Tuesday, August 29, 2006

"பெரியார்"


லிபர்டி கிரியேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 'பெரியார்' திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் ஞானராஜ சேகரன். இவர் ஏற்கனவே 'மோகமுள்', 'பாரதி' திரைப்படங்களை இயக்கியவர். பாரதி என்ற கவிஞனின் தார்மீக எழுச்சி கொண்ட பிம்பத்தை திரையில் கொண்டு வந்ததும், பரவலான மக்களை 'பாரதி' திரைப்படம் சென்றடைந்ததும் தமிழ் சூழலில் 'பெரியார்' படம் குறித்த பிரத்யேக கவனத்தை உருவாக்கியிருக்கிறது. பெரியாரின் சீடராக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தும் திரைப்பட நடிகர் சத்யராஜ், பெரியார் வேடம் ஏற்றிருப்பதும், ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு 'பெரியார்' திரைப்படத்திற்கு 95 லட்சங்கள் மானியம் அளித்ததும் 'பெரியார்' படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

ரவுடி, தாதா படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் தமிழ் சூழலில் பாரதி, பெரியார் போன்ற நிஜக் கதாநாயகர்களின் படங்கள் வருவது ஆரோக்கியமானது என்கிறார் ஞானராஜ சேகரன். 'பாரதி' திரையிடலின்போது, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கிளம்பிய, "அடுத்து பெரியார் பற்றிய திரைப்படத்தை எடுங்கள்" என்ற கோரிக்கையே 'பெரியார்' படம் எடுக்க துவக்கப்புள்ளியாக இருந்தது என மேலும் இவர் கூறுகிறார்.

பெரியாரின் கதையை படமாக்குவது என்று தீர்மானமானதும் பெரியார் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் சேகரிக்கத் தொடங்கினார் ஞானராஜ சேகரன். இதற்கு இவருக்கான காலம், ஏறத்தாழ ஒரு வருடம்! பிறகு, படத்திற்கான திரைக்கதை. இதற்கு மூன்று வருடங்கள் செலவானது.

இந்த கால கட்டத்தில் பெரியார் திடலில் பேசிய சத்யராஜ், பெரியார் கதையை படமாக எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் என்று அறிவித்தார். "மேலும், சத்யராஜ் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறவர். பெரியாரின் தோற்றம் இயல்பாக சத்யராஜுக்கு பொருந்தியதால் அவரையே பெரியாராக நடிக்க வைப்பது என தீர்மானித்தேன்."
'பெரியார்' படத்தின் கதை 1900-ல் ஆரம்பமாகிறது. இளமைக்கால பெரியாரிலிருந்து அவரது இறப்புவரை தொடர்கிறது படம். பல்வேறு காலகட்டங்களை கடந்து கதை பயணிப்பதால் அதை வெளிப்படுத்தும் பத்து வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார் சத்யராஜ்.

காந்தி, ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, அம்பேத்கார் போன்றவர்களுடன் பெரியார் உரையாடும் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது. காசி சென்று மொட்டை போட்டது, ஈரோடு முனிசிபல் கவுன்சிலராக பணிபுரிந்தது, மனைவி நாகம்மையின் மறைவு, ஏதென்ஸ் சென்றிருந்தபோது சாக்ரடீஸின் சிலையின் முன்பு நின்று, அவரைப் போல தானுமொரு சமூக சீர்த்திருத்தவாதி என அறிவித்தது, வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் என பெரியார் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

கதை நிகழும் காலகட்டம் தார் ரோடும், மின்சாரமும் இல்லாத காலம். இதற்காக, மின்சார கம்பிகளை இலைதழைகளை கொண்டு மறைத்தும் தார் ரோட்டை மண்ணால் மூடியும் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், இசையை வித்யாசாகரும், பாடல்களை வைரமுத்துவும், கலையை ஜி.கே. யும் கவனிக்கின்றனர்.

பொறுப்புடனும் அதீத கவனத்துடனும் 'பெரியார்' திரைப்படம் உருவாகிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், இப்படம் உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் படக்குழு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் ஐயமுள்ளது.

காரைக்குடி, கொத்தமங்கலம், கானாடு காத்தான், வைக்கம், காசி முதலிய இடங்களுடன் ஏதென்ஸ், ஜெர்மனி, லண்டன், மாஸ்கோ, மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

உள்ளூரில் அன்றைய காலகட்டத்தை உருவாக்க மின்சார கம்பிகளை மறைத்தும் தார் ரோடுகளை மண்ணால் மூடியும் சமாளிக்க முடியும். வெளிநாடுகளில் இதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? இன்றுள்ள பிரமாண்ட கட்டிடங்களை மறைப்பதெப்படி? அன்றைய காலகட்டத்தை உருவாக்குவது எங்ஙனம்?

'பாரதி' திரைப்படம் தமிழ் சூழலில் கவனம் பெற முக்கிய காரணம் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே. தமிழ் சமூக மனதில் பதிவாகியிருந்த பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பாரதியின் பிம்பத்தை தனது அற்புதமான உடல்மொழியால் திரையில் உலவவிட்டார் ஷிண்டே. இவரது முகமும், உடல் மொழியும், மேனரிஸங்களும் தமிழ் பார்வையாளர்கள் அதுவரை அறியாதது. ஆகையால், சாயாஜி ஷிண்டேயின் நடிப்பில் அவர்கள் முழுக்க பாரதியையே கண்டனர்.

