"பெரியார்"

ரவுடி, தாதா படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் தமிழ் சூழலில் பாரதி, பெரியார் போன்ற நிஜக் கதாநாயகர்களின் படங்கள் வருவது ஆரோக்கியமானது என்கிறார் ஞானராஜ சேகரன். 'பாரதி' திரையிடலின்போது, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கிளம்பிய, "அடுத்து பெரியார் பற்றிய திரைப்படத்தை எடுங்கள்" என்ற கோரிக்கையே 'பெரியார்' படம் எடுக்க துவக்கப்புள்ளியாக இருந்தது என மேலும் இவர் கூறுகிறார்.
பெரியாரின் கதையை படமாக்குவது என்று தீர்மானமானதும் பெரியார் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் சேகரிக்கத் தொடங்கினார் ஞானராஜ சேகரன். இதற்கு இவருக்கான காலம், ஏறத்தாழ ஒரு வருடம்! பிறகு, படத்திற்கான திரைக்கதை. இதற்கு மூன்று வருடங்கள் செலவானது.
இந்த கால கட்டத்தில் பெரியார் திடலில் பேசிய சத்யராஜ், பெரியார் கதையை படமாக எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் என்று அறிவித்தார். "மேலும், சத்யராஜ் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறவர். பெரியாரின் தோற்றம் இயல்பாக சத்யராஜுக்கு பொருந்தியதால் அவரையே பெரியாராக நடிக்க வைப்பது என தீர்மானித்தேன்."
'பெரியார்' படத்தின் கதை 1900-ல் ஆரம்பமாகிறது. இளமைக்கால பெரியாரிலிருந்து அவரது இறப்புவரை தொடர்கிறது படம். பல்வேறு காலகட்டங்களை கடந்து கதை பயணிப்பதால் அதை வெளிப்படுத்தும் பத்து வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார் சத்யராஜ்.
காந்தி, ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, அம்பேத்கார் போன்றவர்களுடன் பெரியார் உரையாடும் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது. காசி சென்று மொட்டை போட்டது, ஈரோடு முனிசிபல் கவுன்சிலராக பணிபுரிந்தது, மனைவி நாகம்மையின் மறைவு, ஏதென்ஸ் சென்றிருந்தபோது சாக்ரடீஸின் சிலையின் முன்பு நின்று, அவரைப் போல தானுமொரு சமூக சீர்த்திருத்தவாதி என அறிவித்தது, வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் என பெரியார் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன.
கதை நிகழும் காலகட்டம் தார் ரோடும், மின்சாரமும் இல்லாத காலம். இதற்காக, மின்சார கம்பிகளை இலைதழைகளை கொண்டு மறைத்தும் தார் ரோட்டை மண்ணால் மூடியும் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், இசையை வித்யாசாகரும், பாடல்களை வைரமுத்துவும், கலையை ஜி.கே. யும் கவனிக்கின்றனர்.
பொறுப்புடனும் அதீத கவனத்துடனும் 'பெரியார்' திரைப்படம் உருவாகிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், இப்படம் உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் படக்குழு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் ஐயமுள்ளது.
காரைக்குடி, கொத்தமங்கலம், கானாடு காத்தான், வைக்கம், காசி முதலிய இடங்களுடன் ஏதென்ஸ், ஜெர்மனி, லண்டன், மாஸ்கோ, மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
உள்ளூரில் அன்றைய காலகட்டத்தை உருவாக்க மின்சார கம்பிகளை மறைத்தும் தார் ரோடுகளை மண்ணால் மூடியும் சமாளிக்க முடியும். வெளிநாடுகளில் இதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? இன்றுள்ள பிரமாண்ட கட்டிடங்களை மறைப்பதெப்படி? அன்றைய காலகட்டத்தை உருவாக்குவது எங்ஙனம்?
'பாரதி' திரைப்படம் தமிழ் சூழலில் கவனம் பெற முக்கிய காரணம் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே. தமிழ் சமூக மனதில் பதிவாகியிருந்த பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பாரதியின் பிம்பத்தை தனது அற்புதமான உடல்மொழியால் திரையில் உலவவிட்டார் ஷிண்டே. இவரது முகமும், உடல் மொழியும், மேனரிஸங்களும் தமிழ் பார்வையாளர்கள் அதுவரை அறியாதது. ஆகையால், சாயாஜி ஷிண்டேயின் நடிப்பில் அவர்கள் முழுக்க பாரதியையே கண்டனர்.
மாறாக, பெரியாராக நடிக்கும் சத்யராஜ் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சமூகத்துக்கு நன்கு பரிட்சயமானவர். அவரது முகமும், பேச்சும், பேச்சுத் தோரணையும், மேனரிஸங்களும், உடல்மொழியும் தமிழர்களுக்கு அணுக்கமானவை. பெரியார் வேடத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் சத்யராஜ் என்ற நடிகரே துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறார். இது பெரியார் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்றுவதற்கு மிகப் பெரிய தடை.
