிய ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகள் மெக்கானிக் ஒருவனை காதலிப்பதை அனுமதிப்பாரா? இல்லை ஒரு அண்ணன் தனது தங்கை மெக்கானிக் ஒருவனை இழுத்துக் கொண்டு ஓடுவதை அனுமதிப்பானா? நிச்சயமாக மாட்டார்கள். ஆனால் 'காதல்' படத்தின் காதலர்கள் இணைய வேண்டும் என மனதார விரும்பியவர்கள் இவர்கள், திரையில் விரும்பிய ஒன்றை சொந்த வாழ்க்கையில் வெறுக்க என்ன காரணம்?
இரண்டரை மணி நேர படத்தில் மெக்கானிக்கிற்கும், மாணவிக்கும் உள்ள காதல் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கிறது. பல வருட காதலை இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பார்க்கும்போது உச்ச நிலைக்கு பார்வையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். காதலர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரார்த்திக்கிறார்கள். திரையில் அது சாத்தியமாகாமல் போகும்போது கண்ணீர் விடுகிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் காதல் இப்படி தொகுக்கப்படுவதில்லை. உடல் ரீதியிலான பிரச்சனைகள், பொருளாதார மற்றும் தொழில் பிரச்சனைகள் உள்பட பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளுக்கு நடுவில் பகுதியாக மட்டுமே காதல் வந்து போகிறது. திரைக்காதல் உருவாக்கும் மன எழுச்சி இதனால் நிஜத்தில் ஏற்படுவதில்லை.
திரையில் காதலர்கள் இணைய வேண்டும் என விரும்பியவர்கள் நிஜத்தில் அதை வெறுப்பதற்கு இதுவே காரணம். மேலும், மெக்கானிக்கின் காதலை தொகுத்தது போல் அவனது பொருளாதார, தொழில் நெருக்கடிளை தொகுத்து அதையும் ஒரு படமாக எடுக்க இயலும். ஆக, பன்முகத்தன்மை கொண்ட ஒருவரின் வாழ்க்கையில் காதல் எனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்து அளிப்பதை எப்படி யதார்த்தம் என கூற இயலும்?
மேலும், பள்ளிக்கு சீருடை அணிந்து செல்வது, திருமணத்திற்கு பட்டுச்சேலை அணிவது, நேர்முக தேர்வுக்கு டக்-இன் செய்வது, காலையில் டிபன், மதியம் என்றால் அரிசி சோறு சாப்பிடுவது என நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் அனைத்தும் நம் சுய விருப்பத்தில் செய்வதில்லை.
ஏற்கனவே யாரோ ஒருவர் அல்லது பலர் உருவாக்கி வைத்த நடைமுறையை பின்பற்றுகிறோம், அவ்வளவுதான்! சிஸ்டத்தை பின்பற்றுவதை யதார்த்தம் என்று எப்படி கூற முடியும்? ஆக, நிஜ வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் செயல்களை உண்மையாகவே விரும்பி இயல்பாக, அதாவது யதார்த்தமாக நூறு சதவீதம் சுயத்தன்மையுடன் செய்கிறோமா என்பதே கேள்விக்குறி! இதில் நிஜவாழ்க்கையின் ஏதேனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்தளிக்கும் சினிமாவை யதார்த்தம் என்ற பார்வையுடன் அணுகி விமர்சனம் செய்வது தவறாகவே அமையும்.
தமிழ் சினிமா விமர்சனத்தின் மற்றொரு பலவீனம், துறை சார்ந்த அறிவின்மை. திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என பெரும் துறைகளை உள்ளடக்கியது சினிமா. சினிமா விமர்சகர்கள் அனைவரும் இந்தத் துறைகள் குறித்த அடிப்படை அறிதல் கொண்டவர்களா என்றால், இல்லை! இதனால் மட்டையடியாக ஒளிப்பதிவு அபாரம் என்றோ படுமோசம் என்றோ ஒரே வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.
அத்துறையின் நுட்பங்களுக்குள் சென்று ஆராய்வதில்லை. இந்த பலவீனம் நிருபர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக இசையமைப்பாளரை பேட்டி காணச்செல்லும் நிருபர் இசை குறித்து, குறிப்பிட்ட இசையமைப்பாளரின் இசை பங்களிப்பு குறித்து சிறிதளவாவது அறிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. அதனால், இசைகுறித்து கேட்காமல், 'நீங்கள் இரவில் இசையமைத்து விட்டு எப்போது தூங்கச்செல்வீர்கள்?', 'ஒரு பாடல் ஹிட்டாகவில்லையென்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?' என இசைக்கு சம்பந்தமில்லாத சவசவ கேள்விகளால் பேட்டியை நிரப்புகிறார்கள். பிரபலங்களின் துறையைவிட அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் ஆர்வம் காட்டும் வாசகர்களும் இத்தகைய பேட்டி மற்றும் விமர்சனங்களால் திருப்தியடைந்து விடுகிறார்கள்.
இந்த சூழல் மாற்றமடைய பார்வையாளர்கள் தொடங்கி எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள், அரசு நிர்வாகம் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் தத்தமது பொறுப்பு உணர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியம். முக்கியமாக புகழுரைகள், ஜோடனைகள், பாடம் செய்யப்பட்ட பழைய விதிமுறைகள் தவிர்த்து, சினிமா என்பது தனித்த கலை வெளிப்பாடு என்ற புரிதலுடன் தீவிரமான விமர்சனங்கள் உருவாக வேண்டும். நல்ல சினிமா உருவாக இதுவே சரியான ஒரே வழி!
ஆக்கம் - ஜான் பாபுராஜ்