மாறாக, பெரியாராக நடிக்கும் சத்யராஜ் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சமூகத்துக்கு நன்கு பரிட்சயமானவர். அவரது முகமும், பேச்சும், பேச்சுத் தோரணையும், மேனரிஸங்களும், உடல்மொழியும் தமிழர்களுக்கு அணுக்கமானவை. பெரியார் வேடத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் சத்யராஜ் என்ற நடிகரே துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறார். இது பெரியார் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்றுவதற்கு மிகப் பெரிய தடை.

இந்த சவாலை ஞானராஜ சேகரனும், சத்யராஜும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? தனது அடையாளங்களை முற்றிலும் களைந்து, பெரியாரை பெரியாராக திரையில் வெளிப்படுத்த இயலுமா சத்யராஜால்?

பெரியர் பிரமாணர்களின் சாதி கட்டுமானத்தை எதிர்த்த அளவுக்கு மற்ற சாதி இந்துக்களின் ஆதிக்கதை எதிர்க்கவில்லை. குறிப்பாக தலித்துகளை கொடுமைப்படுத்திய பிராமணர் அல்லாத சாதியினரை விமர்சித்ததில்லை. ஆகவே, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற குரல்கள் பரவலாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. முக்கியமாக, அரசியல் விமர்சகரும், எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் இந்தக் கருத்தை தொடர்ந்து வலிவுறுத்தி வருகிறார். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் மீது துவேஷம் பாராட்டியதுடன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தான் நடத்தி வந்த இதழ்களில் எழுதியிருக்கிறார் பெரியார் என ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார்.

பெரியாரை விமர்சனத்துக்குட்படுத்தும் இந்தக் கருத்துக்களுக்கு ஆதாரமான பெரியாரின் செயல்பாடுகள் ஞானராஜ சேகரனின் 'பெரியார்' படத்தில் இடம் பெறுமா?

பாரதி கஞ்சா பழக்கத்திற்கு சிறிது காலம் பழகியிருந்தார் என்பது வரலாறு. 'பாரதி' படத்தில், "இந்தப் புதிய பழக்கம்வேறு என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது" என்று பாரதி கஞ்சா பழக்கத்தை மறைமுகமாக குறிப்பிடும் வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு வரி வசனத்திற்கே ஞானராஜ சேகரனை குறை கூறியவர்கள் ஏராளம். பாரதியின் கஞ்சா பழக்கத்தை காட்சியாக அமைக்காமல், ஒருவரி வசனமாக்கி பாரதியின் 'புனிதத்தை' காத்ததற்காக ஞானராஜ சேகரனை பாராட்டிய பத்திரிகைகளும் உண்டு. பாரதி கஞ்சா பிடித்தார் என்ற வரலாற்று உண்மையினால் பாரதியின் கவிதைகளின் வீரியம் குறைந்து விடப்போவதில்லை என்பதை உணராதவர்கள் இவர்கள். இந்த முன் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் எதுவும் 'பெரியார்' படத்தில் இடம்பெறாது என்பது திண்ணம்.

தனது கருத்துக்களுக்கு எதிரானவர்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொண்டவர் பெரியார். அவர்களை பேச அனுமதித்ததுடன், அவர்கள் பேச்சால் மனவருத்தம் அடைந்த தனது இயக்கத் தோழர்களை, "நாம் எத்தனை பேரின் மனம் புண்படும்படி பேசியிருக்கிறோம். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் வருத்தப்படக்கூடாது" என அறிவுரை கூறியவர் பெரியார்.

மேலும், "நான் சொல்கிறேன் என்பதற்காக ஒன்றை அப்படியே ஏற்றுக்கொண்டால் அது முட்டாள்த்தனம். நான் சொல்வது உனக்கு பொருந்துமா என்று உன் பகுத்தறிவை கொண்டு யோசித்து முடிவெடு. அதே போல இன்று பகுத்தறிவுக்கு உள்பட்டு இருப்பது நாளை அப்படி இல்லாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்." இப்படி பரந்த தளத்தில் தனது கருத்துக்களையே விமர்சனத்துக்கு உள்படுத்திய மாபெரும் சிந்தனையாளர் பெரியார். அவரது இயக்கமான திராவிடக் கழகத்தினர் இதே பரந்த மனப்பான்மை உடையவர்களா?

ஜெர்மனி சென்றபோது அங்குள்ள நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அதனை பத்திரிகைளில் பிரசுரிக்கவும் அனுமதித்தவர் பெரியார். ஆனால் தி.க.வினர்?

சமீபத்தில் புதுச்சேரி வந்த சமண திகம்பர சாதுக்களால் (திகம்பரர்கள் சமணத்தில் ஒரு பிரிவினர். கொல்லாமையை கடைப்பிடிப்பவர்கள். சிறு உயிர்களுக்கும் தீங்கிழைக்காதவர்கள். பற்றற்றவர்கள். அதன் அடையாளமாக ஆடைகளை துறந்து நிர்வாணமாக சஞ்சரிப்பவர்கள்.) தமிழ் கலாசாரம் கெட்டுவிட்டதாகக் கூறி, சாதுக்களை புதுச்சேரியை விட்டு துரத்தும்வரை போராட்டம் நடத்தியவர்களில் முன்னிலையில் நின்றவர்கள் தி.க.வினர்.