இந்த சவாலை ஞானராஜ சேகரனும், சத்யராஜும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? தனது அடையாளங்களை முற்றிலும் களைந்து, பெரியாரை பெரியாராக திரையில் வெளிப்படுத்த இயலுமா சத்யராஜால்?
பெரியர் பிரமாணர்களின் சாதி கட்டுமானத்தை எதிர்த்த அளவுக்கு மற்ற சாதி இந்துக்களின் ஆதிக்கதை எதிர்க்கவில்லை. குறிப்பாக தலித்துகளை கொடுமைப்படுத்திய பிராமணர் அல்லாத சாதியினரை விமர்சித்ததில்லை. ஆகவே, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற குரல்கள் பரவலாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. முக்கியமாக, அரசியல் விமர்சகரும், எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் இந்தக் கருத்தை தொடர்ந்து வலிவுறுத்தி வருகிறார். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் மீது துவேஷம் பாராட்டியதுடன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தான் நடத்தி வந்த இதழ்களில் எழுதியிருக்கிறார் பெரியார் என ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார்.
பெரியாரை விமர்சனத்துக்குட்படுத்தும் இந்தக் கருத்துக்களுக்கு ஆதாரமான பெரியாரின் செயல்பாடுகள் ஞானராஜ சேகரனின் 'பெரியார்' படத்தில் இடம் பெறுமா?
பாரதி கஞ்சா பழக்கத்திற்கு சிறிது காலம் பழகியிருந்தார் என்பது வரலாறு. 'பாரதி' படத்தில், "இந்தப் புதிய பழக்கம்வேறு என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது" என்று பாரதி கஞ்சா பழக்கத்தை மறைமுகமாக குறிப்பிடும் வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு வரி வசனத்திற்கே ஞானராஜ சேகரனை குறை கூறியவர்கள் ஏராளம். பாரதியின் கஞ்சா பழக்கத்தை காட்சியாக அமைக்காமல், ஒருவரி வசனமாக்கி பாரதியின் 'புனிதத்தை' காத்ததற்காக ஞானராஜ சேகரனை பாராட்டிய பத்திரிகைகளும் உண்டு. பாரதி கஞ்சா பிடித்தார் என்ற வரலாற்று உண்மையினால் பாரதியின் கவிதைகளின் வீரியம் குறைந்து விடப்போவதில்லை என்பதை உணராதவர்கள் இவர்கள். இந்த முன் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் எதுவும் 'பெரியார்' படத்தில் இடம்பெறாது என்பது திண்ணம்.
தனது கருத்துக்களுக்கு எதிரானவர்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொண்டவர் பெரியார். அவர்களை பேச அனுமதித்ததுடன், அவர்கள் பேச்சால் மனவருத்தம் அடைந்த தனது இயக்கத் தோழர்களை, "நாம் எத்தனை பேரின் மனம் புண்படும்படி பேசியிருக்கிறோம். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் வருத்தப்படக்கூடாது" என அறிவுரை கூறியவர் பெரியார்.
மேலும், "நான் சொல்கிறேன் என்பதற்காக ஒன்றை அப்படியே ஏற்றுக்கொண்டால் அது முட்டாள்த்தனம். நான் சொல்வது உனக்கு பொருந்துமா என்று உன் பகுத்தறிவை கொண்டு யோசித்து முடிவெடு. அதே போல இன்று பகுத்தறிவுக்கு உள்பட்டு இருப்பது நாளை அப்படி இல்லாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்." இப்படி பரந்த தளத்தில் தனது கருத்துக்களையே விமர்சனத்துக்கு உள்படுத்திய மாபெரும் சிந்தனையாளர் பெரியார். அவரது இயக்கமான திராவிடக் கழகத்தினர் இதே பரந்த மனப்பான்மை உடையவர்களா?
ஜெர்மனி சென்றபோது அங்குள்ள நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அதனை பத்திரிகைளில் பிரசுரிக்கவும் அனுமதித்தவர் பெரியார். ஆனால் தி.க.வினர்?
சமீபத்தில் புதுச்சேரி வந்த சமண திகம்பர சாதுக்களால் (திகம்பரர்கள் சமணத்தில் ஒரு பிரிவினர். கொல்லாமையை கடைப்பிடிப்பவர்கள். சிறு உயிர்களுக்கும் தீங்கிழைக்காதவர்கள். பற்றற்றவர்கள். அதன் அடையாளமாக ஆடைகளை துறந்து நிர்வாணமாக சஞ்சரிப்பவர்கள்.) தமிழ் கலாசாரம் கெட்டுவிட்டதாகக் கூறி, சாதுக்களை புதுச்சேரியை விட்டு துரத்தும்வரை போராட்டம் நடத்தியவர்களில் முன்னிலையில் நின்றவர்கள் தி.க.வினர்.