இந்த முரண், பெரியார் குறித்த விமர்சனத்தை, அவர் வாழ்வு குறித்த சில உண்மைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்வதற்கு தடையாக இருக்கக்கூடும். இதனை எப்படி கடக்கப் போகிறார் ஞானராஜ சேகரன்?

இந்திய தத்துவ மரபின் நீட்சி பெரியார்! பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருக்கொண்ட பொருள் முதல்வாதத்தை,வேதகாலத்திலேயே தங்கள் செயல்பாடுகளின் வழியாக வெளிப்படுத்தியவர்கள் சாவாகர்கள். வேதகால ஆரியர்களின் வைதீகங்களுக்கு எதிராக ஆன்மா, கடவுள், மறுபிறப்பு, சொர்க்கம் ஆகிய அனைத்தையும் மறுத்து, யாவும் ஜடப்பொருளே என நிறுவியவர்கள் சாவாகர்கள்.இவர்களுக்குப்பின் வந்த சாங்கிய தத்துவத்தை பின்பற்றியவர்களும், அவைதீகர்களான சமணர், பவுத்தர், தமிழக சித்தர்கள் என அனைவரும் சிறிதும் பெரிதுமாக சாவாகர்களின் கொள்கையையே பிரதிபலித்தனர்.

ஆனால், காலப்போக்கில் ஆதிசங்கரர் போன்றவர்களால் கடவுள், மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றை மறுதலித்த இந்த தத்துவங்களெல்லாம் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. நாகார்ஜூனர், திங்கநாதர் போன்ற ஆரியர்கள் பெளத்தத்தில் இணைந்து, புத்தரை பின்பற்றுகிறவர்களை ஹீனயானர்கள் என்று பின்னுக்கு தள்ளியதுடன், இயற்கை மற்றும் பவுதிக பொருள்கள் குறித்த அறிவுப்பூர்வமான அணுக்கொள்கையையும் மறுத்தனர். அதே நேரம் பௌத்தத்திற்குள்ளேயே மறுபிறப்பு, கடவுள் ஆகியவற்றை ஒத்துக்கொண்டு மஹாயானம் என்ற பிரிவை உருவாக்கியதுடன் பௌத்தத்தை பிளவுப்படுத்தி வைதீக வரைமுறைக்குள் கொண்டுவந்தனர்.

அவைதீக தத்துவமான சமணம் மற்றும் பௌத்தத்தின் கூறுகளை பெரியாரிடத்திலும் காணலாம். பல் துலக்குவது, குளிப்பது ஆகியவற்றில் பெரியார் காட்டிவந்த அலட்சியமும் ஜெர்மனியில் அவர் நிர்வாண கிளப்பில் உறுப்பினரானதும் சமண திகம்பரக் கூறாகவே கருதப்படுகிறது.

மேலும், 15-05-1957-ல் எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த புத்தர் விழாவில் தலைமையுரையாற்றியிருக்கிறார் பெரியார். ஈரோட்டில் புத்தர் மாநாடுகள் அவர் காலத்தில் நடத்தப்பட்டன. அண்ணாவுடன் சாரநாத்திலுள்ள புத்தர் கோட்டத்திற்கு சென்று வந்துள்ளார் பெரியார்.

இதற்கெல்லாம் மேலாக, புத்தருக்கும் அவர் கொள்கைகளுக்கும் ஏற்பட்ட நிலைமை நமக்கும் நம் இயக்கத்திற்கும் வரக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள் என தனது இயக்கத் தோழர்களை எச்சரித்தும் இருக்கிறார் பெரியார்.

சாங்கியம், பௌத்தம், சமணம், நியாயம், மீமாம்சம் போன்ற அவைதீக தத்துவங்கள் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போக, பெரியாரோ கடவுள் மறுப்புடன், பெண்ணடிமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என சமூக செயல்பாடுகளை இணைத்து வைதீகத்துக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக தி.க.வை கட்டியெழுப்பினார். தி.க.விலிருந்து பிரிந்தவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று திரிந்து போனாலும், வைதீகத்தால் தொடமுடியாத உக்கிரத்துடன்தான் இன்றும் இருக்கிறது பெரியாரின் கொள்கையும் அவரது இயக்கமும். அந்தவகையில் இந்திய தத்துவ மரபின் மிகப்பெரிய ஆளுமை பெரியார்.

பெரியாரின் இந்த சாராம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தால் மட்டுமே பெரியார் குறித்த எந்த திரைப்படமும் முழுமையடையும்!
ஆக்கம் : ஜான்பாபுராஜ்

Monday, August 21, 2006

திரவ வெடிகுண்டுகள்


சென்ற வாரத்தில் பிரிட்டனிலிருந்து கிளம்பும் பத்து அமெரிக்கா விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கும் செய்தி இங்கிலாந்தின் உளவுத்துறைக்கு கிடைத்ததை தொடர்ந்து உலகின் அனைத்து விமான நிலையங்களும் உஷார்ப்படுத்தப்பட்டன. விமான பயணிகள் தீவிரமான சோதனைக்கு உள்ளாயினர். சந்தேகப்படும்படியான நபர்கள் தாட்சயண்யமின்றி பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டனர். விமானங்கள் ரத்து, தாமதம், பதட்டம் என மூன்று நாள்களுக்கு தீவிரவாதிகள் குறித்து பயம் ஒரு புகையாக எங்கும் பரவியிருந்தது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு தீவிரவாதம் குறித்த அச்சம் உலக மக்களின் இரத்தத்தில் நிரந்தரமாக படிந்துவிட்டது. ஆபத்து குறித்த எச்சரிக்கைகளை அவர்கள் எப்போதும் எதிர்நோக்கியே உள்ளனர்.இருப்பினும் பிரிட்டன் விமான தகர்ப்பு குறித்த எச்சரிக்கை இதுவரை இல்லாத பீதியை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தியது. தகர்ப்பு சதியில் ஈடுபட்ட 24 தீவிரவாதிகள் கைதான பிறகும் அபாயம் குறித்த அச்சம் முழுமையாக விலகவில்லை என்றே சொல்ல வேண்டும்.
காரணம், தீவிரவாதிகள் விமானத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த திரவ வெடிகுண்டு! ஆர்.டி.எக்ஸ். போன்ற திட வெடிப் பொருள்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியவை. மோப்ப நாய்களின் மோப்ப சக்திக்கு உள்பட்டவை. விமான நிலையங்களில் உள்ள எக்ஸ்ரே கதிர் சோதனை கருவியிடமிருந்து தப்ப முடியாதவை.
ஆனால்,திரவ வெடிகுண்டுகள் மேலே சொன்ன அனைத்தையும் ஏமாற்றிவிடும் குணாதிசயங்கள் கொண்டவை. மோப்ப நாய்களுக்கு இவற்றை கண்டுபிடிக்கும் திறமை இன்னும் கூடிவரவில்லை. எக்ஸ்ரே சோதனை கருவி திரவ வடிவிலிருக்கும் வெடிகுண்டை மினரல் வாட்டர் என்றே காண்பிக்கும். இதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் விமான தகர்ப்பு சதி உலகநாடுகளை பெரும் அச்சத்தில் தள்ளியது.
இந்த இடத்தில் ஒரு அத்தியாவசிய இடைச்செருகல்.ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படிப்பட்ட வித்தியாச வெடிகுண்டுகள், நூதனமான கடத்தல்கள், கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த கதைகளை உருவாக்குவதற்கு என்றே தனியாக நிபுணர் குழு ஒன்று இயங்கி வருகிறது. 'தி டாவின்சி கோட்' படத்தின் கதையை எழுதிய டான் பிரவுன் பத்து வருடங்கள் பல உதவியாளர்களின் துணையுடன் இந்தக் கதைக்காக ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரமும்,பென்டகனும் தகர்க்கப்பட்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த பலருக்கு, ஹாலிவுட் திரைப்படத்தை பார்க்கும் மனோநிலையே ஏற்பட்டது. இது அப்போது அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் விவாதத்தை அமெரிக்காவிலும் அமெரிக்காவுக்கு வெளியேயும் ஏற்படுத்தியது. ஹாலிவுட் திரைப்படங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலாலும், இயற்கை சீற்றத்தாலும், வேற்று கிரகவாசிகளின் ஆக்ரமிப்பாலும் அந்நாடு முற்றிலும் அழிந்துவிடுவதாக ஒருமுறை அல்ல பலமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. 'வால்கனோ', 'டீப் இம்பாக்ட்', 'டெர்மினேட்டர்', 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்' உள்பட பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
திரைப்படங்களில் தத்ரூபமாக தங்கள் நாட்டின் அழிவை பலமுறை பார்த்தவர்கள் உண்மையான இரட்டை கோபுர தகர்ப்பை ஹாலிவுட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக நினைத்து ரசித்ததில் வியப்பொன்றுமில்லை! மேலும், இப்படிப்பட்ட படங்கள் நிஜமான அழிவின் போது மக்களிடையே அளவுக்கதிமான பயத்தை உருவாக்குகின்றன.
உதாரணமாக, மூன்று 6-கள் இணையும் தினத்தில் பிறக்கும் குழந்தை சாத்தானின் வடிவமாக இருக்கும், அக்குழந்தையால் இந்த உலகுக்கே ஆபத்து நேரும் என்ற கதையுடன் வெளிவந்த 'ஓமன்' திரைப்படம் உலகெங்கும் மூன்று 6-கள் குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியது. இந்த வருடம் ஜூன் ஆறாம் தேதி மூன்று 6-கள் ஒன்று சேர்வதால் (06-06-06)'ஓமன்' திரைப்படத்தில் வரும் அழிவுகள் பூமியில் நடக்கும் என பரவலாக ஒரு அச்சம் எழுந்தது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் திரவ வெடிகுண்டு குறித்த அச்சத்திற்கும் துவக்கப் புள்ளியாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்று இருக்கிறது.
1992-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான திரைப்படம் 'லைவ் வயர்.' (அமெரிக்க செனட்டர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.கொலைக்கான கருவியையே கண்டுபிடிக்க முடியாத நிலையில் விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என திணறுகிறது போலீஸ்.
இறுதியில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. வழக்கு விசாரணையில் அமர்த்துகிறது. இந்நேரம் முந்தைய வழக்கு விசாரணையின் தீர்ப்பை படிக்கும் நீதிபதி, தீர்ப்பை வாசிக்கும் முன் தண்ணீர் அருந்துகிறார். அருந்தி முடித்த சிறிது நேரத்தில் மரணமடைகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகே தீவிரவாதிகள் பயன்படுத்தும் கொலைக்கருவி எது என்பது தெரியவருகிறது.
நிறமற்ற சில குறிப்பிட்ட ரசாயனங்கள் குடலுக்குள் செல்லும்போது, அங்குள்ள ஜீரண அமிலங்களுடன் வேதிவினை புரிந்து சக்திவாய்ந்த வெடிபொருளை போல் குடலுக்குள்ளே அதிக வெப்பத்தையும் அழுத்தத்தையும் வெளிப்படுத்தி, பயங்கரமாக வெடித்து சிதறுகின்றன. கொலைக்கு பயன்படுத்தப்பட்டது திரவ வெடிகுண்டு என்பது தெரியவந்ததும்,வழக்கு விசாரணை துரிதமாகிறது. தீவிரவாதிகளும் பிடிபடுகிறார்கள். பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் னுயnலே டீ'சூநடை கேரக்டரில் நடித்த இப்படம் திரவ வெடிகுண்டு சாத்தியம்தானா என்ற கேள்வியை படம் வெளியானபோது ஏற்படுத்தியது.
ஆனால், திரவ வெடிகுண்டு சாத்தியம்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெளிநாடுகளில் விமான பயணங்களில் கையோடு மதுபாட்டில்களை எடுத்துச்சென்று அருந்துவது சகஜமான நடைமுறை.பெராக்சைடு வகை ரசாயனத்தை மது புட்டியில் அடைத்து எளிதாக விமானத்திற்குள் கொண்டு செல்லமுடியும். விமானம் டேக் ஆஃப் ஆகி, நடுவானில் பறக்கும்போது பிரத்யேக லேசர் ஒளிக்கீற்றை மதுபுட்டியில் உள்ள திரவ வெடிபொருளின் மீது பாய்ச்சி, அதனை வெடிக்க வைக்க முடியும். லேசர் ஒளிக்கீற்றை ஸ்பெஷல் கேமரா பிளாஸ் மூலம் உருவாக்க முடியும்.
சிறிய மதுபுட்டியில் உள்ள திரவம் பெரிய விமானத்தை தகர்க்கக்கூடிய சக்தி வாய்ந்ததா?
வெடிபொருள்கள் வெடிக்கும்போது வெளியிடப்படும் வெப்பத்தைவிட,அது காற்றில் ஏற்படுத்தும் அழுத்தமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடுவானில் பறக்கும் விமானத்தின் காற்றழுத்தத்தை இரண்டு சதவீதம் அதிகரித்தாலே, விமானம் சுக்குநூறாகிவிடும். இரண்டு சதவீத அழுத்தத்தை உருவாக்க குவார்ட்டர் பார்ட்டில் திரவவெடிகுண்டு தாராளம்! டாங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் சக்தி வாய்ந்த ஏவுகணையாக இரட்டை கோபுரங்களை தகர்த்ததை இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
நாம் மேலே பார்த்த அதிநவீன வெடிபொருள்களும், நூதன முறைகளும் ஹாலிவுட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாக்களில் தற்போது இடம் பெறுகின்றன. முக்கியமாக கேமரா பிளாஸ் மூலம் வெடிகுண்டை ஆக்டிவேட் செய்து வெடிக்க வைப்பது.
சில ஆண்டுகள் முன்பு மலையாளத்தில் வெளிவந்த படம் 'தி ட்ரூத்.' மம்முட்டி சி.பி.ஐ. ஆபிசராக நடித்தது. கேரளாவின் முதல் மந்திரி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடை வெடிகுண்டால் தகர்க்கப்படுகிறது. மேடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை, பத்திரிகையாளர் வரிசையில் இருக்கும் கொலையாளி பிரத்யேகமான கேமரா பிளாஷை பயன்படுத்தி வெடிக்க வைக்கிறான். இந்தியாவில் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இப்படியொரு நவீன முறையை கையாண்டதாக செய்தி இல்லை.
தீவிரவாதத்துக்கு முன்னோடியாக சில சினிமாக்கள் இருப்பதை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். சுவாரஸியத்திற்காக சேர்க்கப்படும் இத்தகைய காட்சிகள், நடைமுறையில் யதார்த்தம் ஆகும்போது மக்கள் அதிகபடியான பீதிக்குள்ளாகிறார்கள்.பொறுப்புள்ள இயக்குனர்கள் இதனை கவனத்தில் கொண்டு காட்சிகளை அமைப்பதே ஆரோக்கியமானது!
ஆக்கம் : ஜான்பாபுராஜ்