இந்த முரண், பெரியார் குறித்த விமர்சனத்தை, அவர் வாழ்வு குறித்த சில உண்மைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்வதற்கு தடையாக இருக்கக்கூடும். இதனை எப்படி கடக்கப் போகிறார் ஞானராஜ சேகரன்?
இந்திய தத்துவ மரபின் நீட்சி பெரியார்! பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருக்கொண்ட பொருள் முதல்வாதத்தை,வேதகாலத்திலேயே தங்கள் செயல்பாடுகளின் வழியாக வெளிப்படுத்தியவர்கள் சாவாகர்கள். வேதகால ஆரியர்களின் வைதீகங்களுக்கு எதிராக ஆன்மா, கடவுள், மறுபிறப்பு, சொர்க்கம் ஆகிய அனைத்தையும் மறுத்து, யாவும் ஜடப்பொருளே என நிறுவியவர்கள் சாவாகர்கள்.இவர்களுக்குப்பின் வந்த சாங்கிய தத்துவத்தை பின்பற்றியவர்களும், அவைதீகர்களான சமணர், பவுத்தர், தமிழக சித்தர்கள் என அனைவரும் சிறிதும் பெரிதுமாக சாவாகர்களின் கொள்கையையே பிரதிபலித்தனர்.
ஆனால், காலப்போக்கில் ஆதிசங்கரர் போன்றவர்களால் கடவுள், மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றை மறுதலித்த இந்த தத்துவங்களெல்லாம் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. நாகார்ஜூனர், திங்கநாதர் போன்ற ஆரியர்கள் பெளத்தத்தில் இணைந்து, புத்தரை பின்பற்றுகிறவர்களை ஹீனயானர்கள் என்று பின்னுக்கு தள்ளியதுடன், இயற்கை மற்றும் பவுதிக பொருள்கள் குறித்த அறிவுப்பூர்வமான அணுக்கொள்கையையும் மறுத்தனர். அதே நேரம் பௌத்தத்திற்குள்ளேயே மறுபிறப்பு, கடவுள் ஆகியவற்றை ஒத்துக்கொண்டு மஹாயானம் என்ற பிரிவை உருவாக்கியதுடன் பௌத்தத்தை பிளவுப்படுத்தி வைதீக வரைமுறைக்குள் கொண்டுவந்தனர்.
அவைதீக தத்துவமான சமணம் மற்றும் பௌத்தத்தின் கூறுகளை பெரியாரிடத்திலும் காணலாம். பல் துலக்குவது, குளிப்பது ஆகியவற்றில் பெரியார் காட்டிவந்த அலட்சியமும் ஜெர்மனியில் அவர் நிர்வாண கிளப்பில் உறுப்பினரானதும் சமண திகம்பரக் கூறாகவே கருதப்படுகிறது.
மேலும், 15-05-1957-ல் எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த புத்தர் விழாவில் தலைமையுரையாற்றியிருக்கிறார் பெரியார். ஈரோட்டில் புத்தர் மாநாடுகள் அவர் காலத்தில் நடத்தப்பட்டன. அண்ணாவுடன் சாரநாத்திலுள்ள புத்தர் கோட்டத்திற்கு சென்று வந்துள்ளார் பெரியார்.
இதற்கெல்லாம் மேலாக, புத்தருக்கும் அவர் கொள்கைகளுக்கும் ஏற்பட்ட நிலைமை நமக்கும் நம் இயக்கத்திற்கும் வரக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள் என தனது இயக்கத் தோழர்களை எச்சரித்தும் இருக்கிறார் பெரியார்.
சாங்கியம், பௌத்தம், சமணம், நியாயம், மீமாம்சம் போன்ற அவைதீக தத்துவங்கள் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போக, பெரியாரோ கடவுள் மறுப்புடன், பெண்ணடிமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என சமூக செயல்பாடுகளை இணைத்து வைதீகத்துக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக தி.க.வை கட்டியெழுப்பினார். தி.க.விலிருந்து பிரிந்தவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று திரிந்து போனாலும், வைதீகத்தால் தொடமுடியாத உக்கிரத்துடன்தான் இன்றும் இருக்கிறது பெரியாரின் கொள்கையும் அவரது இயக்கமும். அந்தவகையில் இந்திய தத்துவ மரபின் மிகப்பெரிய ஆளுமை பெரியார்.
பெரியாரின் இந்த சாராம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தால் மட்டுமே பெரியார் குறித்த எந்த திரைப்படமும் முழுமையடையும்!