Thursday, August 17, 2006

திரைக்கதை

எதார்த்ததின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டு செல்லும் திரைகதையே சிறந்த திரைகதை.

Monday, August 14, 2006

புனித கொடி


இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் கண்டெடுத்த நம் நாட்டு தேசிய புனிதக்கொடி அரை கம்பத்தில் காத்துக்கொண்டு இருக்கிறது ஊழல் அரசியல்வாதியின் வருகைகாக!!! - யோகேஷ்

Friday, August 11, 2006

இயற்கையின் எல்லைகள்

சர்வ சக்தி கொண்ட எல்லைகள் தான் உன்னுடைய வாழ்க்கையத் தீர்மானிக்கின்றன. எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் தூக்க மட்டுமே முடியும். எவ்வளவு வேகமாகவும் உன்னால் கற்றுக் கொள்ள மட்டுமே முடியும். எவ்வளவு கடுமையாக் உன்னால் பாடுபட மட்டுமே முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் பயணப்பட மட்டுமே முடியும் - எ.பி.ஜெ. அப்துல் கலாம்

Thursday, August 10, 2006

ஆணும் பெண்ணும்

ஒரு ஆணும் பெண்ணும் சரீர உறவில் ஈடுபடுவதென்பது மனித வாழ்வில் நிகழ்கிற ஒரு சகஜமான் விஷயம், இதில் போய் தமிழர்கள் என்ன விசித்திரதைக் கண்டார்களோ தெரியவில்லை... அந்த சரீர சேர்க்கை சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான பாடல்கள் கவியரசர்களால் புனையப்பட்டு இசைஞனிகளால் இசையமைக்கப்பட்டு தமிழ் நாடெங்கும் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. - சாரு நிவேதிதா

Wednesday, August 09, 2006

ஈரானிய சினிமா


உலக திரைப்பட வரிசையில் மற்ற எல்லா நாடுகளையும் பின்தள்ளி முதலிடத்தை பிடிக்கிறது ஈரானிய சினிமா.

1979-ல் இங்கு நடந்த இஸ்லாமிய புரட்சி கடுமையான தணிக்கை முறையை அமுல்படுத்தி ஈரானிய சினிமா வளர்ச்சியை அடியோடு தகர்த்தது. 200- க்கு மேற்பட்ட திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டன. 1987-க்கு பிறகே ஈரானிய சினிமா சிறிது மூச்சுவிட அனுமதிக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பண்பாட்டுதுறை பல புதிய விதமுறைகளை உருவாக்கியது. இந்த சுதந்திர பின்னணியில் உருவான மசூத் கிமியாய், நாசர் டக்வாய், அப்பாஸ் கிராஸ்தமி ஆகிய இயக்குனர்கள் உலகத் தரமான திரைப்படங்களை இயக்கினர். இவர்களின் தாக்கத்தில் பல புதிய இளம் இயக்குனர்கள் ஈரானிய சினிமாவுக்கு வளம் சேர்த்தனர். அவர்களில் முக்கியமானவர் மஜித் மஜிதி.

எண்பதுகளில் ஈரானிய சினிமா சர்வதேச அளவில் எண்பதுக்கு மேற்பட்ட விருதுகளை வென்றது. இரண்டாயிரத்தில் இந்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்தது. ஈரானிய சினிமாவின் முக்கியத்துவத்தையும் உலகத் தரத்தையும் அறிந்துகொள்ள இந்த புள்ளிவிவரம், ஒரு சோறு பதம்!

1997-ல் வெளியான மஜித் மஜிதி இயக்கிய 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' ஈரானிய திரைப்படங்களின்பால் உலக திரைப்பட ஆர்வலர்களை ஈர்த்த படங்களில் முக்கியமானது.

அமெரிக்கா

இந்தியாவை அமெரிக்காவைப்போல் முன்னேற்ற வேண்டுமென்றால், முதலில் அமெரிக்க நிறுவனங்கள் நம்மை சுரண்டுவதை நிறுத்த வேண்டும். அடுத்து ஈராக், ஆப்கானில் அமெரிக்கா செய்துவரும் வேலையை பிறநாடுகள் மீது இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, அமெரிக்கர்களுக்கு வேலை செய்வதற்கென்றே பிள்ளைகளை பெற்று,அவர்களுக்கு பயிற்சியளித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களைப் போன்ற ஓர் இனத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
5 ஏக்கர் நிலத்தில் அல்லும் பகலும் பாடுபடும் விவசாயியின் ஆண்டு வருமானத்தை விட விவசாயத்திற்கு பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் வாட்ச்மேனின் ஆண்டு வருமானம் அதிகம். பொருளைவிட, பொருளை சந்தைப்படுத்துகிறவனுக்கு உள்ள மதிப்பு, அமெரிக்காவின் உலகமயமாக்கல் அளித்த கொடை.
இப்படி முன்னேற்றமும் வசதிகளும் உழைப்பவனுக்கு எதிர்திசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் உழைப்பை தூக்கிப் பிடிப்பதும் ஒரு மோசடியே!

Tuesday, August 08, 2006

எவை சமூகப்படங்கள்?


சமூகத்தை சலவை செய்யும் கருத்துக்கள் கொண்ட படம் - இது போன்ற விளம்பரங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தென்படுகின்றன. சேரனின் 'தேசிய கீதம்', 'வெற்றிக்கொடி கட்டு' தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீமானின் 'தம்பி' ஆகியவை இந்த வகையை சேர்ந்தவை. வி. சேகர் சமூக கருத்து தவிர்த்து வேறு ஒன்றையும் திரைப்படமாக்குவதில்லை என்ற கொள்கை வைத்திருப்பவர். வருடந்தோறும் சராசரியாக நூறு திரைப்படங்கள் தமிழில் வெளியானால் அதில் 25 சதவீதம் சமூக அவலங்களை குறிவைத்து எடுக்கப்படுபவை. பெண்களின் பிரச்சனையை அலசும் படம், சமூக சீர்த்திருத்த படம் என்று இவற்றிற்கு தனியாக விருதுகளும் வழங்கப்படுகிறது.

எழுபத்தைந்து வருட வைரவிழாவை கொண்டாடும் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமாவது சமூகத்தை தட்டி எழுப்பியிருக்கிறதா? எந்தவொரு அநியாயத்துக்கு ஏதிராகவாவது மக்களை திரட்டியிருக்கிறதா? மக்களின் நம்பிக்கை எனும் விழிகளை திறக்க உதவியிருக்கிறதா?

இல்லை! இங்கு சமூக சீர்த்திருத்தம் என்பது தனிமனிதன் (ஹீரோ) ஒட்டுமொத்த ஜனங்களை காப்பாற்றும் ஹீரோயிசம். நடைமுறைக்கு எந்த வகையிலும் சாத்தியப்படாதது. உதாரணமாக, சேரனின் 'தேசிய கீதம்' திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். கிராமங்களின் அடிப்படை வசதிகளுக்காக நான்கு இளைஞர்கள் முதல் மந்திரியை கடத்துகிறார்கள். எவ்வித வசதிகளும் அற்ற தங்களது எளிய வாழ்க்கையை அவருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். முதல் மந்திரியும் மனம் திருந்துகிறார்.

நடைமுறை வாழ்வில் முதல் மந்திரிக்கு எதிராக மிரட்டல் மெயில் அனுப்புகிறவர்கள் ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் முதல் மந்திரியை கடத்தினால்.....? வீரப்பன் நிலைமைதான் கடத்தியவர்களுக்கும். தவிர, ஆறரை கோடி ஜனங்களை கொண்ட ஒரு மாநிலத்தின் அடிப்படை வசதிகளை ஒரு தனிமனிதனால் - அது முதல் மந்திரியாகவே இருந்தாலும் பூர்த்தி செய்ய இயலாது. மந்திரி, அதிகாரிகள் தொடங்கி சாதாரண குடிமகன் வரை அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் இது.
'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் வெளிநாடு செல்லாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுகிறார்கள் இளைஞர்கள். எப்படி? வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு சிக்கன் சிக்ஸ்டிபைவ் விற்பனை செய்து!
சோற்றுக்கு வழியில்லாமல் எலியை தின்னும் விவசாயிகளுக்கு சிக்கன் விற்பனை செய்து பணக்காரர்கள் ஆவது நல்ல கற்பனைதான். ஆனால் இது வெறும் கற்பனை மட்டுமே! ஆகவேதான் இது போன்ற சமூக சீர்த்திருத்த படங்கள் சின்ன சலனத்தைகூட தமிழில் ஏற்படுத்துவது இல்லை.

அப்படியானால் உண்மையான சமூக அக்கறை படங்களில் எப்படி வெளிப்படவேண்டும்?
நமக்கு பாடம் நடத்துவதுபோல் வெளியாகியிருக்கிறது ஒரு ஆங்கில விவரணப்படம். பெயர் 'சூப்பர் சைஸ் மீ'. இயக்கியிருப்பவர் மார்கன் ஸ்பெர்லாக்.

திரைப்படம் இயக்குவது என்று முடிவானதும் மார்கனின் மனதில் மின்னலடித்தது, 'மெக் டொனால்ட்ஸ்'. அமெரிக்காவின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனம். கே.எஃப்.சி., வால் மார்ட், ஸ்டார் பக்ஸ், பெப்ஸி, கோக் போன்ற பிரமாண்ட துரித உணவு நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம்விட மிகப்பெரியது மெக் டொனால்ட்ஸ். அமெரிக்கர்களின் உணவு தேவையில் 43 சதவீதத்தை இந்நிறுவனமே பூர்த்தி செய்கிறது.

ஆறு கண்டங்களில் நூறு நாடுகளில் முப்பதாயிரம் ரெஸ்டாரண்டுகளுடன் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நிறுவனம் தினம் 46 மில்லியன் மக்களுக்கு உணவு விநியோகிக்கிறது.
இந்த இடத்தில் அமெரிக்க தயாரிப்புகள் குறித்து ஒரு இடைச்செருகல். மார்பழகை அதிகரிக்கும் சிலிக்கான் சிகிச்சை முதல், ஆண்மையை அதிகரிக்கும் வயாக்ரா வரை அமெரிக்க கண்டுபிடிப்புகள் அனைத்துமே சைடு எபெக்ட் எனும் சைத்தானையும் கூடவே கொண்டு வருபவை. மெக் டொனால்டின் துரித உணவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பேர் அதிக எடையுடன் இருக்கிறார்கள். இதில் 37 சதவீதத்தினர் குழந்தைகள் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கர்களின் அதிக உடல் எடைக்கும் நீரிழவு நோய்க்கும் இதய கோளாறுகளுக்கும் மெக் டொனால்டின் உணவுகள் முக்கிய காரணமாக உள்ளன என்பதை மருத்துவரீதியாக நிரூபிப்பதே மார்கன் திரைப்படத்தின் நோக்கம். இதற்காக தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்தார் மார்கன்.

தொடர்ந்து முப்பது தினங்கள் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ட்ஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே உண்பது மார்கனின் திட்டம். மெக் டொனால்ட்ஸ் மெனு கார்டில் உள்ள அனைத்து உணவுகளையும் முப்பது நாளில் ஒருமுறையாவது எடுத்துக்கொள்வது இன்னொரு விதிமுறை.

திட்டம் தயாரானதும் மருத்துவர்களிடம் தனது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்கிறார் மார்கன் ('சூப்பர் சைஸ் மீ' படத்தில் மார்கன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது முதல் அனைத்தும் இடம்பெறுகிறது; பின்னணியில் மார்கனின் உரையாடலுடன்.)

இந்த பரிசோதனைக்கு ஆறு வாரங்கள் முன்பே ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார் மார்கன். உடலில் ஆல்கஹால் கன்டென்ட் இல்லாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை. பரிசோதனைக்கு முன் இவரது உடல் எடை 84.1 மப.

மார்கன் மருத்துவர்களுடன் நடத்தும் நகைச்சுவையான பேச்சுடன் படம் நகர்கிறது. முப்பது தினங்கள் 20 நகரங்களில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் தினம் மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்கிறார்; குடிக்கிற தண்ணீர் உள்பட.
நாள்கள் நகர நகர,மார்கனின் உடல்நிலை மோசமாவதை பார்வையாளர்களால் உணரமுடிகிறது. ஐந்தாவது நாளே சோர்விலும், உடல் தளர்ச்சியிலும் பாதிக்கப்படுகிறார் மார்கன். உடல் எடையும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. அவரை பரிசோதிக்கும் மருத்துவர், மார்கனின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தி விடும்படியும் எச்சரிக்கிறார்.

ஆனாலும் தொடர்கிறது மார்கனின் பயணம். நடுநடுவே மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான உணவு தயாரிப்போர் ஆகியோருடன் உரையாடி அதையும் திரைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

முப்பது நாள் முடிவில் மார்கனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. இறுதிகட்ட சோதனையில் மார்கனின் உடல் எடை 11.25 மப அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. இதுபோல் சர்க்கரை அளவு 13.5 மபயும், கொழுப்பு 5.5 மபயும் அதிகரித்துள்ளது. மார்கனின் காதலி அலெக்ஸாண்ட்ரா ஜெபிசன், "மார்கன் மெக் டொனால்ட்ஸ் உணவை எடுத்துக்கொண்ட காலத்தில் அவர் மிகவும் சோர்ந்து போயிருப்பதை என்னால் உணரமுடிந்தது. அவரது செக்ஸ் செயல்பாடுகளையும் மெக் டொனால்ட்ஸ் பெருமளவு பாதித்தது" என்று சொல்லும்போது உறைந்து போகிறார்கள் பார்வையாளர்கள்.

நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும் படம் தொண்ணூறு நிமிடங்கள் ஓடி முடியும்போது அனைவரையும் அழுத்தமாக உலுக்கிவிடுகிறது. அமெரிக்காவில் இப்படம் ஏற்படுத்திய பாதிப்பு நம்பமுடியாதது. (காரணம், அமெரிக்காவில் துரித உணவை நம்பியிருப்பவர்களின் விழுக்காடு 40ரூ. இங்கு உணவுக்காக ஒரு மணி நேரத்திற்கு 10,000 பிராணிகள் கொல்லப்படுகின்றன.)
மார்கனின் 'சூப்பர் சைஸ் மீ' வெளியான இரண்டு மாதங்களுக்குள் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

* 'சூப்பர் சைஸ் மீ'யில் காட்டப்பட்ட மெக் டொனால்ட்ஸ் மெனுவில் உள்ள எந்த உணவும் இனி விநியோகிக்கப்பட மாட்டாது.

* ஆரோக்கியமான உணவு விஷயத்தில் தீவிர கவனம் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பு மார்கனின் படம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு என்பதில் சந்தேகமில்லை. மேலும், தனிமனித சுதந்திரம், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை பேணுவதில் அமெரிக்க சட்டங்கள் பிரசித்தி பெற்றவை. ஜனாதிபதியின் மகள்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு முன் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கறாரானவை. இப்படிப்பட்ட அமெரிக்காவில் அனைத்து உணவகங்களும் டயட்டீஷியன் ரிப்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் பல மெக் டொனால்ட்ஸ் உணவகங்களில் டயட்டீஷியன் ரிப்போர்ட் இல்லை என்பதை தனதுபடம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் மார்கன்.

மார்கனின் இந்த விவரணப்படம் அதன் உள்ளடக்கத்திற்காகவே பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. 'சூப்பல் சைஸ் மீ' வெளியாகி நீண்டகாலம் ஆனபிறகு அதை இங்கு குறிப்பிட இரண்டு காரணங்கள்:

* நடைமுறைக்கு சாத்தியப்படாத கருத்துக்களை திரைப்படங்களில் திணித்து, அவற்றை சமூக கருத்துள்ள படம் என்று இன்றும் நாம் கொண்டாடுவது.

* அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மெக் டொனால்ட்ஸ் விரைவில் தனது கிளையை இந்தியாவில் திறக்க இருப்பது.

பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்பும் கோக்கும், பெப்ஸியும் தாராளமாக இந்தியாவில் வாங்கக்கிடைக்கிறது. இவற்றை வாங்க இந்தியர்களுக்கு எந்த மனத்தடையும் இல்லை.

நமது இந்த 'விழிப்புணர்வின்' பின்னணியில் மெக் டொனால்ட்ஸின் வருகையை எண்ணிப் பார்க்கும்போது, அச்சமே மேலோங்குகிறது.
கூடவே, மார்கன் ஸ்பெர்லாக் போன்றவர்கள் நம்மிடையே இல்லையே என்ற ஏக்கமும்!
ஆக்கம் : ஜான் பாபுராஜ்.

மரணம்

"மரணம் இந்த இயற்கையை, இதன் அதிசயங்களை, இதன் தீராத அழகை முற்றிலுமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது." மேலும் மற்ற அனைத்து செயல்களையும்விட இயற்கையை கவனிப்பதே மகிழ்வானது.

சினிமா

விவரிக்க முடியாத தனித்துவமான வசீகரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது சினிமா


வளரும்......

Saturday, August 05, 2006

Vanakkam


Anaivarukkum Vanakkam